குறைதீர்க்கும் கூட்டத்தை ரத்து செய்யக் கோரி தஞ்சை ஆட்சியர் முன்பு விவசாயிகள் திடீர் தர்ணா

ஒரத்தநாடு அருகே 6 ஏக்கர் நெல் அறுவடை செய்யப்படாமலேயே மக்கிப் போனதால் ஆத்திரமடைந்த விவசாயிகள் சிலர், இன்று (24-ம் தேதி) நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, ஆட்சியர் முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உள்ளிட்ட உயரதிகாரிகளும், நூற்றுக்கணக்கான விவசாயிகளும் கலந்துகொண்டனர். கூட்டம் தொடங்கிய ஒரு மணி நேரத்தில், தமிழக புரட்சிகர விவசாயிகள் சங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ம.புகழேந்தி தலைமையில் விவசாயிகள் 15-க்கும் மேற்பட்டோர் முழக்கங்களை எழுப்பியபடி கூட்ட அரங்குக்கு வந்தனர்.

அப்போது அவர்கள், "ஒரத்தநாடு அருகே பொட்டலங்குடிக்காடு கிராமத்தில் விவசாயி திருவேங்கடம் என்பவர், தனக்குச் சொந்தமான ஆறு ஏக்கரில் கடந்த ஆண்டு நெல் சாகுபடி செய்திருந்தார். ஆனால், அவரது வயலுக்குச் செல்லும் பொதுப் பாதையை சிலர் ஆக்கிரமித்துக் கொண்டு திருவேங்கடத்தை வயலுக்குள் விடாததால், நெல் அறுவடை செய்யப்படாமல் மக்கிப் போனது. இதனால் திருவேங்கடத்துக்குப் பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டது. இதுவரை சாகுபடியைச் செய்ய முடியவில்லை. வட்டாட்சியர் முதல் மாவட்ட ஆட்சியர் வரை மனு கொடுத்தும் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை, எனவே விவசாயிகளின் குறைகளைத் தீர்ப்பதாகக் கூறும் இந்தக் கூட்டம் வெறும் கண் துடைப்புதான், விவசாயிகளின் குறை தீர்க்கும் இந்தக் கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும்" எனக் கூறி முழக்கங்களை எழுப்பினர்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் முன்பு தரையில் அமர்ந்து ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக முழுக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அந்த விவசாயிகளை அழைத்து, "உங்களது கோரிக்கை தற்போதுதான் எனது கவனத்துக்கு வருகிறது. உடனடியாக அதிகாரிகளை அனுப்பி விசாரணை நடத்தச் சொல்கிறேன்" என்று தெரிவித்தார். ஆனாலும், விவசாயிகள் சுமார் 30 நிமிடம் கூட்டத்தை நடத்த விடாமல் தர்ணாவில் ஈடுபட்டனர்.

இதையடுத்துப் பொறுமையிழந்த ஆட்சியர், "நான் உங்களுடைய கோரிக்கைக்குத் தீர்வு காணுவதைப் பற்றிப் பேசுவோமா அல்லது பிரச்சினையைப் பேசுவோமா" எனக் கேட்டார். உடனடியாகக் கூட்டத்தில் இருந்த இதர விவசாயிகள் எழுந்து, பொட்டலங்குடிக்காடு விவசாயிகளை சமாதானப்படுத்தினர். பின்னர் அவர்கள் மனுவை ஆட்சியரிடம் கொடுத்துவிட்டு கூட்ட அரங்கைவிட்டு வெளியேறினர். இதர விவசாயிகளைக் கொண்டு கூட்டம் நடைபெற்றது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE