வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைத்துத் துறைகளும் துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (செப். 24) தலைமைச் செயலகத்தில், வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
"நீரின்றி அமையாது உலகு என்ற கூற்றின்படி, நீர் எந்த அளவுக்கு இன்றியமையாததோ, அதேசமயம் சில நேரங்களில் நீரினால் பாதிப்பு ஏற்படக்கூடிய அசாதாரணமான சூழ்நிலையையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டுமென்று நான் கேட்டுக்கொள்கிறேன். ஒரு நல்ல நிர்வாகத்துக்குச் சான்றாக விளங்குவது இப்படிப்பட்ட காலங்களில் அது எந்த அளவுக்குத் தனது குடிமக்களின் உயிர்களுக்கும், உடமைகளுக்கும், கால்நடை, பயிர் வகைகளுக்கும் சேதம் இல்லாமல் காப்பாற்றிக் கொண்டு செல்கிறது என்பதைப் பொறுத்தே அமைகிறது.
ஆகவே, புயல் வெள்ளக் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திட்டமிட்டு, முறையாக எடுத்து அனைத்துத் தரப்பு மக்களும், குறிப்பாக ஏழை எளிய மக்கள், அதைவிடக் குறிப்பாகச் சொல்லவேண்டுமென்றால் குடிசைப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதிப்புக்கு ஆளாத வகையில், நீங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். பேரிடர்க் காலங்களில் அரசுத் துறைகள் தனித்தனியாக இயங்காமல் ஒன்றாக இணைந்து ஒரே நோக்கத்தோடு, மக்கள் துயர் நீக்கம் என்ற ஒரே நோக்கத்தோடு இயங்க வேண்டியது மிக மிக அவசியமானது ஆகும்.
தமிழகத்தின் பூகோள அமைப்பானது அடிக்கடி சூறாவளி, புயல், வெள்ளப் பெருக்கு, வறட்சி ஆகியவற்றின் பாதிப்புகளுக்கு உள்ளாகக்கூடிய வகையில் அமைந்திருக்கிறது.
தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களைத் தவிர்த்து பெரும்பாலான மாவட்டங்களில் தென்மேற்குப் பருவமழை பொழிந்தாலும் கூட, அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை இது நீடிக்கும். வடகிழக்கு பருவமழைக் காலத்தில் தமிழகத்துக்கு, 448.0 மி.மீட்டர் மழை இயல்பாக கிடைக்கப் பெற்றது. இது தமிழகத்தின் வருடாந்திர இயல்பான மழை அளவில், 47.32 விழுக்காடு ஆகும்.
நமது மாநிலம், வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் கிடைக்கப் பெறும் மழைப்பொழிவைச் அதிகமாகச் சார்ந்து இருக்கின்ற காரணத்தினால், பருவமழையின் பலன்களை அதிகமாகப் பெறுவதற்கு, அதனால் ஏற்படும் இழப்பு மற்றும் சேதம் ஆகியவற்றைக் குறைப்பது அவசியமாக அமைந்து விடுகிறது.
இப்பணியில், மாநில அரசின் துறைகள் மட்டுமல்லாமல், தேவைக்கேற்ப, ராணுவம், விமானப்படை, கடற்படை, கடலோரக் காவல் படை, இந்திய வானிலை ஆய்வு மையம், மத்திய நீர்வள ஆணையம், தேசிய பேரிடர் மீட்பு படை உள்ளிட்ட ஒன்றிய அரசுத் துறைகள் மற்றும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டுமென்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
கடந்த ஆண்டுகளில், வடகிழக்குப் பருவமழை காலத்தில் ஏற்பட்ட புயல், கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கின் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளைக் கண்டறிந்து, பேரிடர்களால் உண்டாகக்கூடிய சேதத்தைக் குறைப்பதற்கும், பாதிப்புகளைத் தவிர்ப்பதற்கும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையுடன் அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையம் மற்றும் மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய வகையில் வலுப்படுத்தப்பட்டுள்ளன. மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையம் மற்றும் மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு மையங்களை முறையே 1070 மற்றும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்கள் மூலம் பொது மக்கள் தொடர்புகொள்ள ஏதுவாக தயார் நிலையில் வைத்திருக்க வேண்டுமென்று நான் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.
வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் ஏற்படும் புயல் மற்றும் வெள்ளம் காரணமாக பாதிப்புக்குள்ளாகும் பொதுமக்களைப் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப் பல்நோக்கு பாதுகாப்பு மையங்களும், நிவாரண மையங்களும் கண்டறியப்பட்டு அவற்றைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அவ்வாறு, நமது பொதுமக்கள் தங்க வைக்கப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் அவர்களுக்குப் பாதுகாப்பான குடிநீர், தரமான உணவு, குழந்தைகளுக்குத் தேவையான பால், ரொட்டி போன்றவற்றை வழங்குவதற்கும் நீங்கள் திட்டமிட்டு வைத்திருக்கவேண்டும்.
பாதிப்புக்குள்ளாகக்கூடிய ஒவ்வொரு பகுதியிலும் சிறப்புக் கண்காணிப்பு அலுவலர்களை நியமித்து, நிவாரணப் பொருட்கள் தாமதமின்றி மக்களுக்குச் சென்றடடைவதை உறுதி செய்ய வேண்டுமென்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
பாதிப்புக்குள்ளாகும் பகுதியில் உள்ள மக்களை வெளியேற்றும்போது முதியோர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும், கர்ப்பிணிப் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
புயலின் சீற்றம் காரணமாக மரங்கள் விழும் என்பதால், பலவீனமான மரங்களையும், முறிந்து விழக்கூடிய மரக்கிளைகளையும், முன்கூட்டியே அகற்றவும், புயலின்போது விழும் மரங்களையும், மின் கம்பங்களையும் உடனடியாக அகற்றுவதற்கு குழுக்கள் அமைத்து நீங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். ஏற்கெனவே, அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதனை முறையாகக் கண்காணித்துச் செயல்படுத்த வேண்டும்; பாதிப்புக்குப் பின் உடனடியாக மின் விநியோகத்தைச் சரி செய்வதை முன்னுரிமைப்படுத்த வேண்டும், அதில் அதிகமாக கவனம் செலுத்த வேண்டும்.
வெள்ள பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் வசிக்கும் மக்களை மீட்பதற்குத் தேவையான படகுகளைத் தயாராக வைத்திருப்பதுடன், தேவைப்படும் இடங்களில், தேசிய பேரிடர் மீட்புக் குழு, தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையினரை முன்கூட்டியே நிலைநிறுத்த வேண்டும்.
வடகிழக்குப் பருவமழைக் காலத்தில், பொதுமக்களுக்கு எவ்விதமான சிரமுமின்றி, அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கும் வகையில் உங்களுடைய பணி அமைய வேண்டும். அனைத்து நியாய விலைக் கடைகளிலும், அத்தியாவசியப் பொருட்களின் இருப்பு போதுமான அளவு வைத்திருப்பதையும் இப்போதே நீங்கள் உறுதி செய்திட வேண்டுமென்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
பருவமழைக் காலத்தில், நோய்த் தொற்று ஏற்படாமல் இருக்கவும், நோய்த் தொற்றுப் பரவலைத் தடுக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நோயுற்ற மக்களுக்கு சிகிச்சை வழங்கும் பொருட்டு, உயிர் காக்கும் மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், பாம்புக் கடிக்கான மாற்று மருந்துகள், ஆக்சிஜன் உருளைகள் போதுமான அளவு இருப்பு வைக்க வேண்டும். மேலும், கரோனா நோய்த் தடுப்பு நடைமுறைகள் தவறாது பின்பற்றப்படுவதும் உறுதி செய்யப்பட வேண்டும்.
மாவட்ட ஆட்சியர்கள், கனமழை, புயல், வெள்ளம் ஆகியவற்றின் காரணமாக பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளைத் தொடர்ந்து கண்காணித்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளிலும் வடகிழக்குப் பருவமழையின் காரணமாக ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் விரைவாக மேற்கொள்வதோடு, உணவு தயாரிக்கும் சமையல் கூடங்களைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டுமென்றும் நான் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.
சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் நீர்நிலைகளின் நீர் இருப்பு இப்போது 79 விழுக்காடாக இருக்கிறது. ஏற்கெனவே, சென்னை பெரும் வெள்ளத்தை நாம் சந்தித்து இருக்கிறோம். அந்தப் பெருவெள்ளம் வந்தபோதும், கனமழை வந்தபோதும், இந்த நீர் இருப்பைக் கவனத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது மிக அவசியம். கனமழையால் கிடைக்கும் தண்ணீர் வீணாகாமல் குளங்கள், ஏரிகள் போன்றவற்றின் நீர்வழிக் கால்வாய்கள் மூலம் சேமித்து வைப்பதற்கும் ஒரு செயல்திட்டம் வகுத்துச் செயல்படுவது மழைநீரைச் சேமிப்பதில் மிக முக்கியப் பங்காற்றும், நிலத்தடி நீரையும் அதிகரிக்கும்.
எந்தவொரு பிரச்சினையையும் 'வருமுன் காப்பதே சால்பு' என்பதால், அனைத்துப் பகுதிகளிலும், மழை / வெள்ள நீர், தங்கு தடையின்றி வெளியேறும் வகையில், மழைநீர் வடிகால்களை விரைந்து சீரமைப்பதோடு, சாலைகளில் தண்ணீர் தேங்காத நிலையை ஏற்படுத்த வேண்டும். அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நீர்த்தேக்கங்களின் அவசர கால திட்டத்தின் (Emergency Response Plan) அடிப்படையில், ஒத்திகைப் பயிற்சி தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்களின் வழிகாட்டுதலின் பேரில் நடத்தப்பட வேண்டும்.
ஆழ்கடலில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கு, புயல், கனமழை மற்றும் காற்றின் வேகம் தொடர்பான முன்னெச்சரிக்கை தகவல்களை தகவல் தொடர்பு சாதனங்கள் மூலம் உடனுக்குடன் அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பேரிடர்க் காலங்களில், தேடுதல், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபடும் அனைத்து அரசு அலுவலர்கள், முதல் நிலை மீட்பாளர்கள், தன்னார்வலர்கள் ஆகியோர் அனைவரும் கரோனா தொற்று பாதுகாப்பு நடைமுறைகளைத் தவறாது பின்பற்ற வேண்டும்.
வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் ஏற்படும் பேரிடர்களின்போது மனித உயிரிழப்புகள் மற்றும் உடைமைகளுக்கு சேதங்கள் ஏற்படுவதைத் தடுக்க நம்முடைய அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்".
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago