கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே குப்பநத்தம் புதுக்கூரைப்பேட்டை கிராமத்தில் கடந்த 2003-ம் ஆண்டு இருவேறு சமூகத்தைச் சேர்ந்த கண்ணகி, முருகேசன் ஆகியோர் ஆணவக் கொலை வழக்கில், 13 பேரைக் குற்றவாளிகளாக அறிவித்த கடலூர் மாவட்ட எஸ்.சி./ எஸ்.டி. சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.உத்தமராசா, அதில் ஒருவருக்கு தூக்கு தண்டனையும், எஞ்சிய 12 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கி தீர்ப்பு வழங்கினார்.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தை அடுத்த குப்பநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் சாமிக்கண்ணு மகன் முருகேசன் (25). பொறியியல் பட்டதாரியான இவர், புதுக்கூரைப்பேட்டையைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் துரைசாமி மகள் கண்ணகி (22) என்பவரைக் காதலித்து வந்த நிலையில், 2003 மே 5-ம் தேதி விருத்தாச்சலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவுத் திருமணம் செய்து கொண்டனர்.
எனினும், அவரவர் வீட்டில் தனித்தனியாக வசித்து வந்த நிலையில், கண்ணகியின் பாதுகாப்பு கருதி, முருகேசன், கண்ணகியை விழுப்புரம் மாவட்டம் (தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டம்), மூங்கில்துறைப்பட்டிலுள்ள உறவினர் வீட்டில் தங்கவைத்துவிட்டு, முருகேசன் ஸ்ரீமுஷ்ணம் அருகே வண்ணாங்குடிகாட்டிலுள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்தார்.
இந்த விவகாரம் வெளியில் தெரிந்த நிலையில், இத்திருமணத்தினால் தங்களது கவுரவம் பாதிக்கப்பட்டதாகக் கருதிய பெண்ணின் பெற்றோர், 8-7-2003 அன்று வண்ணாங்குடிகாட்டிலுள்ள மயானத்தில் முருகேசன் - கண்ணகி ஆகியோரது வாய், காதில் விஷத்தை ஊற்றிக் கொலை செய்து பின்னர் உடலைத் தனித்தனியாக எரித்துள்ளனர்.
இச்சம்பவம் ஊடகங்கள் மூலமாக வெளிவந்த நிலையில், முருகேசனின் பெற்றோர் விருத்தாச்சலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அப்போது, காவல்துறை ஆய்வாளராக இருந்த மா.செல்லமுத்து (தற்போது துணை கண்காணிப்பாளராகி ஓய்வு பெற்றவர்), உதவி ஆய்வாளராக இருந்த பெ.தமிழ்மாறன் (51) (ஊழல் வழக்கில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்) ஆகியோர், ஆணவக் கொலையை மூடி மறைக்கும் நோக்குடன் செயல்பட்டதோடு, முருகேசன் - கண்ணகி தரப்பில் தலா 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்து வழக்கை முடித்தனர்.
எனவே, இந்த வழக்கினை சிபிஐ விசாரணை நடத்த வேண்டுமென முருகேசனின் தந்தை சாமிக்கண்ணு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். வழக்கை விசாரித்த நீதிபதி அசோக்குமார், வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டார்.
இதையடுத்து, தற்போது தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரியம் ஏடிஜிபியும், முன்னாள் சென்னை மாநகர ஆணையருமான ஏ.கே.விஸ்வநாதன் சிபிஐ டிஐஜியாக இருந்தபோது, அவரது வழிகாட்டுதலின்படி, டிஎஸ்பி நந்தகுமார் நாயர் தலைமையிலான குழு விசாரணை மேற்கொண்டு 9-3-2009 அன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
அதில், கண்ணகி - முருகேசன் ஆகியோரை சாதிய வன்கொடுமையால் கண்ணகி குடும்பத்தினர் ஆணவப் படுகொலை செய்ததாகக் குறிப்பிட்டனர். இதற்கு உடந்தையாக முருகேசன் உறவினர்கள் 2 பேரும், அப்போதைய காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் ஆகியோரும் இருந்ததாகக் குறிப்பிட்டிருந்தனர்.
இந்த வழக்கு, கடலூர் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், தினசரி விசாரணை நடத்தும் வகையில், எஸ்.சி / எஸ்.டி. சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி எஸ்.உத்தமராசா இன்று (செப். 24) தீர்ப்பு வழங்கினார்.
இந்த வழக்கினை சிபிஐ விசாரித்ததால், வழக்கில் பல்வேறு திருப்பங்களை ஏற்படுத்தியிருந்தது. எனவே, பல்வேறு அரசியல் கட்சியினர், மனித உரிமை ஆர்வலர்கள், அமைப்பினர் தொடர்ந்து போராடி வந்ததால் தீர்ப்பினை எதிர்பார்த்து ஏராளமானவர்கள் நீதிமன்றத்தில் கூடினர்.
காலையில், நீதிபதி தனது தீர்ப்பின் முதற்பகுதியை வாசித்தார். அதில், முருகேசனின் உறவினர்கள் செ.அய்யாசாமி (61), பா.குணசேகரன் (59) ஆகியோர் மிரட்டப்பட்டு சம்பவ இடத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். எனவே, அவர்களுக்கு இக்கொலையில் சம்பந்தம் இல்லாததால் அவர்களை விடுதலை செய்வதாக அறிவித்தார்.
மீதமுள்ள 13 பேரும் குற்றவாளிகள் என்று அறிவித்தார். அதன் பின்னர், சுமார் 2 மணி நேரத்துக்குப் பிறகு ஒவ்வொருவருக்குமான தண்டனை விவரத்தை அறிவித்தார். அதில், ஆணவக் கொலைக்கு முக்கியக் காரணமாக விளங்கிய பெண்ணின் சகோதரர் து.மருதுபாண்டியன் (49) என்பவருக்குச் சாகும் வரையில் தூக்கிலிடும் மரண தண்டனையும், ரூ.4.65 லட்சம் அபராதமும் விதித்துத் தீர்ப்பு கூறினார்.
மேலும், பெண்ணின் தந்தை சி.துரைசாமி (68), அவரது மகன் ரெங்கசாமி (45), உறவினர்களான கோ.கந்தவேலு (54), கோ.ஜோதி (53), ரா.மணி (66), ரா.தனவேல் (49), வை.அஞ்சாபுலி (47), கா.ராமதாஸ் (52), ந.சின்னதுரை (50) ஆகியோருக்கு கொலை மற்றும் பல்வேறு பிரிவுகளின் கீழ் தலா 3 ஆயுள் தண்டனையும் தலா ரூ.4.15 லட்சம் அபராதமும் விதித்தார். தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார்.
மேலும், அப்போதைய காவல் ஆய்வாளர் மா.செல்லமுத்து (66), உதவி ஆய்வாளர் பெ.தமிழ்மாறன் (51) ஆகியோருக்கு எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனையும் தலா ரூ.1.15 லட்சம் அபராதமும் விதித்தார். இருவரும் தலா ரூ.3 லட்சத்தை பாதிக்கப்பட்ட முருகேசன் குடும்பத்தினருக்கு வழங்கவும் உத்தரவிட்டார்.
இவ்வாறு தமிழகத்தை உலுக்கிய ஆணவக் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த 15 பேரில் இருவரை விடுதலை செய்தும், ஒருவருக்கு மரண தண்டனையும், காவல்துறையைச் சேர்ந்த இரண்டு பேர் உள்பட 12 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து நீதிபதி பரபரப்பு தீர்ப்பு வழங்கினார்.
இந்தத் தீர்ப்பினை முன்னிட்டு, கடலூரில் நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். விருத்தாச்சலம் பகுதியிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
இந்த வழக்கில், சிபிஐ தரப்பில் சிறப்பு வழக்குரைஞர் டொமினிக் விஜய், பாதிக்கப்பட்டவர் தரப்பில் வழக்குரைஞர் பெ.ரத்தினம் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். இதையடுத்து தண்டனை விதிக்கப்பட்ட 13 பேரும் பலத்த பாதுகாப்புடன் கடலூர் மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
தீண்டாமையின் உச்சம்
இந்த வழக்கை புலனாய்வு மேற்கொண்ட சிபிஐ துணைத் தலைவர் ஏ.கே.விஸ்வநாதனிடம் தீர்ப்புக் குறித்துக் கேட்டபோது, "வரவற்கக்கூடிய தீர்ப்பு" என்றார்.
இதையடுத்து, வழக்கைக் கையாண்ட ஆய்வாளர் நந்தகுமார் நாயரிடம் இதுகுறித்துக் கேட்டபோது, "நல்ல தீர்ப்பு. வரவேற்கத்தக்கது" என்றார்.
மேலும், அவர் கூறுகையில், ''ஏடிஜிபி விஸ்வநாதனின் வழிகாட்டுதல் எங்களுக்குப் பேருதவியாக இருந்தது. தீண்டாமையின் உச்சமாக இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. முருகேசன் - கண்ணகி கொலை செய்யப்பட்ட விதத்தைப் பார்க்கும்போது, ஊராட்சித் தலைவர் என்ற அதிகாரம் இருந்ததால், தனது சாதிய கவுரவத்தை வெளிப்படுத்தும் நோக்கில், தனது மகன் செய்த செயலை நியாயப்படுத்தியுள்ளார். கண்ணகியின் தந்தை வீட்டிலிருந்து விஷம் எடுத்து வந்திருந்தாலும், விஷத்தை அவரது சகோதரர் மருதுபாண்டிதான் ஊற்றிக் கொலை செய்தோடு, எரித்துள்ளனர்.
அதேவேளையில், முருகேசனைத் தொட்டால் தீண்டாமை எனக் கருதி, அவரைத் தொடக் கூடாது என்ற நோக்கத்தில் அவரது உறவினரான அய்யாசாமி, குணசேகரனை வரவழைத்து, அவர்கள் மூலமாக விஷத்தைக் கொடுக்க முயன்றபோது, அய்யாசாமியைக் கயிற்றைக் கட்டி கிணற்றில் தலைகீழாகத் தொங்கவிட்டு அச்சுறுத்தியுள்ளனர். அதன் பிறகே, அவர்கள் விஷத்தைக் கொடுத்து உயிரிழக்கச் செய்ததோடு, முருகேசனின் உடலை அய்யாசாமியும் குணசேகரனும் இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்று சிதை மூட்டியுள்ளனர்.
இச்சம்பவத்தில், முருகேசன் தந்தை அளித்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறையினர், மாறாக பஞ்சாயத்து பேசி பணம் வாங்கிக் கொடுக்க முயன்றுள்ளனர். அதற்கு கண்ணகியின் தந்தை துரைசாமியோ, என் வீட்டில் ஒரு இறப்பு, உன் வீட்டில் ஒரு இறப்பு. சரிசமமாகி விட்டது போ என்று விரட்டிவிட்டாராம். பின்னர், பழனிவேல் என்ற வழக்குரைஞர் பேசி ரூ.20 ஆயிரம் வரை பெற்றுக் கொடுத்து வழக்கைச் சரி செய்துள்ளனர்.
இந்த நிலையில்தான் விசிக தலைவர் திருமாவளவன் இதுகுறித்துப் பேச, பிரச்சினை எழுந்தபோது, வழக்குப் பதிவு செய்து, வழக்குக்கு சம்பந்தமில்லாத இரு தரப்பைச் சேர்ந்த 8 பேரைக் கைது செய்து, பின்னர் ஜாமீனில் விடுவித்துள்ளனர். காவல்துறையிடம் இதுகுறித்து விசாரித்தபோது, இரு சமூகத்தினரிடையே பிரச்சினை எழுந்துவிடக் கூடாது என்ற நோக்கத்தில் தான் வழக்குப் பதிவு செய்ய தாமதமானது என்ற விளக்கம் ஏற்கக் கூடியதாக இல்லை.
இதனிடையே, திருமாவளவன் ஆலோசனையில் பேரில், முருகேசன் தந்தை சாமிக்கண்ணு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்ததன் பேரில், நீதிபதி அசோக்குமார் சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டார். இதையடுத்துதான் அப்போதைய சிபிஐ டிஐஜியாக இருந்த ஏ.கே.விஸ்வநாதனுடையை வழிகாட்டுதலில் செயல்பட்டுக் குற்றவாளிகளைக் கண்டுபிடித்தோம்.
இந்த வழக்கில், அய்யாசாமி, குணசேகரனும் விடுவிக்கப்பட்டதற்கு, துரைசாமி தரப்பின் நெருக்கடியால்தான் அவர்களுக்கு விஷம் கொடுக்கப்பட்டது என்பது தெரியவந்ததால் அவர்கள் விடுவிக்கப்பட்டிருக்கலாம்" என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago