தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த 4 மாத கால அவகாசம்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த 4 மாத கால அவகாசம் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. புதிதாகப் பிரிக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 22 ஆயிரத்து 581 கிராம ஊராட்சி வார்டுகள், 1381 ஒன்றிய வார்டுகள், 140 மாவட்ட ஊராட்சி வார்டுகள் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிகளுக்கு அக். 6, 9 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது.

38 லட்சம் வாக்காளர்கள்

கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வாக்காளர் பட்டியல் விவரங்களின்படி, இந்த மாவட்டங்களில் 37 லட்சத்து 77 ஆயிரத்து 525 ஆண் வாக்காளர்கள், 38 லட்சத்து 81 ஆயிரத்து 361 பெண் வாக்காளர்கள், 835 திருநங்கைகள் என, மொத்தம் 76 லட்சத்து 59 ஆயிரத்து 720 வாக்காளர்கள் உள்ளனர்.

புதிய மாநகராட்சி, நகராட்சிகள் அறிவிப்பு

இந்நிலையில், "தாம்பரம் நகராட்சியுடன் 15 ஊராட்சிகள், 5 பேரூராட்சிகள் மற்றும் 5 நகராட்சிகளை இணைத்து புதிய தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்படும். அவ்வாறு தரம் உயர்த்தப்படும் அல்லது விரிவாக்கம் செய்யப்படும்போது மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளுடன் இணைக்கப்படும் ஊராட்சிகளில் ஏற்கெனவே தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லது தேர்ந்தெடுக்கப்படுகின்ற உறுப்பினர்கள் தொடர்ந்து அவர்களது பதவிக் காலம் முடியும் வரை அப்பதவிகளிலேயே தொடர்வார்கள்.

தொடர்புடைய உள்ளாட்சி அமைப்பின் பதவிக் காலம் முடிவடையும்போது, இணைக்கப்படும் பகுதிகள் புதிதாக உருவாக்கப்படும் அல்லது விரிவாக்கம் செய்யப்படும் நகராட்சி அல்லது மாநகராட்சியின் முழுமையான ஆளுமைக்கு உட்படுத்தப்படும்" என்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அறிவித்திருந்தார்.

இந்நிலையில் தாம்பரம் மாநகராட்சியில் இணையும் கிராம ஊராட்சிப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள், இப்போது தேர்தல் நடத்தினால், எங்கள் பகுதி மாநகராட்சியுடன் இணைய 5 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். இப்போதே மாநகராட்சியுடன் இணைத்து, வார்டு மறுவரையறை செய்து, பின்னர் மாநகராட்சி தேர்தல் நடத்தினால் எங்கள் பகுதிக்கு மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி, அம்ரூத் திட்ட நிதி கிடைக்க வாய்ப்புள்ளது. எனவே எங்கள் ஊராட்சிகளுக்கு இப்போது தேர்தல் நடத்தக் கூடாது என வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும், காஞ்சிபுரம் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு நகராட்சி எல்லையும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதனால் இவ்விரு நகர்ப்புற உள்ளாட்சிகளுடன் ஏராளமான கிராம ஊராட்சிகள் இணையவுள்ளன. இப்பகுதி மக்களும் ஊரக உள்ளாட்சித் தேர்தலை இப்போது நடத்த எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே, தற்போதைய மாற்றங்களைக் கருத்தில் கொண்டு, தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த 7 மாத கால அவகாசம் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் மனுத்தாக்கல் செய்தது.

அதில், "அக்டோபர் மாதம் மழைக்காலம் என்பதால் தேர்தலை நடத்துவது சிரமம். கரோனா பாதிப்பில் தமிழகம் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் இருந்து வருகிறது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பெங்களூருவில் இருந்து வாங்குவதற்கு இரண்டரை மாத கால அவகாசம் தேவை. புதிதாக நிறைய நகராட்சிகள், மாநகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான பணிகள் அனைத்தும் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நிறைவடைந்துவிடும். தேர்தலை நடத்துவதற்குக் கால அவகாசம் கட்டாயம் வழங்க வேண்டும். 2022, ஏப்ரல் மாதம் வரை கால அவகாசம் வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த எவ்வளவு கால அவகாசம் தேவைப்படுகிறது என்பது குறித்து பதிலளிக்க மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், இது தொடர்பான வழக்கு இன்று (செப். 27) உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, "நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான பணிகள் அனைத்தும் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நிறைவடைந்துவிடும். தேர்தலை நடத்துவதற்குக் கால அவகாசம் கட்டாயம் வழங்க வேண்டும்" என தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்தது.

இதனையடுத்து, மாநிலத் தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையை ஏற்று உச்ச நீதிமன்றம் 4 மாத கால அவகாசம் வழங்கியது. தேர்தலைத் தள்ளிவைக்க தேர்தல் ஆணையம் சொல்லும் காரணங்கள் மிகவும் மோசமானதாக உள்ளன என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

27 mins ago

தமிழகம்

13 mins ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்