காரைக்காலில் நலவழித்துறை சார்பில் டெங்கு உலர் நாள் விழிப்புணர்வு செயல்பாடுகள்

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் டெங்கு உலர் நாளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து காரைக்கால் மாவட்ட நலவழித்துறை, தேசிய பூச்சிகளால் பரவும் நோய்த் தடுப்பு திட்டம், நெடுங்காடு மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றின் சார்பில், மேல பொன்பேற்றி கிராமத்தில் சுகாதாரப் பணியாளர் இன்று (செப்.24) டெங்கு உலர் நாள் விழிப்புணர்வு செயல்பாடுகளை மேற்கொண்டனர்.

நெடுங்காடு சுகாதார ஆய்வாளர் ஜெகநாதன், மேல பொன்பேற்றி அங்கன்வாடி ஆசிரியர் கலைமகள், உதவியாளர் புகழேந்தி உள்ளிட்டோர் வீடு வீடாகச் சென்று, டெங்கு கொசுப் புழுக்கள் உற்பத்தியைக் கண்டறிந்து, அந்தந்த வீட்டின் உரிமையாளர்களைக் கொண்டு அவற்றை அழிக்கச் செய்தனர். மேலும் பொதுமக்களிடம் டெங்கு விழிப்புணர்வு தொடர்பான துண்டுப் பிரசுரங்களை வழங்கி தகவல்களை எடுத்துக் கூறினர்.

அப்போது, ''மழைக்காலம் தொடங்கும் நிலையில் தேவையற்ற பொருட்களில் மழை நீர் தேங்கி டெங்கு நோயை உண்டாக்கும் ஏடிஎஸ் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. அதனால் பொதுமக்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையன்றும் டெங்கு உலர் நாளாகக் கடைப்பிடித்து, வீட்டைச் சுற்றிக் கிடக்கும் தேவையற்ற பொருட்களான டயர், பிளாஸ்டிக் கப், தேங்காய் மட்டை, வீட்டினுள் நாம் பயன்படுத்தும் குளிர்சாதனப் பெட்டியின் பின்புறம் உள்ள பிளாஸ்டிக் ட்ரே உள்ளிட்டவற்றில் நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

பகலில் கடிக்கும் கொசுக்கள் என்பதால் சிறார்களுக்கு கை, கால்களை மறைக்கும் வகையில் உடைகளை அணிவிக்க வேண்டும். ஒரு நாள் காய்ச்சலாக இருந்தாலும் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுக வேண்டும். சுயமாக மாத்திரை உட்கொள்ளக் கூடாது. இந்நோயை ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் மட்டுமே குணப்படுத்த முடியும்'' என்று பொதுமக்களிடம் எடுத்துக் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE