கரோனா தடுப்பூசி சான்றிதழ் காட்டிய பிறகே சுற்றுலாத் தலங்களுக்குச் செல்ல அனுமதி: கொடைக்கானலில் கடும் போக்குவரத்து நெரிசல்

By பி.டி.ரவிச்சந்திரன்

கரோனா தடுப்பூசி சான்றிதழ் காட்டிய பிறகே சுற்றுலாப் பயணிகள் சுற்றுலாத் தலங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டதால், கொடைக்கானலில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மூன்று கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு வார விடுமுறை நாட்களில் அதிக எண்ணிக்கையில் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். கொடைக்கானல் நகர் பகுதியில் 18 வயதுக்கும் மேற்பட்டவர்களில் 99 சதவீதம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுவிட்டது. இந்நிலையில், கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் இன்று (செப்.19) நடைபெற்றது.

கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியில் தடுப்பூசி முகாம் நடந்த இடத்தில் அந்த வழியே வந்த வாகனங்களை நிறுத்தி சுற்றுலாப் பயணிகள் தடுப்பூசி செலுத்தியுள்ளனரா என சோதனை செய்தனர். தடுப்பூசி செலுத்தாத சுற்றுலாப் பயணிகள் தடுப்பூசி செலுத்திய பின்னரே சுற்றுலாத் தலங்களுக்கு அனுமதிக்கப்பட்டனர். இதனால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அப்சர்வேட்டரி முதல் ஏரிச்சாலை வரை மூன்று கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால், சுற்றுலாப் பயணிகள் சுற்றுலாத் தலங்களை ஒரே நாளில் முழுமையாகக் காண முடியாத நிலையும் ஏற்பட்டது.

வார விடுமுறை நாளான இன்று கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களில் சுற்றுலாப் பயணிகள் பலர் முகக்கவசம் அணியாமல் உலா வந்தனர். முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்த நகராட்சி நிர்வாகம், வனத்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. சுற்றுலாப் பயணிகளை எச்சரிக்கவும் இல்லை. சுகாதாரத் துறையினரின் கரோனா தடுப்புச் செயல்பாட்டுக்குப் பிற துறைகளும் ஒத்துழைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, கொடைக்கானல் கோட்டாட்சியர் முருகேசன் கூறுகையில், "மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுவதால் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. மற்றபடி, சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானல் வந்து செல்ல எந்தவிதத் தடையும் இல்லை" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE