கல் அரைக்கும் யூனிட் விவகாரம்: மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு

ஒரு கிலோ மீட்டர் இடைவெளிக்குள் இரண்டு கல் அரைக்கும் யூனிட்டுகள் அமைத்துக் கொள்ள அனுமதி வழங்கிய தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

பாறைகளை ஜல்லிகளாக உடைக்க அமைக்கப்பட்டுள்ள கல் அரைக்கும் யூனிட்டுகளால் ஏற்படும் காற்று மாசால் சுற்றுச்சூழல் அதிக அளவில் பாதிக்கப்படுவதைத் தடுக்க கடந்த 2004-ம் ஆண்டு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் நிபந்தனைகள் கொண்டுவந்தது. அதன்படி, தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள், புனிதத் தலங்கள், குடியிருப்புப் பகுதிகள், பொதுமக்கள் கூடும் இடங்களில் இருந்த 500 மீட்டர் தொலைவிற்குள் 'கல் அரைக்கும் யூனிட்டுகள்' அமைக்கக் கூடாது எனவும், இரண்டு யூனிட்டுகளுக்கு இடையே குறைந்தபட்சம் ஒரு கிலோ மீட்டர் தொலைவு இடைவெளி இருக்க வேண்டும் எனவும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் இந்தக் கட்டுப்பாடுகளை நீக்கி மாசு கட்டுப்பாட்டு வாரியம் புதிய உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து இ.வி.சம்பத் என்பவர் பொதுநல வழக்குத் தொடர்ந்தார்.

இந்த மனுவை 2019-ல் விசாரித்த நீதிமன்றம், ஒரு கிலோ மீட்டர் இடைவெளிக்குள் இரண்டு கல் அரைக்கும் யூனிட்டுகள் அமைத்துக்கொள்ள அனுமதி வழங்கிய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்திருந்தது.

இதேபோல கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுக்காவுக்குட்பட்ட இரண்டு கிராமங்களில் பள்ளிக்கு அருகில் கல்குவாரிகள் செயல்படுவதாக பி.வி.சின்னண்ணா என்பவர் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு மற்றும் மாசு கட்டுபாட்டு வாரியம் தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனமான நீரி அமைப்பின் ஆய்வுக்கு, இந்த விவகாரம் அனுப்பப்பட்டுள்ளதாகவும், ஆய்வு செய்து அறிக்கை அளிக்க 6 மாத கால அவகாசம் கேட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

சின்னண்ணா தொடர்ந்த வழக்கில் ஆஜரான அரசு பிளீடர் பி.முத்துக்குமார், சட்டவிரோத குவாரி பணிகளில் ஈடுபட்ட 8 பேருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதன் அறிக்கையைத் தாக்கல் செய்வதாகவும் தெரிவித்தார். மேலும் விதிகளை மீறிய குவாரிகள் செயல்பாடு நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அரவை யூனிட் உரிமையாளர்கள் தரப்பில், குறிப்பிட்ட இடைவெளி காரணமாகத் தடை விதிக்கப்பட்டதால், குவாரிகளைத் திறக்க முடியவில்லை என்பதால், குவாரிகளைத் திறக்க அனுமதிக்கும்படி கோரிக்கை வைக்கப்பட்டது.

அப்போது மாசு கட்டுப்பாட்டு வாரிய உத்தரவிற்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்க மறுத்த நீதிபதிகள், குவாரிகளின் அமைவிடம் குறித்த நீரி அமைப்பின் இறுதி அறிக்கையை 6 மாதங்களில் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.

மேலும், இடைக்கால அறிக்கையை அக்டோபர் மூன்றாவது வாரம் தாக்கல் செய்ய நீரி அமைப்பிற்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை டிசம்பர் 2-வது வாரத்திற்குத் தள்ளிவைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE