காந்தியடிகளின் ஆடைப் புரட்சி நூற்றாண்டு விழாவில் பங்கேற்க காந்தியின் பேத்தி இன்று மதுரை வந்தார்.
கடந்த 1948-ம் ஆண்டு ஜனவரி 30-ம் தேதி காந்தி கொலை செய்யப்பட்டார். அதன் பிறகு காந்தியின் பெருமைகளைப் போற்றும் வகையிலும், அவர் விட்டுச் சென்ற பணிகளையும், கொள்கைகளையும் அடுத்த தலைமுறையினருக்குக் கடத்துவதற்காக நாடு முழுவதும் மதுரை, மும்பை, டெல்லி, பாட்னா, கல்கத்தா, அகமதாபாத், வார்தா ஆகிய ஏழு இடங்களில் நினைவு காந்தி அருங்காட்சியகங்கள் அமைக்கப்பட்டன. இதில் மதுரை அருங்காட்சியத்திற்கு மற்ற அருங்காட்சியகங்களை விடப் பல்வேறு பெருமைகள் உண்டு.
தென் இந்தியா முழுமைக்குமாக 1959-ம் ஆண்டு தொடங்கப்பட்ட மதுரை காந்தி அருங்காட்சியகம், மறைந்த முன்னாள் பிரதமர் நேருவால் தொடங்கி வைக்கப்பட்டது என்ற பெருமை கொண்டது. மேலும், காந்தியை கோட்சே சுட்டபோது காந்தியடிகள் தன் உடலில் அணிந்திருந்த ஆடையானது காந்தி அருங்காட்சியகத்திற்குத்தான் கொண்டு வரப்பட்டது. ரத்தக் கறை படிந்த காந்தியடிகளின் இறுதி உடை ஏன் மதுரைக்குக் கொண்டு வரப்பட்டது என்பதற்கான காரணமும், மதுரைக்குப் பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது.
கடந்த 1921 ஆம் ஆண்டு செப்டம்பர் 21-ம் தேதி ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வந்த காந்தியடிகள், மதுரை மேலமாசி வீதியில் தங்கியிருந்தார். அப்போது மதுரையில் ஏழை, எளிய மக்களும், விவசாயிகளும் மேலாடை அணியக் கூட வசதி இல்லாமல் வறுமையில் இருந்ததைக் கண்டு மனம் வருந்தினார். மேலும் அவர், தன் நாட்டு மக்களின் அன்றைய நிலையைக் கண்டு நாடு முழுமைக்கும் என்றைக்குத் தம் மக்கள் மேலாடை அணியும் நிலை வருமோ அன்று வரை தானும் மேலாடை அணிவதில்லை என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க உறுதிமொழியை செப்டம்பர் 22-ல் எடுத்தார். இந்த நிகழ்வு அண்ணல் காந்தியடிகளின் ஆடைப்புரட்சி என்று குறிப்பிடப்படுகின்றது. அதன்பிறகு வாழ்நாள் முழுவதும் எளிய கதர் ஆடைகளைத்தான் காந்தி அணிந்தார்.
» மதுரையில் 4 வார்டுகளில் 100% கரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை
» நீட் தேர்வு விலக்கு மசோதா; குடியரசுத்தலைவர் நிச்சயம் ஒப்புதல் அளிப்பார்: மா.சுப்பிரமணியன்
சுதந்திர போராட்டக் காலகட்டத்தில் அவரது அடையாளமாகவும், எளிமையாகவும் அந்த ஆடைகள் பார்க்கப்பட்டன. இந்த ‘ஆடைப்புரட்சி’ உறுதிமாழி நிகழ்வு ஏற்பட்டு நாளையுடன் (செப்டம்பர் 22ஆம் தேதி) ஒரு நூற்றாண்டு ஆகிறது. இந்த ஆடைப் புரட்சி நூற்றாண்டு விழாவைப் போற்றும் வகையில் மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தின் ஒருங்கிணைப்பில் இந்தியாவில் உள்ள அனைத்து காந்திய நிறுவனங்களும் இணைந்து கொண்டாட உள்ளன.
காந்தியடிகளின் ஆடைப் புரட்சி நடைபெற்ற 251-ஏ, மேலமாசி வீதியில் ஆடைப்புரட்சியை நினைவு கூறும் வகையில் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக காந்தியடிகள் மற்றும் ராஜாஜியின் பேத்தியான தாரா காந்தி பட்டாச்சார்யா, இன்று மாலை மதுரை காந்தி அருங்காட்சியத்திற்கு வந்தார். அவரை காந்தி அருங்காட்சியக நிர்வாகிகள் வரவேற்றனர்.
இதுகுறித்து காந்தி அருங்காட்சியக இயக்குநர் கே.ஆர்.நந்தா ராவ் கூறுகையில், ‘‘இந்த நூற்றாண்டு விழாவினையொட்டி 'Development and Democracy'; 'வளர்ச்சி மற்றும் ஜனநாயகம்' என்னும் தலைப்பிலான கட்டுரைகள் மற்றும் வாழ்த்துச் செய்தி கொண்ட நூற்றாண்டு விழா சிறப்பு மலரை வெளியிடவிருக்கிறோம். தேசிய அளவில் அறிஞர் பெருமக்கள் இந்த மலரில் கட்டுரைகள் எழுதியுள்ளனர். நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்புப் படிக்கும் மாணவ மாணவியருக்கு 'அரையாடையில் அண்ணல்' என்னும் தலைப்பில் ஓவியப் போட்டியை நடத்தினோம்.
இந்த ஓவியப் போட்டியில் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் இருந்து மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். இதில் சிறப்பாகத் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியருக்கு நூற்றாண்டு விழாவில் பரிசுகள் வழங்கப்படுகின்றன. அதேபோல் கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட உள்ளன’’ என்று தெரிவித்தார்.
விழாவில் நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியக நிர்வாகிகள், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி பி.புகழேந்தி, மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர் மற்றும் பலர் கலந்துகொள்கின்றனர். காலை 9 மணிக்கு காந்தியடிகள் அரையாடையுடன் மேலமாசி வீதி பொதுக்கூட்டத்தில் பேசிய இடத்தில் (பொட்டலில்) காந்தியடிகளின் சிலைக்கு விழாவில் பங்கேற்கும் சிறப்பு விருந்தினர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள். அதன்பின் காந்தி அருங்காட்சியகத்தில் காந்தியடிகளின் ஆடைப் புரட்சி நூற்றாண்டு விழா நடக்கிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago