மத்திய அரசில் 17 ஆண்டுகள் அங்கம் வகித்த திமுகவால் கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வரமுடியவில்லையா?- ஓபிஎஸ் கேள்வி

By செய்திப்பிரிவு

17 ஆண்டுகள் மத்திய அரசில் அங்கம் வகித்த திமுகவால் கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வரமுடியவில்லையா என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர்‌ ஓ.பன்னீர்செல்வம்‌ கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து ஓபிஎஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

’’நீட்‌ தேர்வு ரத்து என்பதற்கான சட்டப்‌ போராட்டத்தை அரசு தொடங்கிவிட்டதாகவும்‌, கல்வியை மாநிலப்‌ பட்டியலுக்கு திரும்பக்‌ கொண்டு வரத் திமுகவும்‌, அதன்‌ நட்புக்குரிய சமூக நீதி இயக்கங்களும்‌ இறுதி வரை போராடும்‌ என்றும்‌ தமிழ்நாடு முதல்வர்‌ அறிவித்து இருப்பதைப்‌ பார்க்கும்போது, இந்தப்‌ பிரச்சனைகள்‌ இப்போது முடிவுக்கு வராது என்பத சூசகமாகத்‌ தெளிவுபடுத்தப்பட்டு இருக்கிறது.

நீட்‌ தேர்வை ரத்து செய்ய முதல்‌ சட்டப்‌பேரவைக்‌ கூட்டத்‌ தொடரிலேய சட்டம்‌ இயற்றப்படும்‌ என்று தி.மு.க.வின்‌ தேர்தல்‌ அறிக்கையில்‌ குறிப்பிடப்பட்டு இருந்தாலும்‌, 'தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும்‌ நீட்‌ தேர்வு ரத்து செய்யப்படும்‌' என்றுதான்‌ தி.மு.க. தலைவர்களால்‌ மேடைக்கு மேடை முழங்கப்பட்டது. அதை நம்பித்தான்‌ தி.மு.க.விற்கு மக்கள்‌ வாக்களித்தார்கள்‌.

ஆனால்‌, "இன்றைக்கு ஆட்சிக்கு வந்தவுடன்‌, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகம்‌ என்ன வழியைப்‌ பின்பற்றியதோ அதே வழியைத்தான்‌ தி.மு.க.வும்‌ பின்பற்றி இருக்கிறது. அதாவது, இந்தியக்‌ குடியரசுத்‌ தலைவரின்‌ ஒப்புதலைப்‌ பெறுவதற்காக தமிழ்நாடு சட்டப்‌பேரவையில்‌ சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. இந்த வாதத்தை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகம்‌ முன்வைத்தால்‌, இதற்காக குழுவை அமைத்து, அதன்‌ பிறகுதான்‌ சட்டமுன்வடிவினை நிறைவேற்றினோம்‌ என்று தி.மு.க. கூறக்கூடும்‌. ஆனால்‌, அந்தக்‌ குழுவிற்கு எந்த சட்ட அங்கீகாரமும்‌ கிடையாது.

இது அரைத்த மாவையே அரைப்பதற்கு சமம்‌. வெறும்‌ சம்பிரதாயத்திற்காக இந்தச்‌ சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டு இருக்கிறது என்றே மக்கள்‌ கருதுகிறார்கள்‌.

முதல்வரே 'சட்டப்‌ போராட்டத்தை அரசு தொடங்கிவிட்டது' என்று சொல்லும்போது, அவருக்கே இந்தச்‌ சட்டமுன்வடிவுக்கு இந்தியக்‌ குடியரசுத்‌ தலைவரின்‌ ஒப்புதல்‌ கிடைக்காதோ என்ற சந்தேகம்‌ எழுந்துள்ளது என்றுதான்‌ மக்கள்‌ நினைக்கிறார்கள்‌. காவேரி, முல்லைப்‌ பெரியாறு பிரச்சனைகள்‌ போல பல ஆண்டுகள்‌ சட்டப்‌ போராட்டம்‌ நடக்கும்‌ என்பதுதான்‌ 'சட்டப்‌ போராட்டத்தை அரசு தொடங்கிவிட்டது' என்பதற்கான உள்ளார்ந்த பொருள்‌ என்பதை அறிவார்ந்த மக்கள்‌ எளிதில்‌ புரிந்துகொள்வார்கள்‌.

அடுத்தபடியாக, கல்வியை மாநிலப்‌ பட்டியலுக்கு திரும்பக்‌ கொண்டு வர தி.மு.க. நடவடிக்கை எடுக்கும்‌ என்று முதல்வர்‌ கூறியிருக்கிறார்‌. 1996ஆம்‌ ஆண்டு முதல்‌ 2013ஆம்‌ ஆண்டு வரை, நடுவில்‌ 13 மாதங்கள்‌ தவிர, கிட்டத்தட்ட 17 ஆண்டுகள்‌ மத்திய அரசின்‌ அமைச்சரவையில்‌ அங்கம்‌ வகித்த கட்சி திமுக. இன்னும்‌ சொல்லப்போனால்‌, தி.மு.க.வின்‌ தயவில்‌தான்‌ மத்திய அரசுகளே இருந்தன. அப்பொழுதெல்லாம்‌, மத்திய அரசுடன்‌ இணக்கமாகப்‌ பேசி, கல்வியை மாநிலப்‌ பட்டியலுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்காத தி.மு.க., இப்போது மத்திய அரசில்‌ அங்கம்‌ வகிக்காத சூழ்நிலையில்‌, 'கல்வி'யை மாநிலப்‌ பட்டியலில்‌ திரும்பக்‌ கொண்டு வர நடவடிக்கை எடுப்போம்‌ என்று கூறுவது தும்பை விட்டு வாலைப்‌ பிடிப்பதற்குச்‌ சமம்‌.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகம்‌, எம்‌.ஜி.ஆர்‌. ஆட்சிக்‌ காலத்தின்‌போது சிறிது காலமும்‌, ஜெயலலிதா ஆட்சிக்‌ காலத்தின்‌போது 13 மாதங்களும்‌தான்‌ மத்திய அமைச்சரவையில்‌ அங்கம்‌ வகித்தது. தி.மு.க.வைப்‌போல்‌ 17 ஆண்டுகள்‌ மத்திய அரசின்‌ அமைச்சரவையில்‌ அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகம்‌ அங்கம்‌ வகித்திருந்தால்‌, இந்த நேரத்திற்கு 'கல்வி' மாநிலப்‌ பட்டியலில்‌ மீண்டும்‌ வந்திருக்கும்‌ என்பதை இங்கே அழுத்தந்திருத்தமாக சுட்டிக்காட்ட விழைகிறேன்‌. தற்போது, தி.மு.க. கூட்டணிக்கு 38 மக்களவை உறுப்பினர்கள்‌ உள்ளனர்‌.

அடுத்த ஆண்டு இந்தியக்‌ குடியரசுத்‌ தலைவர்‌ மற்றும்‌ குடியரசுத்‌ துணைத்‌ தலைவர்‌ தேர்தல்கள்‌ வர உள்ளன. இந்தச்‌ சூழ்நிலையில்‌, மத்திய அரசிற்குத் தேவையான அழுத்தம்‌ கொடுத்து, 'நீட்‌ தேர்வு ரத்து' என்ற அறிவிப்பினைச்‌ செய்யவும்‌, பன்னிரெண்டாம்‌ வகுப்பு மதிப்பெண்கள்‌ அடிப்படையில்‌ மருத்துவப்‌ படிப்பில்‌ மாணவர்‌ சேர்க்கை அமையவும்‌ நடவடிக்கை எடுக்க வேண்டும்‌ என்று தமிழ்நாடு முதல்வரைக்‌ கேட்டுக்‌ கொள்கிறேன்‌’’.

இவ்வாறு ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்