சுரங்கப்பாதையில் தேங்கிய மழை நீரில் சிக்கிய பெண் மருத்துவர் பலி; ரூ.5 கோடி இழப்பீடு: மார்க்சிஸ்ட் எம்எல்ஏ வலியுறுத்தல்

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய தண்ணீரில் சிக்கி உயிரிழந்த பெண் மருத்துவர் குடும்பத்தினருக்கு ரூ.5 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என கந்தர்வக்கோட்டை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ எம்.சின்னதுரை வலியுறுத்தினார்.

துடையூரைச் சேர்ந்தவர் சி.சத்யா (32). கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அரசு மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரிந்தார். இவர், தனது மாமியார் ஜெயம் (65) என்பவருடன் காரில் துடையூருக்கு இரு தினங்களுக்கு முன்பு சென்றபோது, துடையூர் ரயில்வே சுரங்கப் பாலத்தில் தேங்கியிருந்த மழை நீரில் கார் சிக்கியது.

பின்னர், மூச்சுத்திணறல் ஏற்பட்டு சத்யா உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு, ரயில்வே துறை அலுவலர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளது.

ரயில்வே சுரங்கப் பாதையில் மூழ்கிக் கிடக்கும் கார். | உயிரிழந்த மருத்துவர் சி.சத்யா

இந்நிலையில், சம்பவ இடத்தை வட்டாட்சியர் பெரியநாயகி உள்ளிட்ட அலுவலர்களுடன் கந்தர்வக்கோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை இன்று ஆய்வு செய்தார்.

அதன் பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

”துடையூரில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற இப்பகுதி மக்களின் கோரிக்கையை ரயில்வே நிர்வாகம் நிராகரித்துவிட்டு, காவல் துறையினரைக் கொண்டு பொதுமக்களை அச்சுறுத்தி சுரங்கப் பாதை அமைக்கப்பட்டது.

தேங்கிய மழை நீரில் சிக்கிய மருத்துவர் உயிரிழந்த கோரச் சம்பவம் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. தாழ்வாக அமைப்பதால் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படும் எனத் தெரிந்தே கட்டப்பட்டு இருப்பது கண்டிக்கத்தக்கது.

திறக்கப்பட்டுள்ள ரயில்வே கேட்டுக்குப் பணியாளரை உடனே நியமிக்க வேண்டும். மேம்பாலம் கட்டுவதற்கான பணிகளை மத்திய அரசு உடனே தொடங்க வேண்டும். சத்யாவின் குடும்பத்தினருக்கு ரூ.5 கோடியை மத்திய அரசு இழப்பீடாக வழங்க வேண்டும்”.

இவ்வாறு சின்னதுரை எம்எல்ஏ தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE