போட்டி போட்டுச் செயல்படும் அமைச்சர்கள்; நம்மை விட வேகமான ஆட்சி இந்தியாவில் எந்த மாநிலத்திலும் கிடையாது: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

By செய்திப்பிரிவு

திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்த நான்கு மாத காலத்தில் ஒரு லட்சம் இணைப்புகளைக் கொடுக்கப் போகிறோம். இதைவிட வேகமான ஆட்சி இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் கிடையாது என்று முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

விவசாயிகளுக்கு ஒரு லட்சம் விவசாய மின் இணைப்பு ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் இன்று வழங்கினார்.

அதைத் தொடர்ந்து அவர் பேசியதாவது:

''தமிழ்நாடு மின்சார வாரியம் - மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் - மின் தொடரமைப்புக் கழகம் ஆகியவற்றின் சார்பில் ஒரு லட்சம் உழவர்களுக்கு புதிய மின் இணைப்பு ஆணை வழங்குகிறது. ‘ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்’ என்று சொன்னவர் பேரறிஞர் அண்ணா. இன்று லட்சக்கணக்கான உழவர்களின் முகத்தில் மலர்ச்சியை உருவாக்கக்கூடிய வகையில் ஒரு திட்டமாக, இந்தத் திட்டம் அமைந்துள்ளது.

மே மாதம் 7ஆம் நாள் நான் தமிழ்நாட்டின் முதல்வராகப் பதவியேற்றேன் என்று சொல்லமாட்டேன், பொறுப்பை ஏற்றேன், அதுதான் சரியாக இருக்கும். அன்று முதல் இன்றுவரை நாள்தோறும் ஏராளமான திட்டங்கள் அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றன. அப்படி அறிவிக்கப்பட்ட திட்டங்கள் மக்களுடைய பயன்பாட்டிற்குப் போகக்கூடிய வகையிலே இருக்க வேண்டும் என்பதுதான் அரசினுடைய திட்டமாக இருக்கிறது.

அமைச்சரவையில் இருக்கக்கூடிய அனைத்து அமைச்சர்களும் போட்டி போட்டுக்கொண்டு செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். சில திட்டங்கள் அந்த நேரத்துக்குத் தேவையானதாக இருக்கும். சில திட்டங்கள் சில ஆண்டுகளுக்குத் தேவையானதாக இருக்கும். சில திட்டங்கள்தான் தலைமுறை தலைமுறைக்குப் பயனுள்ளதாக இருக்கும். அந்த வரிசையில் தலைமுறை தலைமுறைக்குப் பயனுள்ளதான திட்டம்தான், இங்கே தொடங்கி வைக்கப்பட்டு இருக்கிறது. ஒரு லட்சம் மின் இணைப்புகள் வழங்கும் திட்டமாக இது தொடங்கி வைக்கப்பட்டு இருக்கிறது.

அதிலும் குறிப்பாக, உழவர்கள் பயன்பெறுவதால், தங்களுக்கு மட்டுமல்ல, இந்த மாநிலத்து மக்களுக்கே உணவுப் பொருட்களை உற்பத்தி செய்து தரப் போகிறார்கள். அத்தகைய மகத்தான திட்டம்தான் இந்தத் திட்டம்.

கடந்த 2006-11 திமுக ஆட்சிக் காலத்தில், 2 லட்சத்து 9 ஆயிரத்து 910 பேருக்கு புதிய மின் இணைப்புகள் தரப்பட்டன. ஆனால் 2011-16ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் 82 ஆயிரத்து 987 பேருக்கும், அதைத் தொடர்ந்து 2016-21 ஆட்சியில் 1 லட்சத்து 38 ஆயிரத்து 592 பேருக்கும்தான் புதிய இணைப்புகள் தரப்பட்டன. அதிமுக ஆட்சிக்கும் திமுக ஆட்சிக்குமான வேறுபாடு என்பது இதுதான்!

பத்தாண்டுக் காலத்தில் சுமார் 2 லட்சம் இணைப்புகள்தான் அதிமுக ஆட்சியில் தரப்பட்டன. ஆனால் நாம் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த நான்கு மாத காலத்தில் ஒரு லட்சம் இணைப்புகளைக் கொடுக்கப் போகிறோம். இன்னும் பெருமையாகச் சொல்ல வேண்டும் என்றால், இதைவிட வேகமான ஆட்சி இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் கிடையாது.

திமுக ஆட்சி என்பதே உழவர்களின் ஆட்சியாக, வேளாண்மைப் புரட்சி செய்யும் ஆட்சியாகத்தான் எப்போதும் இருந்துள்ளது. இந்த மண்ணையும் மக்களையும் காப்பதில் யாருக்கும் சளைக்காதவர்கள்தான் திமுகவினர் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது.

காவிரி நதிநீர்ப் பங்கீடு போன்ற பெரிய பிரச்சினையாக இருந்தாலும், வேளாண் மக்களின் சிறு கோரிக்கையாக இருந்தாலும், அதற்கு உடனடியாகச் செவி மடுத்து அதனை நிறைவேற்றித் தரக்கூடிய ஆட்சிதான் திமுக ஆட்சி.

2006-ம் ஆண்டு தேர்தலில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் கூட்டுறவு வங்கிகளில் உழவர்கள் வாங்கிய 7000 கோடி ரூபாய்க் கடனை ரத்து செய்தவர் கருணாநிதி. இன்றும் அதை நினைத்துப் பார்க்கிறேன். ஒரு முதல்வர் பதவியேற்று கொண்டால் நேரடியாக கோட்டைக்குப் போவார்கள், கோப்புகளைப் பார்த்து அதில் கையெழுத்து போடுவார்கள். இதுதான் மரபு வழியாக நடந்துகொண்டு இருக்கிறது. ஆனால், கருணாநிதி கோட்டையில் இருக்கக்கூடிய கோப்பை விழா மேடைக்கு வரவழைத்து, அந்த விழா மேடையிலேயே கையெழுத்து போட்டு 7000 கோடி ரூபாய்க் கடனை ரத்து செய்தார்.

நிலமற்ற ஏழை உழவுத் தொழிலாளர்களுக்கு நிலமும் வழங்கப்பட்டது. 1 லட்சத்து 89 ஆயிரத்து, 719 ஏக்கர் நிலத்தை, 1 லட்சத்து 50 ஆயிரத்து 159 பேருக்கு வழங்கிய ஆட்சிதான் நம்முடைய ஆட்சி. இவை அனைத்துக்கும் மேலாக உழவர்களுக்கு இலவச மின்சாரம் அறிவித்ததும் முதல்வராக இருந்த கருணாநிதிதான். இந்த வரிசையில் ஒரு லட்சம் புதிய இணைப்புகள் என்ற இந்தப் புதிய திட்டத்தை இன்றைக்கு நாம் தொடங்கி வைத்திருக்கிறோம்.

‘ஒரு லட்சம் புதிய இணைப்புகள் வழங்குகிறோம்’ - அதிலும் பெரும்பாலும் இலவசமாக வழங்குகிறோம் என்றால், தமிழ்நாடு மின்சார வாரியம் என்பது செழிப்பாக இருக்கிறது என்று யாரும் நினைத்துவிட வேண்டாம். அது உங்களுக்கே தெரியும். செழிப்பாக அல்ல; கடந்த கால ஆட்சியாளர்கள் சீரழித்துவிட்டுப் போயிருக்கிறார்கள். இதுதான் அதிமுக ஆட்சியின் சாதனை. 1.59 லட்சம் கோடி ரூபாய்க்குக் கடனில் இருக்கிறது மின்சார வாரியம். ஆண்டுக்கு 16 ஆயிரம் கோடி ரூபாய் வட்டி கட்ட வேண்டிய நிலைமையில் இருக்கிறது. மிக அதிகமான விலை கொடுத்து மின்சாரம் கொள்முதல் செய்துள்ளார்கள். குறுகியகால ஒப்பந்தங்களாக இல்லாமல், மிக நீண்டகால ஒப்பந்தங்களாகப் போட்டுள்ளார்கள். இதைவிடக் கொடுமை என்னவென்றால், அனல் மின் நிலையங்களில் நிலக்கரி பதிவேட்டில் இருப்பதும் - இருப்பு இருப்பதும் வித்தியாசமாக உள்ளது. அதிலும் முறைகேடுகள்.

கடந்த 10 வருட ஆட்சியில் பராமரிப்புப் பணிகளே நடைபெறவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் கூடுதலாக நிறுவப்பட்ட நிறுவு சக்தி 1481 மெகாவாட். அதில் 1428 மெகாவாட் 2006-2011 கருணாநிதி முதல்வராக இருந்தபோது திட்டமிடப்பட்டவை ஆகும். கூட்டிக் கழித்துப் பார்த்தால் அதிமுக ஆட்சியில், 10 ஆண்டுகளில் நிறுவப்பட்ட நிறுவு சக்தி வெறும் 53 மெகாவாட்தான். இப்படிக் கடந்த அதிமுக ஆட்சியில் மின்சார வாரியத்தின் அவலங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

ஆனால், இதிலிருந்து மின்சார வாரியத்தைக் காப்பாற்றுவதற்கான பணிகள் இப்போது தொடங்கி இருக்கின்றன. பராமரிப்புப் பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. புதிய மின் திட்டங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளோம். 17 ஆயிரத்து 980 மெகாவாட் மின்சாரத்தை வரும் பத்தாண்டுக் காலத்தில் தயாரிக்க திட்டப் பணிகள் தொடங்கி இருக்கின்றன. ஏற்கெனவே திட்டமிடுதலில் உள்ள பணிகளை விரைந்து முடிக்கச் சொல்லி இருக்கிறோம்.

சூரிய சக்தி மின்சாரத் தயாரிப்புக்கு முன்னுரிமை வழங்க இருக்கிறோம். திருவாரூரில் முதல் சூரிய சக்தி பூங்கா அமைக்கப்பட இருக்கிறது. சூரிய மின் உற்பத்தி, புனல் நீரேற்று மின் உற்பத்தி மற்றும் இயந்திர மின் திட்டங்களைத் தொடங்குவதற்கான ஆலோசனைகளை வழங்கவும், நிதி தேவையான, 1 லட்சத்து 32 ஆயிரத்து 500 கோடி ரூபாயைத் திரட்டுவதற்கும் இந்திய மரபுசாரா எரிசக்தி மேம்பாட்டு நிறுவனத்துடன் 6.9.2021 அன்று ஒப்பந்தம் போட்டிருக்கிறோம்.

மரபுசாரா எரிசக்தித் துறையில் இவ்வளவு பெரிய ஒப்பந்தத்தைப் போட்ட ஒரே மாநிலம் நம்முடைய தமிழ்நாடுதான் என்பதைப் பெருமையோடு சொல்லிக் கொள்கிறேன். எரிவாயு இயற்கை மின் திட்டங்களை எண்ணூரில் அமைக்க சாத்தியக்கூறுகளை ஆராயச் சொல்லி இருக்கிறோம். மின் இழப்பைச் சரிசெய்ய முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.

அனைத்துக்கும் மேலாக நுகர்வோர் குறைகளை உடனடியாகத் தீர்த்து வருகிறோம். ஆட்சிப் பொறுப்புக்கு வந்த ஒரு மாதத்துக்குள் ‘மின்னகம்’ என்ற குறைதீர்வு மையத்தை நான் தொடங்கி வைத்தேன். அதில் பதியப்பட்ட புகார்களில் 90 விழுக்காட்டுக்கு மேலான குறைகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது.

மக்களோடு நேரடியாக இருக்கக்கூடிய துறை மின்சாரத் துறை ஆகும். அந்தத் துறையை யாராலும் குறை சொல்ல முடியாத துறையாக ஆக்க வேண்டும் என்று அமைச்சருக்கும் துறை அதிகாரிகளுக்கும் நான் ஏற்கெனவே உத்தரவு போட்டுள்ளேன். இன்றைக்குப் புதிய இணைப்பு பெற்றவர்கள், மின்சாரத்தைத் தேவைக்கு மட்டும் பயன்படுத்துங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். மின்சாரத் தயாரிப்பு என்பதே மிகப்பெரிய செலவு வைக்கும் திட்டமாக இருக்கிறது. அதனால் முடிந்த அளவு சிக்கனமாக மின்சாரத்தைப் பயன்படுத்துங்கள்.

கடந்தகாலத் தவறுகளில் இருந்து இத்துறை மீள்வதற்கு அமைச்சர், அதிகாரிகள் மட்டும் உழைத்தால் போதாது. பொதுமக்களும் தங்களால் முடிந்த ஒத்துழைப்பைத் தர வேண்டும்.

உழவு உற்பத்தியைப் பெருக்க வேண்டும் என்ற ஒரே ஒரு நோக்கத்துடன் ஒரு லட்சம் உழவர்களுக்கு புதிய மின் இணைப்பு ஆணையை இன்று வழங்கி இருக்கிறோம். இது தமிழ்நாட்டில் உழவுப் புரட்சிக்கு அடித்தளமாக அமையட்டும்! உற்பத்திப் பரப்பு அதிகமாக இது உதவிகள் செய்யட்டும்''.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்