4 மாவட்டங்களில் மிக கனமழை வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் இன்று (செப். 19) வெளியிட்ட அறிவிப்பு:

"வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக, இன்று திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, அரியலூர், பெரம்பலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் காலை நேரங்களில் ஓரளவு மேகமூட்டத்துடனும், மாலை மற்றும் இரவு நேரங்களில் பொதுவாக மேகமூட்டத்துடனும் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):

வாணியம்பாடி (திருப்பத்தூர்), கலசப்பாக்கம் (திருவண்ணாமலை) தலா 9, ஆம்பூர் (திருப்பத்தூர்) 7, பரமக்குடி (ராமநாதபுரம்) 6, பொன்னேரி (திருவள்ளூர்), ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை) தலா 5, வாலாஜா (ராணிப்பேட்டை), செங்கம் (திருவண்ணாமலை) தலா 4, பேரையூர் (மதுரை), தென்காசி, சிவகாசி (விருதுநகர்), அம்மூர் (ராணிப்பேட்டை) தலா 3, நாங்குநேரி (திருநெல்வேலி), பூதப்பாண்டி (கன்னியாகுமரி) தலா 2, அம்முண்டி (வேலூர்), அல்லூர்பேட்டை (விழுப்புரம்) தலா 1.

மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை".

இவ்வாறு புவியரசன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE