மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையில் தகுதி அடிப்படையிலான மாணவர் சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும் என, சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, அவர் இன்று (செப். 24) வெளியிட்ட அறிக்கை:
"மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையில் தகுதி அடிப்படையிலான மாணவர் சேர்க்கைக்கு, மாணவர் சேர்க்கை நடைமுறைகளும், கலந்தாய்வு முறைகளும், கட்டணக் கொள்ளையும் காரணங்களாக, தடைகளாக உள்ளன.
தகுதி அடிப்படையிலான மாணவர் சேர்க்கைக்கு எதிராக 'மாப் அப்' கவுன்சிலிங்கும், கட் ஆஃப் சதவீதத்தைக் குறைப்பதும் மிக மிக முக்கியமான காரணங்களாக உள்ளன.
» அச்சக உரிமையாளர்கள் கண்டிப்பாக விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்: காரைக்கால் ஆட்சியர் அறிவுறுத்தல்
தனியார் மருத்துவக் கல்லூரிகளும், நிகர்நிலை மருத்துவப் பல்கலைக்கழகங்களும் நேரடியாக மாணவர் சேர்க்கையை நடத்திக் கொள்ளலாம் என, இறுதிக் கட்ட மாணவர் சேர்க்கையின்போது, 'மாப் அப் கவுன்சிலிங்குக்கு' அனுமதிப்பதே மாணவர் சேர்க்கை முறைகேடுகளுக்கும், தகுதி அடிப்படையிலான மாணவர் சேர்க்கை சீர்குலைவதற்கும் ஊற்றுக் கண்ணாக உள்ளது.
இதைக் கண்டறிய பெரிய நிபுணர் குழுவோ, பல பக்க அறிக்கைகளோ அவசியமில்லை. இது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. இந்த மாணவர் சேர்க்கை முறைகேட்டைத் தடுக்க வேண்டும் .
அதற்கு என்ன செய்ய வேண்டும்? Very very simple! மத்திய - மாநில அரசுகள் மட்டுமே, இறுதிக் கட்டம் வரை மாணவர் சேர்க்கையை நடத்திட வேண்டும். தனியார் மருத்துவக் கல்வி நிறுவனங்களை அனுமதிக்கக் கூடாது. கவுன்சிலிங் கட்டணமாக பல லட்சம் ரூபாய் வசூலிக்கப்படுவதை தடை செய்ய வேண்டும்.
அதேபோல், நீட் தேர்வு முடிவுகளை வெளியிடும் பொழுது வெளிப்படைத் தன்மையைக் கடைப்பிடிக்க வேண்டும். முடிவுகள் வெளியிடப்படும் பொழுது நீட் தேர்வு எழுதிய மாணவரின் பெயர், நீட் பதிவு எண், ஆதார் எண், வாங்கிய மதிப்பெண், ரேங்க், கம்யூனிட்டி ரேங்க், சொந்த மாநிலம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தேசிய அளவிலும், மாநில அளவிலும் முழுமையான பட்டியல்களாக வெளியிடப்பட வேண்டும்.
இப்பொழுது உள்ள நடைமுறையில் வெளிப்படைத் தன்மை இல்லை. முழுமையான ரேங்க் லிஸ்ட் இல்லை. அது முறைகேடுகளுக்கு வாய்ப்பளிக்கிறது.
அடுத்து... மாணவர் சேர்க்கையின் இறுதிக் கட்டத்தில் நீட் நுழைவுத் தேர்வு 'கட் ஆஃப் சதவீதத்தைக்' குறைக்கக் கூடாது. எந்தக் காரணம் கொண்டும் அதைச் செய்யக் கூடாது. கடைசி நேரத்தில், கட் ஆஃப் சதவீதத்தைக் குறைப்பது, தகுதி அடிப்படையிலான மாணவர் சேர்க்கையை பாதிப்பதோடு, கட்டாய நன்கொடையை, ஊழல் முறைகேட்டை ஏற்படுத்துகிறது. எனவே, நீட் தேர்வு முடிவுகள் வெளிவரவுள்ள காலகட்டத்தில் மத்திய அரசு இந்த நடவடிக்கைகளை உடனடியாக எடுத்திட வேண்டும்.
அடுத்து, மிக முக்கியமாக, மருத்துவக் கல்விக் கட்டணங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மிக அதிகமாக நிர்ணயிக்கப்படுகின்றன. அதன் காரணமாக, நீட் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றிருந்தும் கூட, ஏழை, எளிய நடுத்தர வர்க்கக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேர முடியாத நிலை உள்ளது. இது சமூக நீதிக்கு எதிரானது. தகுதி அடிப்படையிலான மாணவர் சேர்க்கைக்கு எதிரானது.
எனவே, மத்திய - மாநில அரசுகள், இந்தக் கல்வி கட்டணக் கொள்ளையை தடுத்திட உறுதியான, கடுமையான நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும். கட்டணங்களை நியாயமான முறையில் நிர்ணயிக்க வேண்டும். தனியார் நிகர்நிலை மருத்துவ பல்கலைக்கழகங்களுக்கும் கட்டணங்களை நிர்ணயிக்க வேண்டும்.
தேசிய மருத்துவ ஆணைய சட்டத்தில், 50 விழுக்காடு மருத்துவ இடங்களுக்கு மட்டுமே கட்டணங்கள் நிர்ணயிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளதை நீக்க வேண்டும். இந்தியாவில் உள்ள அனைத்து மருத்துவக் கல்வி இடங்களுக்கும் மத்திய, மாநில அரசுகளே கட்டணங்களை நிர்ணயிக்கும் என திருத்தத்தைக் கொண்டுவர வேண்டும்.
கார்ப்பரேட் கம்பெனிகள் லாப நோக்கோடு மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கலாம் என்ற விதிமுறையை நீக்க வேண்டும். மருத்துவக் கல்வி கார்ப்பரேட்மயமாவதை, வியாபாரமாவதைத் தடுக்க வேண்டும்.
'கட்டாய நன்கொடை' வசூலிக்கும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும். அனுமதியை ரத்து செய்ய வேண்டும். தொடர்ந்து தவறுகளை செய்யும் நிறுவனங்களை அரசுடைமையாக்கும் வகையில், கட்டாய நன்கொடை தடுப்புச் சட்டத்தில், திருத்தத்தைக் கொண்டு வரவேண்டும்.
அடுத்து, மிக முக்கியமாக ஏழை - எளிய மாணவர்களின், குறிப்பாக ஆண்டு குடும்ப வருமானம் ரூபாய் 8 லட்சத்துக்கும் குறைவாக உள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம், கலந்தாய்வுக் கட்டணம் உள்ளிட்ட அனைத்துக் கட்டணங்களையும், மத்திய - மாநில அரசுகளே ஏற்க வேண்டும்.
பட்டியலின, பட்டியல் பழங்குடி இன மாணவர்களுக்கான 'போஸ்ட் மெட்ரிக் ( Post matric)' கல்வி உதவித் தொகையை அதிகப்படுத்தி, முறையாக வழங்க வேண்டும். அதேபோல், அந்த கல்வி உதவித் தொகையைப் பெறுவதற்கான வருமான உச்ச வரம்பை ரூபாய் 8 லட்சமாக உயர்த்திட வேண்டும்.
மாணவர்கள் வங்கிக் கடன் பெறுவதில் உள்ள சிக்கல்களை நீக்கி, எளிதாகப் பெற உதவிட வேண்டும். இந்தக் கடனை வட்டியில்லாமல் வழங்கிட வேண்டும். எந்த விதமான சூரிட்டியும் இல்லாமல் கல்விக் கடனை வழங்கிட வேண்டும். இத்தகைய நடவடிக்கைகள் மூலம் நிச்சயமாக தகுதி அடிப்படையிலான மாணவர் சேர்க்கையை உறுதிப்படுத்த முடியும்.
இதை உடனடியாக மத்திய அரசும், மாநில அரசும் செய்திட வேண்டும்.
நீட் அடிப்படையிலான மாணவர் சேர்க்கையாக இருந்தாலும் சரி, அல்லது 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலான மாணவர் சேர்க்கையாக இருந்தாலும் சரி மேற்கண்ட கோரிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படாவிட்டால், தகுதி அடிப்படையிலான மாணவர் சேர்க்கையை உறுதிப்படுத்த முடியாது.
பணம் மட்டுமே, மருத்துவக் கல்வி பெறுவதற்கான தகுதியைத் தீர்மானிக்கும். இதைச் சொல்வதற்குப் பெரிய ஆராய்ச்சிகள் எல்லாம் அவசியமில்லை!".
இவ்வாறு ஜி.ஆர்.ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
10 mins ago
தமிழகம்
28 mins ago
தமிழகம்
49 mins ago
தமிழகம்
55 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago