தமிழகத்தில் பரவலாக பலத்த மழை- 33 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் பரவலாக மழை பெய்ததால் 33 மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது.

இந்த ஆண்டில் தென்மேற்குப் பருவமழை, வெப்பச்சலனம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்ததால் பெரும்பாலான மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது.

தமிழக நீர்வள ஆதாரத் துறை, மாநிலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்காணிப்புக் கிணறுகள் மூலம் மாதந்தோறும் நிலத்தடி நீர் மட்டத்தைக் கணக்கிட்டு வருகிறது. அதன்படி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 33மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்திருப்பது தெரியவந்துள்ளது.

திண்டுக்கல்லில் 7.47 மீட்டர்

அதிகபட்சமாக திண்டுக்கல் மாவட்டத்தில் 7.47 மீட்டர் அளவுக்கு நீர் மட்டம் உயர்ந்துள்ளது. இந்த மாவட்டத்தில் கடந்தாண்டு நிலத்தடி நீர்மட்டம் 16.47 மீட்டராக இருந்தது. இந்தாண்டு 9 மீட்டரில் உள்ளது. மிகக்குறைவாக தஞ்சாவூரில் 0.05 மீட்டர் மட்டுமே நீர் மட்டம் உயர்ந்துள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் 3.19 மீட்டர் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. திருவண்ணாமலை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், திருப்பூர், மதுரை, சிவகங்கை, விருதுநகர், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை ஆகிய 10 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் 2 மீட்டருக்கு மேல் உயர்ந்துள்ளது.

திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், சேலம், தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் 1 மீட்டருக்கு அதிகமாக உயர்ந்துள்ளது. கிருஷ்ணகிரி, தர்மபுரி, கடலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், கரூர், புதுக்கோட்டை, நாமக்கல், கோவை, நீலகிரி, ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய 12 மாவட்டங்களில் 0.05 முதல் 0.77 மீட்டர் வரை நீர் மட்டம் உயர்ந்துள்ளது.

மாநிலத்தில் மிகக்குறைவாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 0.05 மீட்டரும், ஈரோடு மாவட்டத்தில் 0.31 மீட்டரும், திருவாரூர் மாவட்டத்தில் 0.19 மீட்டரும் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளதாக நீர்வள ஆதாரத் துறை தெரிவித்துள்ளது

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE