கரோனா பேரிடரின்போது நம்மைக் காத்து நின்ற செவிலியர்கள்; உடனடியாகப் பணி நிரந்தரம் செய்வதே அறம்: கமல்

By செய்திப்பிரிவு

கரோனா பேரிடரின்போது நம்மைக் காத்து நின்ற செவிலியர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்வதே அறம் என, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, கமல்ஹாசன் இன்று (செப். 27) வெளியிட்ட அறிக்கை:

"கரோனா முதல் அலையின்போது தமிழகத்தில் சுமார் 3,000 செவிலியர்கள் மருத்துவத் தேர்வாணையத்தால் தற்காலிகமாக நியமனம் செய்யப்பட்டனர். இவர்களுக்கு 12,000 முதல் 14,000 ரூபாய் வரை தொகுப்பூதியமாக வழங்கப்பட்டது. தங்குமிடமும் உணவும் அரசு சார்பில் அளிக்கப்பட்டன.

தொற்று உச்சம் கண்ட காலத்திலும் சரி, இப்போது நிலைமை ஓரளவு கட்டுக்குள் இருக்கும்போதும் சரி, தங்களது உயிரைப் பணயம் வைத்து அர்ப்பணிப்புடன் இந்தச் செவிலியர்கள் பணியாற்றினார்கள். இவர்களைத் தமிழகம் பூப்போட்டு போற்றியது நினைவிருக்கலாம். 'கருணையின் வடிவமாகவே செவிலியர்களைக் காண்கிறேன்' என்று இன்றைய முதல்வரும் மனம் நெகிழ்ந்து பாராட்டினார்.

சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாகப் பணி நிரந்தரமற்ற சூழலில், உரிய தங்கும் வசதிகள்கூட இல்லாத நிலைமையில் மருத்துவ சேவையாற்றி வருகிறார்கள் இந்தச் செவிலியர்கள். இன்றைய முதல்வர் அன்றைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, செவிலியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தினார்.

திமுக அரசு ஆட்சிக்கு வந்ததும் 1,212 ஒப்பந்த முறை செவிலியர்களைப் பணி நியமனம் செய்தது. மீதமுள்ள செவிலியர்களின் வாழ்வும் மலர்ந்துவிடும் எனும் நம்பிக்கை துளிர்த்தது. ஆனால், கடந்த இரண்டு மாதங்களில் தற்காலிகமாகப் பணியமர்த்தப்பட்ட ஆயிரக்கணக்கான செவிலியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். உணவு, தங்கும் வசதி ரத்து செய்யப்பட்டுள்ளன. அரசு அறிவித்த ஊக்கத்தொகையும் வழங்கப்படவில்லை. மீதமுள்ள செவிலியர்களின் பணி நிரந்தரம் எனும் கோரிக்கைக்கு அரசுத் தரப்பிலிருந்து பதில் இல்லை.

நல்லரசு என்பது, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி அளிக்க வேண்டுமே அல்லாது இருக்கும் வாய்ப்புகளை அழிக்கக் கூடாது. போதிய மருத்துவப் பணியாளர்கள் இல்லாமல் பெருந்தொற்றுக் காலத்தில் நம் மருத்துவக் கட்டமைப்பு அல்லாடியது நம் அனைவருக்குமே தெரியும்.

பெருந்தொற்றுப் பரவல் இன்னமும் நீங்கிவிடவும் இல்லை. இப்படிப்பட்ட சூழலில், தற்காலிக நியமனம் செய்யப்பட்ட செவிலியர்களை எதிர்காலம் குறித்த அச்சத்திலேயே வைத்திருப்பது சரியல்ல. கரோனா பேரிடரின்போது நம்மைக் காத்து நின்ற செவிலியர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்வதுதான் அறம்.

தற்காலிக நியமனம் செய்யப்பட்ட செவிலியர்களின் கோரிக்கைகளின் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதுடன், அவர்களைப் பணி நிரந்தரம் செய்யவும் ஆவன செய்யவேண்டும் எனத் தமிழக முதல்வரைக் கேட்டுக்கொள்கிறேன்".

இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்