காற்று மாசிலிருந்து சென்னை மக்களைக் காப்பதற்கான வழி: புதிய ஆய்வறிக்கை சொல்வது என்ன?

By செய்திப்பிரிவு

காற்று மாசால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுப்பதிலும், செலவினங்களைக் குறைப்பதிலும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் அனல்மின் நிலையங்களை மூடுவது எந்த அளவுக்குப் பலனளிக்கும் என்பது, 'சி 40 நகரங்கள்' அமைப்பு மேற்கொண்ட ஒரு புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக, 'சி 40 நகரங்கள்' (C 40 நகரங்கள்) இன்று (செப். 29) வெளியிட்ட ஆய்வறிக்கையின் சாராம்சம்:

"அனல்மின் நிலையங்களால் ஏற்படும் காற்று மாசு சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களின் உடல்நலத்தில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக, C 40 நகரங்கள் அமைப்பு வெளியிட்டுள்ள 'Coal-free cities: the health and economic case for a clean energy revolution' அறிக்கை எச்சரித்துள்ளது.

இந்தியாவில் அனல்மின் நிலைய உற்பத்தித் திறனை 64 ஜிகா வாட்டாக (GW) அதிகரிப்பதற்காகப் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால், சென்னையில் மட்டும் அனல்மின் நிலையக் காற்று மாசின் விளைவாக ஏற்படும் வருடாந்திர உயிரிழப்புகள் தற்போதைய நிலையை விட இருமடங்காக அதிகரிக்கும் என்றும், அடுத்த 10 ஆண்டுகளில், தங்கள் சாராசரி ஆயுட்காலத்துக்குக் குறைவாக உயிரிழப்போரின் எண்ணிக்கை தற்போதைய நிலையை விட 60% அதிகரிக்கும் எனவும் C40 அறிக்கை கூறியுள்ளது.

பெரிய நகரங்களும், அரசுகளும் அனல் மின் உற்பத்தி நிலையங்களில் முதலீடு செய்வதற்கு பதிலாக புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியில் முதலீடு செய்வது வர்த்தக ரீதியிலும் சரி, தொழிலாளர்களின் உடல்நலம் சார்ந்தும் சரி, நன்மை விளைவிக்கக் கூடியதாக இருக்கும்.

ஒருவேளை புதிய அனல்மின் திட்டங்களைச் செயல்படுத்தினால் உடல் நலக்குறைவால் எடுத்துக்கொள்ளப்படும் விடுப்பு நாட்கள் 2030ஆம் ஆண்டில் சென்னையில் மட்டும் 22 லட்சம் நாட்களாக இருக்கும் என இந்த அறிக்கை எச்சரிக்கிறது.

புதுப்பிக்கத்தக்க மின் சக்திக்கு மாறுவது, சென்னையில் மலிவான விலையில் மின்சாரம் விநியோகம் செய்ய வழி வகுப்பதோடு மட்டுமல்லாமல், சென்னையைச் சுற்றி மட்டும் 2020-2030 ஆண்டு காலகட்டத்தில் 1,40,000 புதிய வேலைவாய்ப்புகளை மின் உற்பத்தி, உபகரணங்களைப் பொருத்துதல் போன்ற துறைகளில் உருவாக்கும் எனவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நிலக்கரியால் ஏற்படும் காற்று மாசுபாட்டின் காரணமாக, பிற சி40 நகரங்களை விடவும் சென்னை நகர மக்களின் உடல்நலன் மோசமான பாதிப்பைச் சந்தித்துள்ளது. இந்தியாவில் அனல்மின் நிலையத்தால் உற்பத்தி செய்யப்படும் மின் உற்பத்தியில் 11% நகர்ப்புறத்திலிருந்து 500 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள்ளாக உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

நிலக்கரியை எரித்து மின் உற்பத்தி செய்யப்படும் அனல்மின் நிலையத்திலிருந்து வெளியாகும் காற்று மாசுபாடு நீண்ட தொலைவுக்குப் பயணிக்கக் கூடியது என்பதாலும், அதனால் ஏற்படும் தாக்கத்தின் அதிகம் என்பதாலும் அனைவருக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. குறிப்பாக, விளிம்பு நிலையில் வசிக்கும் இளைஞர்கள், முதியோர், கருவுற்ற பெண்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

'சென்னையில் உள்ள காற்று மாசுபாடு (pm 2.5யின் வருடாந்திர அளவு) உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதலைவிட நான்கு மடங்கும், தேசிய வழிகாட்டுதலைவிட சற்று அதிகமாகவும் உள்ளது. தேசிய அளவிலான தற்போதைய திட்டங்களின் படி 2020 - 2030ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் அனல்மின் நிலையங்களை 20 விழுக்காடாகக் குறைக்க வேண்டும்.

மாறாக, இந்தியாவின் காலநிலை மற்றும் காற்றுத் தர இலக்குகளைப் புறந்தள்ளி 28% அதிகமாக விரிவாக்கம் செய்வதால், சென்னை நகர மக்களின் உடல்நலன் பாதிக்கப்படுவதோடு, வாழ்வாதாரத்துக்கும் அச்சுறுத்தல் ஏற்படும். மேலும், தேசிய அளவிலான தற்போதைய திட்டங்களால், சென்னை நகரத்தில் அனல்மின் நிலையக் காற்று மாசுபாடு காரணமாக ஏற்படும் வருடாந்திர மரணங்களின் எண்ணிக்கையானது இரண்டு மடங்குக்கும் அதிகமாக அதிகரிக்கக்கூடும்' என்கிறார், சி 40 அமைப்பின் அறிவுசார் மற்றும் ஆய்வு பிரிவின் தலைவரான முனைவர் ரேச்சல் ஹக்ஸ்லீ.

''அனல்மின் நிலையங்களை அதன் காலக்கெடு முடிவதற்கு முன்பாகவே, மூடுவது குறித்தும் அதன் ஒரு பகுதியாக மாசுபாடற்ற மின் உற்பத்தியில் முதலீடு செய்வது குறித்தும் மத்திய, மாநில அரசுகள் கருத்தில் கொள்ளவேண்டும். மேலும், புதிய அனல் மின்நிலையங்களைக் கட்டக் கூடாது.

காற்றின் தரம் மற்றும் காலநிலைக் கொள்கைகளை உறுதிப்படுத்த வேண்டும். இந்தப் பின்னணியில் பார்க்கும்போது, சி 40 அமைப்பின் இந்த ஆய்வு என்பது சென்னை சுற்றுவட்டாரப் பகுதிகள் விரைவிலேயே அனல்மின் நிலையத்தால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திலிருந்து வெளியேற வேண்டியதன் அவசியத்தை தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளது.

காற்று மாசுபாட்டைக் குறைப்பதனால் மனித உயிரைக் காக்கலாம். சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களைச் சுற்றி ஏற்படவுள்ள அனல்மின் நிலைய விரிவாக்கத்தின் காரணமாக, அடுத்த பத்து ஆண்டுகளில் 52,700 பேர் சராசரி ஆயுட்காலத்தை விட முன்கூட்டியே இறக்க நேரிடும். இதில், டெல்லி, மும்பை, பெங்களூருவை காட்டிலும் சென்னையில் உயிரிழப்புகள் கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகரிக்கும்.

இதுதவிர, 31,700 குறைப் பிரசவங்களும், பல்லாயிரம் பேருக்கு ஆஸ்துமாவினால் பாதிப்பும் ஏற்பட்டு கூட்டம் கூட்டமாக, மருத்துவமனைக்குச் செல்வது போன்ற சம்பவங்கள் நிகழக்கூடும் என, இந்த அறிக்கை எச்சரிக்கிறது. இது நோய்களின் விகிதத்தை அதிகரிக்கும் என்பதோடு, கூடுதலாக 5,700 குழந்தைகளுக்கு ஆஸ்துமாவையும் உண்டாக்கக்கூடும். அதுமட்டுமின்றி, அனல்மின் நிலைய விரிவாக்கத்தின் காரணமாக 6,820 பேர் ஆயுட்காலம் முழுதும் உடல்நலக் குறைபாட்டுடன் வாழ நேரிடும்.

பொருளாதார அடிப்படையிலான பலன்கள்:

காற்று மாசுபாட்டின் காரணமாக, தொழிலாளர் உற்பத்தித் திறன் குறைகிறது. மேலும், தொழிலாளர்கள் விடுப்பு எடுப்பது அதிகரிக்கிறது. இது நகர்ப்புற பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மேலும், காற்று மாசுபாடு பொருளாதார இழப்புக்கும், மருத்துவ செலவு அதிகரிப்புக்கும் வழிவகுக்கிறது.

இந்தியாவில் அதிக காற்று மாசுபாடு ஏற்படும் நாட்களில் தொழிலாளர் உற்பத்தித்திறன் 8-10% வரை குறையக்கூடுமென தொழில்முனைவோர்கள் கணித்துள்ளனர். தற்போது முன்மொழியப்பட்டுள்ள அனல்மின் விரிவாக்கம் தொடருமானால் சென்னையைச் சுற்றியுள்ள அனல்மின் நிலையங்களினால் ஏற்படும் காற்று மாசுபாட்டின் விளைவாக, ஏறத்தாழ 22 லட்சம் நாட்களுக்கு தொழிலாளர்கள் உடல்நலக் காரணங்களால் விடுப்பு எடுப்பார்கள்'' என்கிறது சி40 ஆய்வு.

மேலும், உடல்நலன் சார்ந்த செலவினங்கள் 2020-2030ஆம் ஆண்டு காலகட்டத்தில் 5.9 பில்லியன் அமெரிக்கா டாலர்களாக இருக்கும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பை உருவாக்குகிறது:

வரும் 2030ஆம் ஆண்டுக்குள் பழைய மற்றும் அதிகம் பயன்தராத அனல்மின் நிலையங்களை மூடிவிட்டு அதற்கு மாற்றாக சூரிய ஒளி மற்றும் காற்றாலை ஆற்றல்களில் முதலீடு செய்து சென்னைக்கு மின்சாரம் வழங்கினால் 1,40,000 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கலாம்.

நகர்ப்புறப் பகுதியில் வாழும் மக்களுக்குக் குறைந்த விலையில் மின்சாரம் வழங்கலாம். இந்தியாவில் புதிதாக அனல்மின் நிலையங்களை அமைப்பது, தற்போதுள்ள அனல்மின் நிலையங்களை இயக்குவது ஆகியவற்றைவிட சூரிய ஒளி ஆற்றல் மலிவானதாகும்.

காலநிலை மாற்றத்தைச் சமாளித்தல்:

இந்தியாவின் மொத்த வருடாந்திர பசுமை இல்ல (274MT CO2ன் உமிழ்வு) வாயுக்களின் உமிழ்வை ஆண்டுக்கு 11% ஆகக் குறைக்கலாம். இது 60 மில்லியன் வாகனங்கள் ஒரு ஆண்டுக்கு சாலையில் பயணிப்பதனால் ஏற்படும் உமிழ்வுக்கு ஈடானதாகும்.

'காற்று மாசைக் குறைக்க, மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்த, பாரிஸ் ஒப்பந்தத்தின் இலக்கை அடைய புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு மாறுவதுதான் ஒரே வழி' என்கிறார், 'சி 40'-யின் தெற்கு மற்றும் மேற்கு ஆசியாவின் மண்டல இயக்குநரான ஸ்ருதி நாராயணன்.

C 40 நகரங்கள், அமெரிக்காவின் மேரிலாந்து பல்கலைக்கழகம் மற்றும் க்ரியாவுடன் சேர்ந்து ஒவ்வொறு அனல் மின் நிலையத்திற்கும் தனித்தனியாக அது தொடங்கப்பட்ட நாள், தொழில்நுட்பம், அதலில் இருந்து ஈட்டப்படும் வருமானம், செயல்படும் கால அளவு, நீரிலும் காற்றிலும் அனல்மின் நிலையங்கள் ஏற்படுத்தும் தாக்கம் முதலிய காரணிகளை வைத்து ஒரு மாதிரியை உருவாக்கியுள்ளது.

அந்த மாடலின்படி 2021ஆம் ஆண்டில் நிலக்கரியின் பயன்பாடு இந்தியாவில் உச்சத்தைத் தொடும். 2021 - 2030 ஆண்டுகளில் நிலக்கரியின் பயன்பாடு 20% குறையும். 2045 ஆம் ஆண்டில் அனைத்து அனல்மின் நிலையங்களின் காலக்கெடு முடிகிறது. சென்னையைச் சுற்றி இருக்கும் 33 பழைய மற்றும் அதிக அளவு மாசை விளைவிக்கும் அனல்மின் நிலையங்களின் (3. 8 GW), காலக்கெடு இன்னும் இரண்டு ஆண்டுகளில் முடிகிறது, அதனைத் தொடர்ந்து 40 (5.4 GW) அனல்மின் நிலையங்களின் காலக்கெடு 2030-லும், 2045இல் மீதமுள்ள அனைத்து அனல்மின் நிலையங்களின் காலக்கெடுகளும் முடிகின்றன.

'இந்தியாவில் அனல்மின் விரிவாக்கத் திட்டங்களை உடனடியாக நிறுத்த வேண்டும். பழைய அனல்மின் நிலையங்களை மூடுவதற்கான இலக்குகளை தீர்மானித்துக் கொண்டிருக்கையில், மாநில மற்றும் தேசிய அரசுகள் புதிய அனல்மின் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யக்கூடாது' என்கிறார், C 40 நகரங்களின் மூத்த ஆராய்ச்சி மேலாளரான மார்க்ஸ் பேரன்சன்.

இந்த அறிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள 'பூவுலகின் நண்பர்கள்' அமைப்பைச் சேர்ந்த சுந்தரராஜன், 'காற்று மாசுபாடும் காலநிலை மாற்றமும் ஒன்றுக்கொன்று பெரிதும் தொடர்புடைய, ஒன்றாக அணுகப்பட வேண்டிய பிரச்சினைகள் ஆகும்.

சுந்தரராஜன், பூவுலகின் நண்பர்கள்: கோப்புப்படம்

குறிப்பாக, அதிக அளவிலான கார்பன் உமிழ்வுகள் வெளியேற முக்கியக் காரணமாய் இருப்பது நிலக்கரி சார்ந்த துறைகள்தான். தற்போது நாம் சந்தித்து வரும் 1°C உலக வெப்ப உயர்வில் நிலக்கரி 0.3°C அளவுக்குப் பங்களித்துள்ளது.

ஆனால், அரசு கொள்கைகளை வகுக்கும்போது காலநிலை மாற்றமும் காற்று மாசுபாடும் தனித்தனியே கையாளப்படுகின்றன. இந்த நிலை மாற வேண்டும். காற்று மாசையும் காலநிலை மாற்றத்தையும் ஒருசேரக் கட்டுப்படுத்த அனல்மின் நிலையங்களைப் படிப்படியாக மூடுவது என்ற கொள்கை நிலைப்பாட்டை அரசுகள் எடுக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்".

இவ்வாறு 'சி 40 நகரங்கள்' (C 40 நகரங்கள்) ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

முழு அறிக்கைக்கு: https://www.c40knowledgehub.org/s/article/Coal-free-cities-the-health-and-economic-case-for-a-clean-energy-revolution

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

46 secs ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்