புதுச்சேரியில் இந்திய திரைப்பட விழா தொடக்கம்; சிறந்த திரைப்பட விருதை பெற்றது தேன்

By அ.முன்னடியான்

புதுச்சேரியில் இந்திய திரைப்பட விழா-2021 இன்று(செப். 24) மாலை தொடங்கியது. சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்ட ‘தேன்’ படத்தின் இயக்குநர் கணேஷ் விநாயகனுக்கு சங்கரதாஸ் சுவாமிகள் பெயரிலான விருது வழங்கப்பட்டது.

புதுச்சேரி அரசு சார்பில் ஆண்டுதோறும் திரைப்பட விழா நடைபெறுவது வழக்கம். இத்திரைப்பட விழா இந்தியாவிலேயே புதுச்சேரியில் மட்டும் தான் 38 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடப்பாண்டுக்கான இந்தியத் திரைப்பட விழா-2021, இன்று தொடங்கியது.

அலையன்ஸ் பிரான்சேஸ் கலை அரங்கில் நடைபெற்ற தொடக்க விழாவில், அலையன்ஸ் பிரான்சேஸ் தலைவர் சதீஷ் நல்லாம் வரவேற்றார். நவதர்ஷன் திரைப்படக்கழகம் செயலர் பழனி வாழ்த்துரை வழங்கினார். புதுச்சேரி அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை செயலர் உதயகுமார் கடந்த 2020-ல் சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்ட ‘தேன்’ படத்தின்

இயக்குநர் கணேஷ் விநாயகனுக்கு சங்கரதாஸ் சுவாமிகள் பெயரிலான விருது மற்றும் ரூ. 1 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கி பாராட்டினார். பின்னர் அவர் பேசியதாவது:‘‘புதுச்சேரி முதல்வர், பொதுப்பணித்துறை அமைச்சர் ஆகியோர் கலந்து கொள்ள வேண்டிய விழா இது. ஆனால் உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் அவர்கள் கலந்து கொள்ள முடியவில்லை.

எனினும் உரிய நேரத்தில் இந்த திரைப்பட விழாவை கொண்டாடி, விருது பெற்ற இயக்குநருக்கு பரிசு வழங்கி உற்சாகம் காட்டுவது நமது அரசின் கடமை. இயல், இசை, நாடகம் ஆகிய மூன்றிலும் நாம் சிறந்தவர்கள். சங்ககாலம் முதலே இம்மூன்றுக்கும் மிக அதிகமான முக்கியத்துவத்தை நாம் அளித்துள்ளோம். அன்று நாடகமாக இருந்துதான், இன்று திரைப்படமாக நம்முன்னே மிளிர்கிறது.

நல்ல படங்களை மிகுந்த உற்சாகத்துடன் வெற்றி பெறச்செய்வது நமது கடமை. சில படங்கள் நல்லதாகவே இருந்தாலும், வியாபார ரீதியில் வெளியே தெரியாமல் இருக்கலாம். ஆனால், நல்ல படங்களை இயக்கும் கலைஞர்கள் அரசால் பாராட்டப்படும்போது அவர்களின் பணி மேலும் சிறந்து பெரிய அளவிலான வெற்றிகளை அவர்கள் குவிப்பார்கள்.

அதற்கு ஒரு படியாக தான் நாம் இந்த விருதினை வழங்கி கவுரவிக்கிறோம். திரைப்படங்களும், திரைப்பட நடிகர்களும் நம்முடைய வாழ்வில் மகிழ்வை தருகின்றவர்கள். தமிழகம், புதுச்சேரி கல்வியில் மிகச்சிறந்த மாநிலங்களாக விளங்குகின்றன. இதற்கு காரணம் மக்களுக்கு விழிப்புணர்வை நாடகம், திரைப்படங்கள் வாயிலாக எடுத்துச் சென்றதுதான். ஆகவே அதனை ஊக்குவிக்க வேண்டியது நமது கடமை.’’என்றார்.

இயக்குநர் கணேஷ் விநாயகன் பேசும்போது, ‘‘இந்த படத்தின் கதைக்கு 2 ஆண்டுகள் உழைத்தோம். இப்படத்தின் கதை ஒடிசா மற்றும் தேனி மாவட்டத்தில் நடைபெற்ற மலைக்கிராம மக்களின் வாழ்வியலில் நடைபெற்ற உன்மை சம்பவத்தை கருப்பொருளாக கொண்டு உருவாக்கப்பட்டது.

இந்தியாவின் மிகச்சிறந்த விருதான பனோராமா விருதும் எங்களுக்கு அங்கீகரிக்கப்பட்டு அந்த விருதும் கிடைத்தது. இதுவரை 60 விருதுகளை இப்படம் வாங்கியுள்ளது. இது சாதாரன விஷயமாக நான் கருதவில்லை. எளிய மக்களின் வலி, கண்ணீர், துயரங்களை துடைக்க வேண்டும் என்பதற்காவே இந்த படத்தினை எடுத்தோம்.’’எனப் பேசினார்.

விழாவில் படத்தின் நடிகர் தருண், தயாரிப்பாளர் அம்பலவாணன், ஒளிப்பதிவாளர் சுகுமார் உள்ளிட்டோரும் கவுரவிக்கப்பட்டனர். புதுச்சேரி செய்தி மற்றும் விளம்பரத்துறை இயக்குநர் வினயராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவுக்கு பின்னர் ‘தேன்’ திரைப்படம் இலவசமாக திரையிடப்பட்டது.

அதைத்தொடர்ந்து வரும் 28-ம் தேதி வரை நடைபெறும் இவ்விழாவில், இதே அரங்கில் நாள்தோறும் மாலை 6 மணிக்கு இதர மொழித் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. அதன்படி நாளை (செப். 25) வங்காளத் திரைப்படம் ப்ரம்ம ஜனேன் கோபோன் கொம்மோட்டி, 26-ம் தேதி மலையாளப்படம் சேப், 27-ம் தேதி தெலுங்கு திரைப்படம் கதம், 28-ம் தேதி இந்தி திரைப்படம் ஆவர்த்தன் ஆகியவை இலவசமாக திரையிடப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்