வசீம் அக்ரம் கொலை வழக்கில் சரணடைந்த 6 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல்

By ந.சரவணன்

வாணியம்பாடி வசீம் அக்ரம் கொலை வழக்கில் தஞ்சாவூர் நீதிமன்றத்தில் சரணடைந்த 6 பேரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க வாணியம்பாடி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி காளிமுத்துவேல் இன்று உத்தரவிட்டார்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி ஜீவா நகரைச் சேர்ந்தவர் மனிதநேய ஜனநாயகக் கட்சியின் முன்னாள் மாநில துணைச்செயலாளர் வசீம் அக்ரம் (42). இவர் கடந்த 10-ம் தேதி ஜீவா நகரில் தொழுகை முடிந்து வீடு திரும்பியபோது, மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இந்தக் கொலை வழக்கில் சென்னையைச் சேர்ந்த 2 பேர், வாணியம்பாடியைச் சேர்ந்த 5 பேர் என 7 பேரைத் தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கில் முக்கிய நபர்களாகத் தேடப்பட்டு வந்த டீல் இம்தியாஸ் சிவகாசி நீதிமன்றத்திலும், செல்வகுமார், முனீஸ்வரன், அஜய், அகஸ்டின், பிரவீன்குமார் மற்றும் சத்தியசீலன் ஆகிய 6 பேர் தஞ்சாவூர் நீதிமன்றத்திலும் சரணடைந்தனர்.

இந்நிலையில், தஞ்சாவூர் நீதிமன்றத்தில் சரணடைந்த 6 பேர், வாணியம்பாடி குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று மதியம் நீதிபதி காளிமுத்துவேல் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி காளிமுத்துவேல் 6 பேரையும் 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து, 6 பேரும் வேலூர் மத்திய ஆண்கள் சிறைக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டனர்.

இதற்கிடையே, வசீம் அக்ரம் கொலை வழக்கில் சரணடைந்த செல்வகுமார் உட்பட 6 பேரை, 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என வாணியம்பாடி குற்றவியல் நீதிமன்றத்தில் வாணியம்பாடி நகரக் காவல் துறை சார்பில் இன்று மனு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், வசீம் அக்ரம் கொலை வழக்கில் முக்கிய நபரான டீல் இம்தியாஸை ஓரிரு நாளில் வாணியம்பாடி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிவகாசி காவல் துறையினர் ஏற்பாடு செய்து வருவதாகத் தெரிகிறது.



VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE