சிவப்பு ரேஷன் கார்டுடன் வந்தால் மட்டுமே அக். 1 முதல் இலவச சிகிச்சை: புதுவை மக்களிடமிருந்து விலகிச் செல்லும் ஜிப்மர்

By செ. ஞானபிரகாஷ்

புதுவையில் சிவப்பு ரேஷன் கார்டுடன் வந்தால் மட்டுமே அக்டோபர் 1 முதல் இலவச சிகிச்சை என்ற ஜிப்மரின் முடிவுக்குப் பொதுமக்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

புதுச்சேரி கோரிமேட்டில் மத்திய அரசு நிறுவனமான ஜிப்மர் மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு சிறப்பு மருத்துவ நிபுணர்கள், பேராசிரியர்கள், மருத்துவ அதிகாரிகள் என 700 பேரும், செவிலியர்கள் 2,600 பேரும் பணிபுரிகின்றனர். இதுதவிர, டெக்னீஷியன்கள், நிரந்தர ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர்.

புதுவையில் கரோனா 2-வது அலை பாதிப்பு அதிகமாக இருந்ததால் ஜிப்மர் கோவிட் வார்டில் 500 பேருக்கு மேல் அனுமதிக்கப்பட்டனர். இதன் காரணமாக, கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி முதல் வெளிப்புற சிகிச்சைப் பிரிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பின்னர், புதுவை அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகளால் கரோனா பாதிப்பு வெகுவாகக் குறைந்தது. இதையடுத்து, கடந்த ஜூன் 21-ம் தேதி முதல் மீண்டும் வெளிப்புற சிகிச்சைப் பிரிவு ஜிப்மரில் செயல்படத் தொடங்கியுள்ளது. அதுவும் ஒரு நாளைக்கு ஒவ்வொரு துறையிலும் அதிகபட்சமாக 25 நோயாளிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது.

இதற்காக ஜிப்மர் தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு முன்பதிவு செய்து, மருத்துவருடன் கலந்தாலோசனை செய்த பிறகுதான் அனுமதி வழங்கப்படுகிறது.

தற்போது கரோனா தொற்று 2-வது அலை குறைந்துள்ளது. ஜிப்மரில் மட்டும் தொடர்ந்து கட்டுப்பாடுகள் அமலில் இருப்பதால் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெறுவோர் கடும் பாதிப்பில் உள்ளனர்.

இந்நிலையில் அடுத்த கட்டுப்பாட்டை ஜிப்மர் நிர்வாகம் விதித்துச் சுற்றறிக்கையை அனைத்துத் துறைகளுக்கும் அனுப்பியுள்ளது. அதில், "புதுச்சேரியில் ஏழ்மை நிலையில் உள்ளோருக்கு இலவச சிகிச்சை தருகிறோம். அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த ஏழைகளுக்கும் சிகிச்சை தரவுள்ளோம். இனி அனைவரும் சிவப்பு ரேஷன் கார்டுகளைக் காண்பித்தால் இலவச சிகிச்சை தரவேண்டும். அக்டோபர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும்" என்று குறிப்பிட்டுள்ளனர்.

இதுபற்றி பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், "ஜிப்மர் மக்களிடம் இருந்து தற்போது விலகிச் செல்கிறது. பல ஏழைகளிடம் சிவப்பு ரேஷன் கார்டு தற்போது இல்லை. உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் சேர்ந்து வருவாய் அதிகாரிகளிடம் வருமானச் சான்று வாங்கித் தந்து சிகிச்சை பெறுகிறோம். சிவப்பு நிற ரேஷன் கார்டு இருந்தால் மட்டுமே இலவச சிகிச்சை என்றால் பல ஏழைகள் பாதிக்கப்படுவார்கள். புதுச்சேரியில் சிவப்பு, மஞ்சள் ரேஷன் கார்டுகள் கணக்கெடுப்பே நடத்தாமல் உள்ளனர். புதுச்சேரி, விழுப்புரம், கடலூர் மற்றும் சுற்றியுள்ள மாவட்டத்தில் உள்ளோரை அலைக்கழிக்கும் ஜிப்மர், நாடு முழுவதும் உள்ளோருக்கு எப்படி சிகிச்சை தரும்? அரசு அதிகாரிகளோ, அரசில் உயர் பதவிகளில் இருப்போரோ, பணக்காரர்களா ஜிப்மருக்கு சிகிச்சைக்கு வருகிறார்கள்?" என்று கேள்வி எழுப்புகின்றனர்.

விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் இதுபற்றிக் கூறுகையில், "வெளிப்புற நோயாளியாக சிகிச்சை பெற வருபவர்கள்கூட தங்களது வருமானத்தை மெய்ப்பிப்பதற்கு பிபிஎல் (BPL) ரேஷன் கார்டைக் கையோடு எடுத்துவரவும், ஜிப்மர் மருத்துவமனையில் மாதத்துக்கு 2499/- ரூபாய்க்கும் கீழே வருமானம் உள்ளவர்களுக்கு மட்டும்தான் இலவச சிகிச்சை என ஜிப்மர் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். இது எல்லாவிதமான சிகிச்சைகளுக்கும் இனி கட்டணம் வசூலிக்கப்படும் என்பதையே இந்த அறிவிப்பு காட்டுகிறது.

ஜிப்மர் மருத்துவமனை அரசு மருத்துவமனையா அல்லது தனியார் மருத்துவமனையா எனக் கேள்வி எழுகிறது. சிகிச்சை பெற வரும் நோயாளி கையோடு ரேஷன் கார்டை எடுத்துவர வேண்டும் என்பது நடைமுறை சாத்தியமற்றது மட்டுமின்றி, சட்டவிரோதமானதும்கூட. இந்த உத்தரவைப் பிறப்பித்த இயக்குநரை வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்த உத்தரவை உடனே திரும்பப் பெற வேண்டும்" என்று குறிப்பிட்டார்.

ஜிப்மர் தரப்பில் தொடர்புகொண்டால் யாரும் தொலைபேசி இணைப்பையே எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்