உங்களைப் போன்ற மற்ற மாணவர்களால் சாதிக்க முடிந்ததை விட உங்களால் மிக அதிகமாக சாதிக்க முடியும் என்பதை நம்புங்கள் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் நீட் தேர்வு பயத்தால் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் தனுஷ், அரியலூர் மாவட்டத்தைச் சேர்நத மாணவி கனிமொழி, வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி சௌந்தர்யா ஆகியோர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக இளைஞணித் தலைவர் அன்புமணி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், மாணவர்கள் மனம் தளர வேண்டும் என்றும், உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தொடர்ந்து அறிவுறுத்தலையும் வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று வெளியிட்ட அறிக்கை:
''இந்த நாட்டின் வருங்காலத் தூண்களாக, வருங்கால ஆட்சியாளர்களாக, வருங்கால நம்பிக்கையாக இருக்க வேண்டிய மாணவ சமுதாயம் தற்போது தடுமாற்றத்தில் திண்டாடுகிறார்களோ என்ற அச்சத்துடன் அவர்களை நான் பார்க்கிறேன்.
உலகில் நம்மைச் சுற்றி பல வகையான நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அவை ஒவ்வொன்றையும் ஒருவர் நடத்திக் கொண்டிருக்கிறார், உலகில் நம்மைச் சுற்றி பல்வேறு வகையான பொருட்கள் இருக்கின்றன. அவை ஒவ்வொன்றையும் யாரோ ஒருவர் தயாரித்துக் கொண்டிருக்கிறார். ஆக, நம்மைச் சுற்றியிருக்கும் வாய்ப்புகளும் சவால்களும் மிக அதிகம் என்பதை மாணவ சமுதாயம் உணர்ந்துகொள்ள வேண்டும்.
மாணவர்களே கனவு காணுங்கள் என்று கூறியவர் அப்துல் கலாம். அந்தக் கனவு உங்களது தூக்கத்தில் வருகிற கனவாக இல்லாமல் உங்களைத் தூங்க விடாது செய்யும் கனவாக இருக்கட்டும் என்று அவர் கூறியிருந்தார். அப்படி என்றால் கலாம் ஐயா கூறிய கனவு நம்முடைய இலக்கு நம்முடைய உழைப்பு நம்முடைய நம்பிக்கை. அதை இழந்துவிடாதீர்.
மாணவர்களே, உங்கள் கனவுகளை மேலும் விரிவாக்குங்கள். மருத்துவப் படிப்பு என்ன... மருத்துவக் கல்லூரி கட்ட.., பெரிய மருத்துவமனை கட்ட... என்று இன்னும் எத்தனை எத்தனை வாய்ப்புகள் நமக்காகக் காத்திருக்கின்றன. மருத்துவப் படிப்பிற்கு இடம் கிடைக்காவிட்டால் உலகம் இருண்டு போகப் போவதில்லை.
வறுமையை கண்டு பயந்து விடாதே... திறமை இருக்கு மறந்து விடாதே... என்று புரட்சித்தலைவர் பாடியது மாணவர்களாகிய உங்களுக்குத்தான். விடா முயற்சியும் திறமையும் இருந்தால் பணமில்லாத ஏழைக்கும் வெற்றி நிச்சயம். தற்கொலைக்குத் தூண்டும் சில பொய்யான பரப்புரையை நம்பி விலைமதிப்பற்ற உங்கள் உயிரை இழக்காதீர்கள். பிணத்தின் மீது விழும் மாலையால் பெருமை என்ன? உங்கள் மீது விழும் மாலைகள் வெற்றி மாலைகள் ஆகத்தான் இருக்க வேண்டும் என்ற வெறியோடு இருங்கள்.
முயற்சி திருவினையாக்கும். முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார். தெய்வத்தால் தர முடியாவிட்டாலும், உண்மையாக முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம், முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்... என்றெல்லாம் நம் முன்னோர்கள் சொல்லிய கூற்று என்றுமே பொய்த்துப் போவதில்லை.
உங்களால் தேர்ச்சிபெற முடியாவிட்டால் உங்கள் பயிற்சி முறையிலோ, பாடத்திட்ட முறையிலோ, தேர்வுக்குத் தயாராகும் முறையிலோ மாற்றம் தேவைப்படுகிறது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். உங்களைப் போன்ற மற்ற மாணவர்களால் சாதிக்க முடிந்ததை விட உங்களால் மிக அதிகமாக சாதிக்க முடியும் என்பதை நம்புங்கள்.
தமிழக மாணவச் செல்வங்களே... மகாகவி பாரதி தன் புதிய ஆத்திசூடியில் என் உள்ளம் கவர்ந்த ஒற்றை வரி "அச்சம் தவிர்". எதற்காக நீ அஞ்ச வேண்டும். ஆகவே, அச்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து. உங்களை நீங்கள் நேசிக்கத் தொடங்குங்கள். புத்தகங்களை வாசிக்கத் தொடங்குங்கள். பெரியோரிடம் அறிவுரைகளை யாசிக்கத் தொடங்குங்கள். தேர்வுகளைக் கடப்பது எப்படி என்று யோசிக்கத் தொடங்குங்கள்.
மாபெரும் சபைகளில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழவேண்டும்... அந்த மாலைகள் உனக்கு வெற்றி மாலைகள் ஆகட்டும். படிப்பின் மீது பிடிப்போடு இருங்கள். உங்கள் அறிவுக்கும் திறமைக்கும் ஈடுபாட்டுக்கும் முயற்சிக்கும் பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு இருங்கள். நாளைய உலகம் உங்களுடையது''.
இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago