கரோனா தடுப்பூசி செலுத்த செப்.27 அன்று பொதுமக்கள் செல்ல வேண்டாம்: அமைச்சர் மா.சு. வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

தமிழ்நாடு முழுவதும் நாளை (26-9-2021) மாபெரும் கரொனா தடுப்பூசி முகாம் நடைபெறுவதையொட்டி, செப்.27 அன்று தடுப்பூசி செலுத்திக்கொள்ள முகாம்களுக்குப் பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாகச் சென்னையில் இன்று அமைச்சர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது தெரிவித்ததாவது:

’’செப்.12 ஆம் தேதி முதல் மெகா கரோனா தடுப்பூசி முகாம் 40 ஆயிரம் முகாம்கள் மூலம் 20 லட்சம் பேருக்குத் தடுப்பூசி செலுத்துவது என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இலக்கைவிடக் கூடுதலாக 28 லட்சத்து 91 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. செப்.19ஆம் தேதி இரண்டாவது மெகா கரோனா தடுப்பூசி முகாமில், 20 ஆயிரம் முகாம்கள் மூலம் 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்துவது என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இலக்கைவிடக் கூடுதலாக 16 லட்சத்து 41 ஆயிரம் பேருக்குக் கூடுதலாக கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

அதேபோல் நாளை (செப்.25) தமிழகம் முழுவதும் மூன்றாவது மெகா கரோனா தடுப்பூசி முகாம், 20 ஆயிரம் முகாம்கள் மூலம் 15 லட்சம் பேருக்குச் செலுத்துவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு தற்போது 29 லட்சம் கரோனா தடுப்பூசிகள் வந்திருக்கின்றன. அவை அனைத்து மாவட்டங்களுக்கும் பிரித்து அனுப்பப்பட்டுள்ளன. இத்தடுப்பூசிகளைச் செலுத்தி தடுப்பூசி முகாமை நடத்துவதற்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் அலுவலர்கள் தமிழகம் முழுவதும் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

தமிழகத்தில் முதல் தவணை தடுப்பூசியை 22 லட்சம் பேர் செலுத்தி, இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்துவதற்கு 22 லட்சம் பேரும் காத்துக்கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் வசிக்கக் கூடிய பகுதியிலேயே 40 ஆயிரம் தடுப்பூசி முகாம்கள் நாளை தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளன. எனவே இம்முகாம்களில் நீங்களாகவே முன்வந்து இரண்டாம் தவணைத் தடுப்பூசியைச் செலுத்திக்கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் முதல் தவணை தடுப்பூசிகள் செலுத்திக்கொண்டவர்கள் 56 சதவிகிதம் பேர் இருக்கின்றனர். 2வது தவணை தடுப்பூசிகள் செலுத்திக்கொண்டவர்கள் 17 சதவிகிதம் பேர் இருக்கின்றனர். நாளை தடுப்பூசி முகாமில் 15 லட்சம் தடுப்பூசிகள் செலுத்துவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், இலக்கைத்தாண்டி கூடுதலாக 20 லட்சத்திலிருந்து 25 லட்சம் தடுப்பூசிகள் வெற்றிகரமாகச் செலுத்தப்படும். இப்படித் தடுப்பூசி செலுத்திக்கொள்வதன் மூலம் 60 சதவிகிதத்தினர் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர் என்ற நிலை ஏற்படவிருக்கிறது.

இதுவரை தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளின் சார்பில் 4 கோடியே 17 லட்சத்து 50 ஆயிரத்து 75 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இதில் தமிழக அரசின் வழிகாட்டுதல்கள், தொடர் அறிவுறுத்தலின் அடிப்படையில் தனியார் மருத்துவமனைகளின் சார்பில் 24 லட்சத்து 47 ஆயிரத்து 65 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. ஆக 4 கோடியே 41 லட்சத்து 97 ஆயிரத்து 140 பேருக்கு தமிழகத்தில் இதுவரை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. விரைவிலேயே 5 கோடி பேர் தமிழகத்தில் தடுப்பூசிகள் செலுத்திக்கொண்டுள்ளனர் என்ற நிலையை எய்திட அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திகொள்ள வேண்டும்.

இத்தடுப்பூசி முகாம்களில் மருத்துவத் துறையைச் சேர்ந்த களப்பணியாளர்கள் இத்தடுப்பூசி முகாம்களுக்காக, முகாம் நடைபெறுவதற்கு முன்பும், தடுப்பூசி செலுத்திய பிறகும் 15 மணி நேரம் கடும் உழைப்பைக் கொடுக்கின்றனர். அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். இத்தடுப்பூசி முகாம்களில் ஈடுபடும் மருத்துவப் பணியாளர்கள் அடுத்தநாள் திங்கள் கிழமை விடுப்பு எடுத்துக்கொள்ளலாம். அதேபோல் பொதுமக்களும் திங்கள் கிழமை தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்குத் தடுப்பூசி முகாம்களுக்குச் செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்’’.

இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

31 mins ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

19 hours ago

மேலும்