திமுகவின் இரட்டை நிலைப்பாடு; பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டி கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஓபிஎஸ்

By செய்திப்பிரிவு

பெட்ரோலியப் பொருட்களை சரக்குகள் மற்றும் சேவைகள் வரியின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, ஓபிஎஸ் இன்று (செப். 19) வெளியிட்ட அறிக்கை:

"மாநில சுயாட்சி, நீட் தேர்வு ரத்து, அண்டை மாநிலங்களுடனான நதிநீர்ப் பிரச்சினை என எந்தப் பிரச்சினையாக இருந்தாலும், ஆட்சியில் இல்லாத போது ஒரு பேச்சு, ஆட்சியில் இருக்கும் போது ஒரு பேச்சு என்பது திமுகவுக்கு கைவந்த கலை.

அந்த வகையில், தற்போது பெட்ரோலியப் பொருட்களை, சரக்குகள் மற்றும் சேவைகள் வரிவரம்பின் கீழ் கொண்டு வருவது குறித்து தனது நிலைப்பாட்டை தமிழக அரசு தெரிவித்து இருக்கிறது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்பட வேண்டுமென்றால், அவற்றை பொருட்கள் மற்றும் சேவைகள் வரியின் வரம்புக்குக் கீழ் கொண்டு வர வேண்டும் அல்லது அதற்கான ஆயத்தீர்வை குறைக்கபட வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்தச் செய்தி 25-01-2018 அன்று அனைத்துப் பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக, 04-04-2018 அன்று தனது ட்விட்டர் பக்கத்திலும், பொதுமக்களின் சுமையை குறைக்கும் வகையில், பெட்ரோலியப் பொருட்களை, சரக்குகள் மற்றும் சேவைகள் வரி வரம்பின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியவர் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும் தற்போதைய முதல்வருமான மு.க.ஸ்டாலின்.

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், பெட்ரோலியப் பொருட்களை, பொருட்கள் மற்றும் சேவைகள் வரி வரம்பின் கீழ் கொண்டு வர வேண்டும் என்றுதான் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முந்தைய திமுகவின் நிலைப்பாடு.

இந்த நிலைப்பாடு, திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மாறிவிட்டது. நேற்று லக்னோவில் நடைபெற்ற பொருட்கள் மற்றும் சேவைகள் வரிக்கான 45-வது கவுன்சில் கூட்டத்தில், கேரள உயர் நீதிமன்ற உத்தரவின்படி, பெட்ரோல் மற்றும் டீசலை சரக்குகள் மற்றும் சேவைகள் வரி வரம்புக்குள் கொண்டு வருவது குறித்த தீர்மானம் பரிசீலிக்கப்பட்டு, அதனை பல்வேறு மாநிலங்கள் ஏற்க மறுத்ததால், அந்தத் தீர்மானம் நிராகரிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில், திமுக சார்பில் நிதி அமைச்சர் கலந்து கொள்ளாவிட்டாலும், அவர் மத்திய நிதி அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில், 'மாநிலங்களின் சொந்த வருவாயை நிர்வகிப்பதில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மாநில வரி விதிப்பு மட்டுமே தற்போது உள்ளது என்றும், இதையும் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வந்தால் மாநிலங்களுக்கு சொந்த வரி வருவாய் என்பதே இல்லாமல் போய்விடும் என்றும், அதனால் இதுபோன்ற சிறிய அதிகாரங்களை இழக்க விரும்பவில்லை' என்றும் தெரிவித்து இருப்பதாக பத்திரிகைகளில் செய்தி வெளிவந்துள்ளது. அதாவது, பொருட்கள் மற்றும் சேவைகள் வரி வரம்பின் கீழ் பெட்ரோலியப் பொருட்களை கொண்டு வருவதை தமிழக அரசு எதிர்க்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தேர்தலுக்கு பிந்தையை திமுகவின் நிலைப்பாடு.

இதன் விளைவாக, முதல்வர், எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, பொருட்கள் மற்றும் சேவைகள் வரி வரம்பின் கீழ் பெட்ரோலியப் பொருட்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்று வலியுறுத்தியது எப்படியாவது ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்பதற்காகத்தான் என்ற ஐயப்பாடு மக்கள் மனதில் ஏற்பட்டுள்ளது.

எனவே, முதல்வர் இதில் உடனடியாக தலையிட்டு, பொதுமக்களின் சுமையை குறைக்கும் வண்ணம், பெட்ரோலியப் பொருட்களை சரக்குகள் மற்றும் சேவைகள் வரியின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுத்து திமுகவின் தேர்தலுக்கு முந்தைய நிலைப்பாட்டை நிலைநிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இது போன்ற நடவடிக்கை, பொதுமக்களின் சுமையை குறைப்பதோடு, பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் குறைப்பு, டீசல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு என்ற திமுகவின் வாக்குறுதியும் முழுமையாக நிறைவேற வழிவகுக்கும்".

இவ்வாறு ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

16 mins ago

தமிழகம்

19 mins ago

தமிழகம்

53 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்