ஆவின் பால் விலை குறைப்பு எதிரொலி: தினமும் 1.98 லட்சம் லிட்டர் கூடுதலாக விற்பனை

By மனோஜ் முத்தரசு

ஆவின் பாலின் விலையை லிட்டருக்கு ரூ.3 குறைத்ததன் எதிரொலியாக, தமிழகத்தில் 1.98 லட்சம் லிட்டர் பால் கூடுதலாக விற்பனையாகி வருகிறது.

தமிழக பால்வளத் துறையின்கீழ் செயல்படும் ஆவின் நிறுவனம், தமிழகம் முழுவதுமிருந்து நாளொன்றுக்கு 41 லட்சம் லிட்டர் பால் வரை கொள்முதல் செய்கிறது. இதில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் மூலமாக நாளொன்றுக்கு சராசரியாக 12.65 லட்சம் லிட்டர், 25 மாவட்ட ஒன்றியம் மூலமாக சராசரியாக 12.02 லட்சம் லிட்டர் என மொத்தம் 24.67 லட்சம் லிட்டர் பாலை நாளொன்றுக்கு விற்பனை செய்தது. மீதமுள்ள பாலை, ஆவின் பால் பொருட்கள் செய்யப் பயன்படுத்துகிறது.

இந்நிலையில் தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதும், ஆவின் பால் விலையை லிட்டருக்கு ரூ.3 குறைப்பதாக அறிவித்தார். புதிய விலையுடனான விற்பனை கடந்த மே 16-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. அதன்படி, ஆவினின் இருமுறை சமன்படுத்தப்பட்ட பால் (மெஜந்தா) அட்டைதாரர்களுக்கு அரை லிட்டர் ரூ.18 ஆகவும், அதிகபட்ச சில்லறை விற்பனை விலை ரூ.18.50 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல சமன்படுத்தப்பட்ட பால் (நீலம்) ரூ.18.50, ரூ.20 ஆகவும், நிலைப்படுத்தப்பட்ட பால் (பச்சை) ரூ.21, ரூ.22 ஆகவும், நிறை கொழுப்புப் பால் (ஆரஞ்சு) அட்டைகளுக்கு ரூ.23 ஆகவும், சில்லறைகளுக்கு ரூ.24 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. ஆவின் பால் விலை குறைப்பு காரணமாக ஆண்டுக்கு சுமார் ரூ.200 கோடி வரை இழப்பு ஏற்படும் எனக் கூறப்பட்டது.

இது தொடர்பாக ஆவின் மேலாண்மை இயக்குநர் கே.எஸ்.கந்தசாமி கூறியதாவது:

லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்பட்ட பின்னர் ஆவின் பாலின் விற்பனை அதிகரித்துள்ளது. ஆவின் பால் வகைகளின் விற்பனையானது செப்டம்பர் 20-ம் தேதி வரை கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் (சென்னையில்) மூலமாக நாள் ஒன்றுக்குச் சராசரியாக 13.41 லட்சம் லிட்டரும், 25 மாவட்ட ஒன்றியம் மூலமாக சராசரியாக 13.24 லட்சம் லிட்டரும் என மொத்தம் 26.65 லட்சம் லிட்டராக உள்ளது. இது விலை குறைப்புக்கு முன்பு இருந்ததைவிட 1.98 லட்சம் லிட்டர் அதிகமாகும். அதேபோல, ஆவின் பால் பொருட்களின் விற்பனையும் அதிகரித்துள்ளது.

பால் பொருட்கள் மாதம் ரூ.48.16கோடி அளவில் விற்பனை ஆகிறது. இது முன்பு இருந்ததைவிட தற்போது ரூ.1.16 கோடிஅதிகமாகும். மேலும், நிறுவனத்தின் இதர தேவையற்ற செலவுகள் கண்டறியப்பட்டு, குறைக்கப்பட்டு வருகிறது. இதனால் விலை குறைப்பு காரணமாக ஏற்பட்ட இழப்பு படிப்படியாகக் குறைக்கப்பட்டு வருகிறது. அதேபோல, ஆவின் பால் மற்றும் பால் பொருட்களின் விற்பனையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்