மருத்துவ மாணவர் சேர்க்கை; தமிழ்வழி மாணவர்களுக்கு 20% இட ஒதுக்கீடு தேவை: ராமதாஸ்

By செய்திப்பிரிவு

மருத்துவ மாணவர் சேர்க்கையில் தமிழ்வழி மாணவர்களுக்கு 20% இட ஒதுக்கீடு தேவை என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (செப். 22) வெளியிட்ட அறிக்கை:

"நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, மருத்துவப் படிப்பில் சேரும் தமிழ்வழி மாணவர்களின் எண்ணிக்கை எந்த அளவுக்கு குறைந்திருக்கிறது என்பது குறித்த புள்ளிவிவரங்கள் நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன. இவை ஏற்கெனவே கடந்த ஆண்டு தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி வெளியான தகவல்கள்தான் என்றாலும் கூட, தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி வாய்ப்புகளை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தை இந்தப் புள்ளிவிவரங்கள் மீண்டும் உணர்த்துகின்றன.

மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வால் தமிழகத்தில் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள தாக்கங்கள் குறித்தும், அதைப் போக்குவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் பரிந்துரைப்பதற்காக தமிழக அரசால் அமைக்கப்பட்ட நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கை பொதுமக்கள் பார்வைக்காக வெளியிடப்பட்டுள்ளது.

அதில் இடம்பெற்றுள்ள அதிர்ச்சியான உண்மை என்னவெனில், தமிழகத்தில் கடந்த 2020-21ஆம் ஆண்டில் மருத்துவப் படிப்பில் சேர்ந்த மாணவர்களில் 98.01 விழுக்காட்டினர் ஆங்கில வழியில் படித்தவர்கள் என்பதும், தமிழ் வழியில் படித்தவர்களில் 1.99 விழுக்காட்டினருக்கு மட்டும்தான் மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்திருக்கிறது என்பதுதான். தமிழகத்தில் ஆங்கில வழியில் படித்தால் மட்டும்தான் மருத்துவப் படிப்பில் சேர முடியும் என்பதை விடத் தமிழர்களுக்கு மிகப்பெரிய அவமானம் இருக்க முடியாது.

மருத்துவப் படிப்பில் சேரும் தமிழ்வழி மாணவர்களின் எண்ணிக்கை குறைந்ததற்குக் காரணம் நீட் தேர்வுதான் என்று கூறப்படுகிறது. அதில் ஓரளவு உண்மை இருப்பதை மறுக்க முடியாது. ஆனால், அதைவிட முக்கியக் காரணம் தமிழகத்தில் கடந்த 40 ஆண்டுகளாக வலிந்து திணிக்கப்படும் ஆங்கில வழிக்கல்வி தான்.

2010-11ஆம் கல்வியாண்டு முதல் 2020-21ஆம் கல்வியாண்டு வரை மருத்துவப் படிப்பில் சேர்ந்த மாணவர்களின் விவரங்களை ஆய்வு செய்தால் இந்த உண்மை புலப்படும். நீட் தேர்வு வருவதற்கு முன்பு 2010-ம் ஆண்டில் மருத்துவப் படிப்பில் சேர்ந்தவர்களில் தமிழ்வழி மாணவர்களின் எண்ணிக்கை 19.79%. நீட் தேர்வு கட்டாயமாக்கப்படுவதற்கு முந்தைய 2016-17ஆம் ஆண்டில் இது 14.80% ஆகக் குறைந்தது. ஆனால், அதற்கு அடுத்த ஆண்டுகளில் இந்த அளவு முறையே 1.6%, 3.29%, 1.69% எனப் படிப்படியாகக் குறைந்து கடந்த ஆண்டில் 1.99% என்ற அளவில் இருந்தது. இந்த வீழ்ச்சிக்குக் காரணம் நீட் தேர்வு தான்.

அதே நேரத்தில், நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்படுவதற்கு முந்தைய 2016-17ஆம் ஆண்டில் கூட 14.80% தமிழ் வழி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர் என்பதும், அதற்கு முந்தைய ஆண்டுகளில் கூட 83%க்கும் கூடுதலான இடங்களைக் கைப்பற்றியிருப்பவர்கள் ஆங்கில வழி மாணவர்கள் என்பதும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டிய விஷயங்கள் ஆகும். இந்த வீழ்ச்சிக்குக் காரணம் நீட் தேர்வு அல்ல... தமிழ்வழிக் கல்வியைப் புறக்கணித்து ஆங்கில வழிக் கல்வி திணிக்கப்பட்டதுதான் என்பது மறுக்க முடியாத உண்மை.

நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகளை ஓரளவு களையும் வகையில், மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் கடந்த ஆண்டு இயற்றப்பட்டது. அதனால், மருத்துவப் படிப்பில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை மூன்றிலிருந்து 336 ஆக 100 மடங்குக்கும் மேல் அதிகரித்தது. ஆனால், தமிழ் வழியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 0.30% மட்டும்தான் அதிகரித்துள்ளது. இதற்கான முக்கியக் காரணம் அரசுப் பள்ளிகளிலும் ஆங்கில வழியில் படித்தவர்கள் கணிசமான அளவில் மருத்துவக் கல்வி வாய்ப்பைக் கைப்பற்றுகின்றனர் என்பதுதான். இதை நியாயப்படுத்த முடியாது.

ஆங்கில வழிக் கல்விக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் காரணமாக, தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் ஆங்கில வழியில் பிளஸ் 2 பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தும், தமிழ் வழியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டும் வருகிறது. 2011-ம் ஆண்டில் 5.09 லட்சமாக இருந்த தமிழ்வழி மாணவர்களின் எண்ணிக்கை, 2020-ம் ஆண்டில் 4.23 லட்சமாகக் குறைந்துவிட்டது. அதே நேரத்தில், ஆங்கில வழியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை இதே காலகட்டத்தில் 2.05 லட்சத்திலிருந்து 3.55 லட்சமாக 75% அதிகரித்திருக்கிறது. தமிழக மாணவர்கள் தாய்மொழிவழிக் கல்வியைக் கைவிட்டு, பிற மொழிவழிக் கல்வி முறைக்குத் திணிக்கப்படுகிறார்கள் என்பது மிகவும் கவலையளிக்கும் உண்மையாகும்.

இந்த நிலையை மாற்றி தமிழ்வழிக் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டியது அரசின் கடமையாகும். இதற்கான தீர்வு தமிழ்வழி மாணவர்களை ஊக்குவிப்பதுதான். தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 20% இட ஒதுக்கீடு வழங்கப்படுவதைப் போல மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட அனைத்து உயர்கல்வி மாணவர் சேர்க்கையிலும் 20% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். அதை நடப்பாண்டு மருத்துவ மாணவர் சேர்க்கையில் நடைமுறைப்படுத்த உடனடியாக அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட வேண்டும். ஒருவேளை நீட் ரத்து செய்யப்பட்டாலும் கூட தமிழ்வழி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு தொடர வேண்டும்".

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்