திருவண்ணாமலையில் இளம்பெண்ணின் கர்ப்பப்பை நீர் கட்டியை அகற்றும்போது தவறான சிகிச்சை? - தனியார் மருத்துவமனை முன்பு உறவினர்கள் சாலை மறியல்  

By ஆர்.தினேஷ் குமார்

திருவண்ணாமலையில் கர்ப்பப்பையில் நீர் கட்டியை அகற்ற, தவறான சிகிச்சை அளித்ததால் இளம்பெண்ணின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது எனக் கூறி, பெண்ணின் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை அடுத்த ரங்கப்பனூர் கிராமத்தில் வசிப்பவர் முருகன். இவரது மனைவி ராஜகுமாரி (39). இவரது கர்ப்பப்பையில் நீர் கட்டி இருந்ததால், திருவண்ணாமலை நகரம் பே கோபுர முதல் தெருவில் உள்ள ராஜ் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், லேப்ரோஸ்கோபி மூலம் நேற்று முன்தினம் (செப். 20) நீர் கட்டியை அகற்றும்போது தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால், ராஜகுமாரியின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது எனக் கூறி, ராஜ் மருத்துவமனை முன்பு அவரது உறவினர்கள் நேற்று (செப். 21) மாலை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் திருவண்ணாமலை உதவி எஸ்.பி. கிரண்ஸ்ருதி தலைமையிலான காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உறவினர்கள் கூறும்போது, "ராஜகுமாரியின் வயிற்றுப் பகுதியில் 2 துளைகள் இட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு திடீரென இதயம் பாதிக்கப்பட்டு, மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக, சிகிச்சை அளித்த மருத்துவர் கதிரவன் தெரிவித்தார். இதற்கிடையில், உடனடியாக உயர் சிகிச்சை தேவை எனக்கூறி, ஆம்புலன்ஸ் மூலமாக, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தவறான சிகிச்சையால் ராஜகுமாரியின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டது குறித்து நாங்கள் குற்றம் சாட்டியதை அடுத்து, ராஜ் மருத்துவமனைக்கு ஆதரவாக முக்கிய பிரமுகர்கள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதனால், சந்தேகமடைந்த நாங்கள், நீதி கேட்டு ராஜ் மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டுள்ளோம். தவறான சிகிச்சை அளித்த மருத்துவர் கதிவரன் உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர். காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. முன்னதாக ராஜ் மருத்துவமனை மூடப்பட்டது.

சிபிஎம் போராடும்

இதற்கிடையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் சிவக்குமார் தலைமையிலான குழுவினர், ராஜகுமாரியின் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், உங்களுக்கு நீதி கிடைக்க உறுதுணையாக இருப்போம், சாலை மறியலைக் கைவிடுங்கள் எனக் கேட்டுக்கொண்டனர். அதன்பேரில் 2 மணி நேரம் நடைபெற்ற சாலை மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது.

இது குறித்து மாவட்டச் செயலாளர் சிவக்குமார் கூறும்போது, “தவறான சிகிச்சையால் ராஜகுமாரியின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அவரது கணவர் முருகன் உள்ளிட்டோர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து திருவண்ணாமலை நகர காவல் நிலையத்தில் ராஜகுமாரியின் கணவர் முருகன் மூலம் புகார் கொடுக்கப்பட்டு, சிஎஸ்ஆர் பெறப்பட்டுள்ளது. ராஜகுமாரியின் உடல் நிலையில், எந்த முன்னேற்றமும் இல்லை எனத் தெரியவருகிறது. அவரது உயிருக்கு, ஏதாவது நேர்ந்தால், மருத்துவர் கதிரவனைக் கைது செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டத்தை முன்னெடுக்கும்” எனத் தெரிவித்தார்.

உடல் நிலையில் முன்னேற்றம் இல்லை

ராஜகுமாரியின் உடல்நிலை குறித்து திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தரப்பில் கேட்டபோது, “அவருக்கு செயற்கை சுவாசம் மூலமாகவும், உயிர் காக்கும் மருந்துகளைக் கொண்டும் சிகிச்சை அளித்து வருகிறோம். தனியார் மருத்துவமனையில் இருந்து கொண்டு வரப்பட்ட நிலையில்தான் இருக்கிறார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை. இப்போதுள்ள நிலையில், அவரை பிற மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதும் ஆபத்து. அவரைக் காப்பாற்றத் தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளோம். இறைவனைப் பிரார்த்திப்போம்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

13 mins ago

தமிழகம்

32 mins ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்