தேர்தல் களத்தில் கொஞ்சம் புதுசு, நிறைய ரவுசு: ஃபேஸ்புக்கில் திமுக - அதிமுக கலாய்ப்பு அரசியல்

By பாரதி ஆனந்த்

தேர்தல் வந்துவிட்டால் கட்சிகள் ஒன்றின் மீது ஒன்று வார்த்தைப் போர் நடத்துவதும், அறிக்கைப் போர் நடத்துவதும் வழக்கமே. ஆனால், முதன்முறையாக சமூக வலைத்தளங்களில் இரண்டு கட்சியின் ஆதரவாளர்களுமே தனிப் பக்கம் துவக்கி ஒருவரை ஒருவர் குறைகூறி, குற்றஞ்சாட்டி, எள்ளி நகையாடி, வசைபாடி கலாய்ப்பு அரசியல் நிகழ்த்தி வருகின்றனர்.

இந்த ஃபேஸ்புக் யுத்தத்தை ஆரம்பித்துவைத்தது என்னவோ திமுக அனுதாபிகளே. ஆனால், நாங்கள் மட்டும் என்ன சளைத்தவர்களா என்று களத்தில் இறங்கியிருக்கின்றனர் அதிமுக ஆதரவாளர்கள்.

முதலில் தொடங்கப்பட > JayaFailss ஃபேஸ்புக் பக்கத்தை சற்றி அலசிவிட்டு வருவோம். கவர் ஃபோட்டாவிலேயே கலாய்ப்பை கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்கள். சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் ஜெயலலிதா இருப்பதுபோல் ஃபோட்டோஷாப் செய்யப்பட்ட ஒரு புகைப்படம் கவர் ஃபோட்டாவாக இருக்கிறது. புரொஃபைல் பிக்சரும் ஜெயலலிதா கேலி சித்திரமும், #JayaFails என்ற ஹேஷ்டேகுமாக கிண்டல் தொனியில் வைக்கப்பட்டிருக்கிறது.

அத்தோடு நின்றுவிடவில்லை. ஏதோ கட்சியின் கொள்கை விளக்க அறிவிப்புபோல் தாங்கள் துவங்கியுள்ள ஃபேஸ்புக் பக்கத்தின் 'லட்சியம்' என்னவென்று அவர்களே விளக்கியிருக்கிறார்கள். "செயல்படாத ஜெயா அரசை நாலு வருசமா என்னா செஞ்சிங்கன்னு கேள்வி கேக்கும் பக்கம்!" (பொறுப்புத் துறப்பு: அந்த பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வாக்கியம்- உள்ளது உள்ளபடியே!)

சரி முன்னுரை முடிவுற்றது. அடுத்து உள்ளே என்னதான் இருக்கிறது என்று எட்டிப்பார்த்தால். அட அப்டேட்டடாகத் தான் இருக்காங்க எனச் சொல்ல வைக்கிறது பதிவுகள்.

தமிழகத்தின் தற்போதைய பெரும் சர்ச்சை அத்திகடவு - அவிநாசி திட்டத்தை நிறைவேற்றக் கோரி நடைபெறும் போராட்டம். அந்தப் போராட்டத்தை முன்வைத்து ஒரு மீம் அதுக்கு துணையாக ஒரு வசை வாக்கியம் என பதிந்திருக்கின்றனர்.

அதுமட்டுமல்லாது, ஜெயலலிதா தொடங்கிவைக்கும் அனைத்து திட்டங்களும் தவறாமல் கிண்டலடிக்கப்பட்டுள்ளன.

இதுதவிர ஃபேஸ்புக்கில் வேறு யார் அதிமுக அரசையும், ஜெயலலிதாவையும் தாக்கி பேசினாலும் சரி பெஸ்ட் ஆஃப் வசவுகளை தேர்ந்தெடுத்து இந்தப் பக்கத்தில் அப்டேட்ட செய்ய தவறுவதில்லை. மீம்கள், டிரால்கள் கொட்டிக்கிடக்கின்றன. தற்போதைய நிலவரப்படி, 73,483 லைக்குகள் இப்பக்கத்துக்கு உள்ளன.

சரி, போட்டி பக்கம் எப்படி இருக்கிறது என்று நாடினால் கிடைக்கிறது DMKFails என்று அதிமுக ஆதரவாளர்கள் உருவாக்கியுள்ள அந்தப் பிரத்யேக பக்கம்.

கவர் ஃபோட்டாவைப் பார்த்தால், எங்கள் மீது மட்டும்தான் வழக்கு இருக்கா? என 2ஜி-யால் அலங்கரித்துவிட்ட கூடவே திமுக மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை சிதற விட்டிருக்கிறார்கள். கல்வெட்டை செதுக்குவது போல் ஒரு குற்றச்சாட்டு கூடவிட்டுவிடாமல் பார்த்துப் பார்த்து செதுக்கியிருக்கிறார்கள்.

சபாஷ் சரியான போட்டி...

போட்டின்னா போட்டா போட்டி நடத்தியிருக்காங்க. நீங்க JayaFails-ன்னு வச்சிருக்கீங்களா நாங்க ஹேஷ்டாக் கிரியேட் பண்றோம் பாருங்கள் என்று உருவாக்கியிருக்கிறார்கள் >DMKFails என டிரெண்டாக செய்திருக்கிறார்கள்.

இந்த ஃபேஸ்புக் பக்கத்தின் கொள்கை விளக்கம் "ஊழலில் ஊறிப் போன திமுகவிடம் எதை மன்னிப்பது எதை மறப்பது என்று கேட்கும் பக்கம்." (மேலே சொன்ன பொறுப்புத் துறப்பை இங்கேயும் அமல்)

அப்புறம் இங்கேயும் மீம்களுக்கு குறை ஒன்றும் இல்லை. திமுக - காங்கிரஸ் கூட்டணி, தேமுதிக கூட்டணிக்கான திமுக வலை, அழகிரி - கருணாநிதி சண்டை என பாரபட்சமே இல்லாமல் எல்லாமும் இருக்கிறது கிண்டல், கேலி வடிவில்.

அண்ணன் பத்தி மட்டும்தானா என நீங்கள் கேட்பது புரிகிறது. ஸ்டாலினின் நமக்கு நாமே பயணம் படாதபாடு பட்டிருக்கிறது இப்பக்கத்தில்.

அத்தனையும் இங்கேயே சுட்டிக்காட்டுவது இணையதள நாகரிமாக இருக்காது என்பதால் உங்கள் சாய்ஸ் என்று விட்டுவிடுகிறோம்.

மொத்தத்தில், அடேங்கப்பா இந்த அக்கப்போரா என்ற அளவுக்கு ஃபேஸ்புக்கில் இரு பெரும் திராவிடக் கட்சிகளின் ஆதரவாளர்கள் அதிர வைத்திருத்திருக்கிறார்கள்.

ஃபேஸ்புக்கிலேயே இப்படின்னா, தேர்தல் பிரச்சார தேதிகள் அறிவித்த பின்னர் மேடைகளில் என்னவெல்லாம் பேசுவார்கள் என்று நினைத்துப் பார்த்தால்..!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்