வயதானவர்களையும் ஏமாற்றி திமுக ஓட்டு வாங்கியது: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

முதியோர் உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும் என்று கூறி வயதானவர்களை திமுக ஏமாற்றி ஓட்டு வாங்கியது என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.

வேலூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் காட்பாடியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் இன்று (செப்.23) நடைபெற்றது. அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, கே.சி.வீரமணி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி, சேவூர் ராமச்சந்திரன், முக்கூர் சுப்பிரணியம், மாவட்டச் செயலாளர்கள் எஸ்.ஆர்.கே.அப்பு (வேலூர் மாநகரம்), வேலழகன் (புறநகர்) மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

‘‘உள்ளாட்சித் தேர்தல் என்பது மிக முக்கியமானது. மக்களிடம் நேரடியாகத் தொடர்புடையது உள்ளாட்சித் துறைதான். நடந்து முடிந்த தேர்தலில் திமுக சார்பில் 525 அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. ஆனால், ஒருசில அறிவிப்புகளை வெளியிட்டு தேர்தல் நேர வாக்குறுதியை நிறைவேற்றியதாகப் பொய் கூறி வருகின்றார். தேர்தல் நேரத்தில் எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்பதற்காக ஸ்டாலின் பொய்யான வாக்குறுதிகளை அறிவித்தார்.

அதை நம்பி மக்கள் கூட்டுறவு வங்கிகள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் நகைகளை அடமானம் வைத்தனர். இப்போது அங்கே முறைகேடு, இங்கே முறைகேடு என தினமும் மழுப்பலான செய்தியைச் சொல்லி வருகிறார். அத்தனையும் பொய்யான அறிவிப்பு என்பதை திமுக நிரூபித்து வருகின்றது. முதியோர் உதவித்தொகை 1500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று கூறி வயதானவர்களையும் ஏமாற்றி திமுக ஓட்டு பெற்றது. கவர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டு தில்லுமுல்லு செய்து ஆட்சிக்கு வந்தபிறகு நேர்மறைப் பேச்சாகப் பேசுவதை நாம் பார்க்கிறோம்.

இந்தியாவிலே தமிழ்நாட்டில்தான் அதிக தொலைவு தார்ச்சாலை அமைக்கப்பட்ட மாநிலம் என்பதை திமுக அரசு ஒப்புக்கொண்டுள்ளது. தொழில் முதலீட்டாளர் மாநாடு நடத்தி அதிக நிறுவனங்களை ஒப்பந்தம் செய்தோம். நாம் போட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தைத்தான் அவர்கள் கொண்டுவந்ததாகக் காட்டுகிறார்கள்.

திமுக ஆட்சியில் விவசாயிகள் இக்கட்டான நிலையில் உள்ளனர். விவசாயிகளை வஞ்சிக்கும் அரசாக திமுக அரசு இருக்கிறது. நாம் கொண்டுவந்த திட்டங்களை எல்லாம் பொதுமக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள். வீடு வீடாகச் சென்று வாக்குகளைச் சேகரியுங்கள். ஒவ்வொரு ஓட்டும் முக்கியம். திமுக தில்லுமுல்லு செய்வதில் திறமையானவர்கள். அவர்களை நாம் கவனமாகப் பார்க்க வேண்டும். உருட்டல் மிரட்டலுக்கு பயப்பட வேண்டாம். எது வந்தாலும் எதிர்க்கும் சக்தி நமக்கு உள்ளது.

நம் மீது மக்களுக்கு எந்த விதத்திலும் கோபம் கிடையாது. நடந்து முடிந்த தேர்தலில் சுணக்கம் ஏற்பட்டிருந்தது. கடுமையாக உழைக்க வேண்டும். திமுக தலைவர் ஸ்டாலின் சொன்ன பொய்யான தேர்தல் பிரச்சாரத்தை நாம் எடுத்துச் சொல்லி மக்களுக்குப் புரியவைக்க வேண்டும். நமக்குள் இருக்கும் சிறு சிறு கருத்து வேறுபாடுளை மறந்து உள்ளாட்சித் தேர்தலில் அனைவரும் வெற்றிபெற வேண்டும்’’.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE