கீழடியைத் தொடர்ந்து, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெம்பக்கோட்டை யிலும் அகழாய்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பால் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தற்போது கீழடி, சிவகலை, மயிலாடும் பாறை, கங்கைகொண்ட சோழ புரம் ஆகிய அகழாய்வுகளுடன் விருது நகர் மாவட்டம் வெம்பக்கோட்டை, திருநெல்வேலி துலுக்கர்பட்டி உள்ளிட்ட 7 இடங்களில் இந்த ஆண்டில் புதிதாக அகழாய்வு மேற்கொள்ளப்படும் என அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார். இதற்கு வரலாற்று ஆய்வாளர்கள் வரவேற்பு தெரிவித்துள் ளனர்.
இதுகுறித்து தொல்லியல் ஆய் வாளரும், ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரி வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியருமான முனைவர் போ.கந்தசாமி கூறியதாவது: வெம்பக்கோ்டையில் அதிக அளவிலான நுண்கற்கருவிகள், சங்ககால மட்பாண்ட ஓடுகள், பெருங்கற்கால பண்பாட்டு எச்சங்கள் மற்றும் செப்பேடு கண்டெடுக்கப்பட்டுள்ளன.
வைப்பாற்றின் வடக்கு கரையோரத்தில் அமைந்த இக்கிராமத்தில் 35 ஆண்டுகளுக்கு முன்பே தொல்லியல் சான்றுகள் தொல்லியல் அறிஞர் வேதாசலம் மற்றும் பாலச்சந்திரன் ஆகியோரால் கண்டெடுக்கப்பட்டன.
அர்ச்சுனா நதி, அனுமன் நதி, குண்டாறு, தேவியாறு, மற்றும் வைப்பாறு போன்ற ஆற்றங்கரையையொட்டி அமைந்துள்ள இடங்களில், கடைக்கற்காலத்தைச் சேர்ந்த நுண்கற்கருவிகள் இன்றளவும் தொடர்ந்து கிடைத்து வருகின்றன. கி.மு. 4000 முதல் கி.மு. 3000 வரையிலான காலகட்டத்தில் இப்பகுதியில் மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பதை தொல்லியல் சான்றுகள் நிரூபிக்கின்றன.
கிளிஞ்சல்களால் ஆன வளையல்கள் மற்றும் யானையின் கடைவாய்ப்பல் ஒன்று கல்லாக மாறி புதைபடிம வடிவில் இங்கு கிடைத்துள்ளது. 1863-ம் ஆண்டில் ராபர்ட் புரூஸ் பூட் என்ற வெளிநாட்டு அறிஞர், விருதுநகர் மாவட்டம் ஆவியூரில் பழைய கற்கால சில்லுக் கருவி ஒன்றை கண்டறிந்து வெளிப்படுத்தி உள்ளார்.
சங்க கால கருப்பு- சிவப்பு மண்பாண்ட ஓடுகள் மற்றும் இரும்பு பொருட்களும் வெம்பக்கோட்டையைச் சுற்றியுள்ள மேடான பகுதிகளின் மேற்பரப்பில் காணக் கிடைக்கின்றன. தமிழி (தமிழ் பிராமி) எழுத்துப் பொறிப்புடன் கூடிய மட்பாண்ட ஓடுகளும் கிடைத்து வருகின்றன. இதன் மூலம் இங்கு வாழ்ந்த தமிழ்ச் சமூக மக்கள் எழுத்தறிவு பெற்றவர்களாக இருந்துள்ளார்கள் என்பதை உணர முடிகிறது. ரோமானிய மட்பாண்ட ஓடுகளும் இங்கு அதிகமாக கிடைப்பதால் இங்குள்ள மக்கள் ரோமானியர்களோடு வாணிபத் தொடர்பு கொண்டிருந்ததையும் அறிய முடிகிறது.
மேலும், 1574-ம் ஆண்டில் எழுதப்பட்ட செப்பேடு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. அதில் மதுரைக்கு அருகிலுள்ள சிறுவாலை அச்சராமக் கவுண்டர் என்பவர், குண்டாற்றுக்கு தெற்கு, ராமேசுவரத்துக்கு மேற்கு தாமிரபரணிக்கு வடக்கு, தென்காசிக்கு கிழக்கு என இந்த நான்கு எல்லைக்குட்பட்ட பகுதியில் இருக்கும் கம்பளத்துக் கவுண்டர்களிடம் இனவரி வசூலிக்கும் உரிமைக்கு வீரப்ப நாயக்கரிடம் ஆணை பெற்று, அவ்வாணையை நிறைவேற்றி தென்காசி அதிவீரராம பாண்டிய மன்னனிடம் சென்று நடவடிக்கை மேற்கொள்ள வெண்பக்கோட்டையைச் சேர்ந்த புல்லா கவுண்டர் என்பவர் அதிவீரராம பாண்டியனின் பண்டாரத்தில் வாதாடி இனவரி இல்லாமல் தடுத்துள்ள செய்தி இச்செப்பேட்டில் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தொல்லியல் சான்றுகள் கிடைக்கும் இப்பகுதியில் அகழாய்வு செய்யும்போது, பழங்கால மக்களின் பண்பாட்டை அறிந்து கொள்ள முடியும் என்று கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago