மருத்துவப் படிப்புதான் வாழ்க்கை என நினைத்து உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டாம்: ஓபிஎஸ் வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

மருத்துவப் படிப்புதான் வாழ்க்கை என்ற எண்ணத்தை மனதில் விதைத்து உயிரை மாய்த்துக் கொள்ளும் முயற்சிகளில் ஈடுபட வேண்டாம் என, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக, ஓபிஎஸ் இன்று (செப்.15) வெளியிட்ட அறிக்கை:

"சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் தனுஷ், அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கனிமொழி என்ற வரிசையில், இன்று வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சௌந்தர்யா நீட் தேர்வு எழுதி, முடிவுக்காகக் காத்துக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார் என்ற செய்தி மிகுந்த வருத்தத்தை அளிப்பதாக உள்ளது.

இதன் மூலம், நீட் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் அனைவரும் தங்களது குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டிய, கண்காணிக்க வேண்டிய சூழ்நிலை தற்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது வேதனை அளிக்கும் செயல் ஆகும்.

திமுக ஆட்சிக்கு வந்ததும் 'நீட் தேர்வு ரத்து செய்யப்படும்' என்று திமுக தலைவர்களால் மேடைக்கு மேடை முழங்கப்பட்ட வெற்று வாக்குறுதியை நம்பி, பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில், மருத்துவப் படிப்பில் சேர்ந்துவிடலாம் என்ற எண்ணத்தில் இருந்த, மாணவ, மாணவிகள், குறிப்பாக, ஏழையெளிய கிராமப்புற மாணவ, மாணவிகள், அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாத சூழ்நிலையில், நீட் தேர்வு எழுத வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டு, மன உளைச்சலுக்கு ஆளாகி இதுபோன்ற விபரீத நடவடிக்கைகளை எடுக்கும் சூழ்நிலை தற்போது தமிழகத்தில் உருவாகியுள்ளது.

மருத்துவராக நினைக்கும் மாணவ, மாணவிகளிடம் மனோதிடம் அதிகமாக இருக்க வேண்டும். ஆனால், அதற்கு மாறான சூழ்நிலை தமிழகத்தில் நிலவுகிறது. இதுபோன்ற சூழ்நிலை ஏற்படுவதற்கு மன அழுத்தம் காரணம் என்றாலும், 'ஏதோ நடக்கும் என்று எதிர்பார்த்து, ஒன்றுமே நடக்கவில்லை' என்கிறபோது, மாணவ, மாணவிகள் ஏமாற்றம் அடைந்து, அதன் விளைவாக மன அழுத்தம் அதிகரிப்பதும் மற்றுமொரு காரணம் என்பது மறுப்பதற்கில்லை.

இது மட்டுமல்லாமல், மருத்துவப் படிப்பை சமூகப் பொருளாதாரத்துக்கான ஓர் அங்கீகாரமாக பெற்றோர்கள் நினைப்பதும், மாணவ, மாணவிகளிடையே அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. தங்களின் மருத்துவப் படிப்புக்காக பெற்றோர்கள் பொருளாதார ரீதியாக மிகுந்த சிரமப்படுவதும், அந்தச் சிரமங்களுக்கு விடிவு கிடைக்குமோ, கிடைக்காதோ என்ற சந்தேகமும் மாணவ, மாணவிகளிடையே மன அழுத்தத்தை அதிகப்படுத்துகிறது.

எது எப்படியோ, தேர்வு எழுதுவதற்கு முன்பும், பின்பும் பதற்றம் இல்லாமல், அச்சம் இல்லாமல் மாணவ, மாணவிகள் இருக்க வேண்டும் என்றும், தேர்வு எழுதுவதற்கான வாய்ப்புகள் நிறைய உள்ளதை மனதில் நிலைநிறுத்தி, அதற்கேற்ப மாணவ, மாணவிகள் செயல்பட வேண்டும் என்றும், உயர் கல்வியில் ஏராளமான படிப்புகள் இருக்கின்ற சூழ்நிலையில், அதன் மூலம் இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி அதிகாரிகளாக ஆவதற்கு உரிய வாய்ப்புகள் இருக்கின்ற நிலையில், மருத்துவப் படிப்புதான் வாழ்க்கை என்ற எண்ணத்தை மனதில் விதைத்து உயிரை மாய்த்துக் கொள்ளும் முயற்சிகளில் ஈடுபட வேண்டாம் என்றும், மாணவ, மாணவிகளை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

கண்ணிலே பழுது இருந்தால் பார்வை சரியாக இருக்காது. மூக்கிலே சளி இருந்தால் நறுமணத்தை நுகர முடியாது. வாயிலே புண் இருந்தால் உணவைச் சுவைக்க முடியாது. அதுபோல, எண்ணம் சரியாக இல்லாவிட்டால், வாழ்க்கையின் இன்பத்தை அனுபவிக்க முடியாது.

எனவே, நல்ல எண்ணங்களை மனதில் நிலைநிறுத்தி, வாழ்வில் வெற்றிப் பாதையை நோக்கி மாணவ, மாணவிகள் பீடுநடை போட வேண்டும் என்றும், தற்கொலை என்பது தீர்வல்ல என்பதை உணர்ந்து மாணவ, மாணவிகள் செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே தலையாரம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மாணவி செல்வி சௌந்தர்யாவுக்கு எனது அஞ்சலியைச் செலுத்துவதோடு, அவரது பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நீட் தேர்வு முடிவுகள் வெளிவருவதற்கு முன்பே இதுபோன்ற நிகழ்வுகள் நடப்பதைக் கருத்தில் கொண்டு, தமிழக முதல்வர் இதில் தனிக்கவனம் செலுத்தி, இனி வருங்காலங்களில், குறிப்பாக நீட் தேர்வு முடிவுக்குப் பிறகு, இதுபோன்ற விபரீத நிகழ்வுகளைத் தடுக்கும் வகையில், நீட் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்குக் கலந்தாய்வு வழங்கவும், அவர்களுடைய பெற்றோர்களுக்குத் தக்க அறிவுரைகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்".

இவ்வாறு ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்