ஊரக உள்ளாட்சி தேர்தலில் மதிமுகவுக்கு ‘பம்பரம்’, மநீமவுக்கு ‘டார்ச்’ ஒதுக்கீடு

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் மதிமுகவுக்கு பம்பரம் சின்னத்தையும், மக்கள் நீதி மய்யத்துக்கு பேட்டரி டார்ச் சின்னத்தையும் மாநில தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 15-ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது.

4 நாட்களில் மொத்தம் 20,074 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வேட்புமனு தாக்கல் செய்ய 22-ம் தேதி கடைசி நாள். 25-ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. அன்றே வேட்பாளர்களுக்கான சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.

இந்நிலையில் அமமுக விடுத்த கோரிக்கையின் அடிப்படையில், அக்கட்சி கடந்த சட்டப்பேரவை தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டதால், அதே சின்னத்தை ஒதுக்கி மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.

மக்கள் நீதி மய்யமும், கடந்த சட்டப்பேரவை தேர்தலில் பேட்டரி டார்ச் சின்னத்தில் போட்டியிட்டிருந்ததால், உள்ளாட்சி தேர்தலிலும் டார்ச் சின்னத்தை ஒதுக்குமாறு மாநில தேர்தல் ஆணையத்தில் கோரியிருந்தது. அதை ஏற்று அக்கட்சிக்கு ‘டார்ச்’ சின்னம் வழங்கப்பட்டுள்ளது.

மதிமுக, கட்சி அங்கீகாரத்தை இழந்தாலும், கடந்த உள்ளாட்சி தேர்தலில் பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டிருப்பதால், அதே சின்னத்தை இப்போது ஒதுக்குமாறு அக்கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்தில் கடிதம் அளிக்கப்பட்டிருந்தது. அதை ஏற்று, அக்கட்சிக்கும் பம்பரம் சின்னம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த 3 கட்சிகளுக்கும், அவை கேட்டுள்ள சின்னங்களை ஒதுக்குமாறு அனைத்து தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE