என்னிடம் ரூ.5,600 மட்டும்தான் எடுத்தார்கள்; 7-வது படிக்கும்போதே பென்ஸ் கார் வைத்திருந்தேன்: கே.சி.வீரமணி பேட்டி

By ந. சரவணன்

''லஞ்ச ஒழிப்பு போலீஸார் எனது வீட்டில் இருந்து வெறும் ரூ.5,600 மட்டும்தான் எடுத்தார்கள். லட்சக்கணக்கில் பணமோ, தங்க நகையோ எடுக்கவில்லை என்பதற்கான முழு ஆதாரம் என்னிடம் உள்ளது. உள்ளாட்சித் தேர்தலை மனதில் வைத்து என் மீதும், நான் சார்ந்த கட்சி மீதும் தவறான கருத்தைப் பரப்புகிறார்கள்'' என அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி தெரிவித்துள்ளார்.

அதிமுக ஆட்சிக் காலத்தில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சராக இருந்த கே.சி.வீரமணி, தான் பதவி வகித்த காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக 654 சதவீதம் அளவுக்கு சொத்துகளை வாங்கிக் குவித்துள்ளதாக வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீஸார் கடந்த 15-ம் தேதி வழக்குப் பதிவு செய்தனர்.

இதைத் தொடர்ந்து, செப்டம்பர் 16-ம் தேதி முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீடு உட்பட அவருக்கு நெருக்கமானவர்கள், உறவினர்கள், அதிமுக முக்கியப் பிரமுகர்களின் வீடு என மொத்தம் 35 இடங்களில் ஒரே நேரத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். காலை 6 மணியளவில் தொடங்கிய சோதனை இரவு 11 மணி வரை நீடித்தது.

இதில், வீரமணியின் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில் இருந்து ரூ.35 லட்சம் பணம், ரூ.1.80 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு ரூபாய் நோட்டுகள், 5 கிலோ தங்க நகைகள், 9 சொகுசு கார்கள், பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், வெள்ளிப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும், ஜோலார்பேட்டையில் உள்ள கே.சி.வீரமணியின் வீட்டில் ரூ.60 லட்சம் மதிப்பிலான 551 யூனிட் மணல் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் அறிக்கை வெளியிட்டனர்.

இதற்கிடையே, கே.சி.வீரமணி வீட்டில் பதுக்கப்பட்டிருந்த மணல் குறித்து அவரிடம் விளக்கம் கேட்டு, பொதுப்பணித்துறை கடிதம் அனுப்பியுள்ளதாகவும், இது தொடர்பான அறிக்கை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹாவிடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்தச் சூழ்நிலையில், திருப்பத்தூரில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:

''லஞ்ச ஒழிப்பு போலீஸார் எனது வீட்டில் இருந்து கோடிக்கணக்கான மதிப்புள்ள பொருட்களைப் பறிமுதல் செய்ததாக செய்திகள் தொடர்ந்து பத்திரிகைகள், மீடியா, சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகின்றன. உள்ளாட்சித் தேர்தல் நேரத்தில் என் மீதும், என்னுடைய கட்சி மீதும் மக்கள் மத்தியில் தவறான கருத்தும், எனக்கு அவப்பெயரும் ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்தில் இதுபோன்ற தவறான செய்திகள் பரப்பப்படுகின்றன.

நடந்த சம்பவங்களில் உண்மை இருந்தால் அதைப் பத்திரிகைகளில் வெளியிடலாம். பத்திரிகைகள் தர்மத்துடன் நடந்துகொள்ள வேண்டும். என்னுடைய வீட்டில் ரெய்டு நடத்தி முடிந்தபிறகு என்னென்ன எடுக்கப்பட்டது என்று என்னிடம் ஒரு நகல் அளிக்கப்பட்டிருக்கிறது. அதில் நான் கையெழுத்து போட்டிருக்கிறேன்.

என்னிடம் இருந்து 2 ஆயிரத்து 746 கிராம் தங்க நகைகள், அதாவது சுமார் 300 பவுன், 2,508 அமெரிக்க டாலர்கள் (இந்திய ரூபாய் மதிப்பில் 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்), ரொக்கப் பணமாக 1000 ரூபாய் மதிப்பிலான 10 ரூபாய்க் கட்டு ஒன்று, இதுதவிர 4 ஆயிரத்து 600 ரூபாய் என மொத்தம் 5,600 ரூபாய் மட்டுமே லஞ்ச ஒழிப்பு போலீஸார் என்னிடம் இருந்து பறிமுதல் செய்திருந்தனர்.

நான் தேர்தலில் போட்டியிட்டபோது என்னுடைய அஃபிடவிட்டிலேயே 300 பவுனுக்கும் அதிகமாக நகைகள் இருப்பதாகக் கணக்குக் காட்டியிருக்கிறேன். அதைக் குறிப்பிட்டு என்னுடைய நகைகள் என்னிடமே திருப்ப ஒப்படைக்கப்பட்டுவிட்டன. எனது மகள் ஆஸ்திரேலியாவில் கல்வி கற்க இருக்கிறார். அவர் வசதிக்காக அமெரிக்க டாலர்கள் வாங்கி வைத்திருந்தேன்.

சிறு வயதில் இருந்தே எனக்கு கார்கள் என்றால் பிரியம். நான் 7-ம் வகுப்புப் படிக்கும்போதே பென்ஸ் கார் வைத்திருந்தேன். என்னிடம் ரோல்ஸ் ராய்ஸ் கார் உள்ளது. அது பழமையான கார். வின்டேஜ் கலெக்சன்தான் அது.

எங்கள் குடும்பம் பெரிய வியாபாரக் குடும்பம். ஆண்டுதோறும் நான் வருமான வரி செலுத்துகிறேன். எல்லாவற்றுக்கும் என்னிடம் கணக்கு இருக்கிறது. கணக்கில் வராமல் எதுவுமே எங்களிடம் இல்லை.

நிலைமை இப்படி இருக்க, பொய்யான தகவல் மக்கள் மத்தியில் தொடர்ந்து பரப்பப்பட்டு வருகிறது. மணல் குவியல் இருக்கிறது என்கிறார்கள். புதிய கட்டுமானப் பணிகளுக்காக மணல் வாங்கி வைத்திருக்கிறோம். அதற்கான ஆவணங்கள், ரசீது என்னிடம் உள்ளன. குறைவான அளவில்தான் மணல் இருக்கிறது. 551 யூனிட் மணல் இருப்பதாக செய்தி வெளியாகிறது. யாருமே என்னுடைய வீட்டுக்குள் வரவில்லை. அப்படியிருக்க மணலை எப்படி அளந்திருக்க முடியும்?.

சோதனையின்போது எனது மகனுக்கு வாங்கிய மூக்குக் கண்ணாடி ரசீது, ஆர்.ஓ. சிஸ்டம் சர்வீஸ் செய்த ரசீது என ஒன்றுகூட வைக்காமல் எல்லாவற்றையும் எடுத்துச் சென்றார்கள். அன்றிரவு 10 மணிக்குத்தான் ரெய்டு முடிந்தது. அதன் பிறகுதான் அது, இது என்று பட்டியல் போட்டுக் கையெழுத்து வாங்கினார்கள். ஆனால், மாலையிலேயே கோடிக்கணக்கில் பணம், நகை, சொத்து பறிமுதல் என்று செய்தி வெளியாகிறது.

நான் மிகவும் எளிமையானவன். ஆடம்பரத்தை விரும்பாதவன். கார்கள் மீதுதான் பிரியமே தவிர மற்றபடி எதுவும் என்னிடம் இல்லை. திட்டமிட்டுத் தவறான தகவல்கள் பத்திரிகைகள் வாயிலாகப் பரப்பப்படுகின்றன. உண்மை இதுதான். பத்திரிகைகள் என்றும் எங்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

உள்ளாட்சித் தேர்தலை மனதில் வைத்து எனது கட்சியினரை அச்சுறுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இது நடக்கிறதா? என்று தெரியவில்லை. சந்தேகத்தின் பெயரில் ரெய்டு நடக்கிறது. என் மீதான குற்றச்சாட்டுகளைச் சட்ட ரீதியாக எதிர்கொள்வேன். எதையும் நீதிமன்றம் வாயிலாக நான் சந்திக்கத் தயாராக இருக்கிறேன்''.

இவ்வாறு கே.சி.வீரமணி தெரிவித்தார்.

லஞ்ச ஒழிப்பு போலீஸார் ரெய்டு நடத்தியபோது வெளியே செய்தியாளர்கள் 2 பேர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, நான் வீட்டின் உள்ளே இருந்ததால் அதுபற்றி எனக்கு எதுவுமே தெரியாது என முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி பதிலளித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

தமிழகம்

18 mins ago

தமிழகம்

11 mins ago

தமிழகம்

56 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

21 hours ago

மேலும்