ஆட்சிக்கு வந்தவுடன் 24 மணி நேரத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு என்றோமா?- அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்

By செய்திப்பிரிவு

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் 24 மணி நேரத்தில் நீட் தேர்விலிருந்து விலக்கு பெற்றுத் தருவோம் என்று சொன்னோமா என்பது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ். வளாகத்தில் இன்று (14-09-2021) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நீட் தொடர்பான எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமியின் கேள்விகளுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

''தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்விற்கு எதிரான சட்ட முன்வடிவு தீர்மானம் பேரவையில் 1-2-2017 அன்று ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டு தமிழக ஆளுநரின் அனுமதியைப் பெற்று , இந்திய அரசியலமைப்புச் சட்ட விதி 254/2ன்படி இந்தியக் குடியரசுத் தலைவருக்கு ஒப்புதல் பெற அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அவர் சட்ட முன்வடிவுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்பது அனைவருக்குமே தெரிந்த செய்தி. 22-9-2017 அன்று உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளிக்கவில்லை என்ற குறிப்பையும் திருப்பி அனுப்பியிருந்தது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவுக்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்காததையும், உள்துறை அமைச்சகம் சட்டமுடிவைத் திருப்பி அனுப்பியதையும் சட்டப்பேரவையிலே வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில்தான் எந்தவித அறிவிப்பும் இல்லாமல், அன்றைய அதிமுக அரசாங்கத்தின் சட்டத்துறை சார்பில் இந்தியக் குடியரசுத் தலைவருக்கு அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் ஒன்றை எழுதினார். அக்கடிதத்தில் என்ன காரணத்தினால் ஒப்புதல் அளிக்கவில்லை என்று கேட்டு எழுதினார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் விதிகளின்படி குடியரசுத் தலைவர் கேள்விகள் கேட்பதற்கு அப்பாற்பட்டவர் என்று தெரிந்தும்கூட காலத்தைக் கடத்துவதற்கே அன்றைக்கு அந்தக் கடிதத்தை எழுதியிருந்தார்கள்.

இப்போது எங்களிடம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய கடிதத்தின் நகலும், அவர் ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பிய கடிதத்தின் நகலும், உள்துறை அமைச்சகம் திருப்பி அனுப்பிய கடிதத்தின் நகலும் இருக்கிறது. இதில் எந்த விதத்தில் நீட் தேர்விலிருந்து விலக்குப் பெறுவதற்கு முயற்சிகள் மேற்கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 24 மணி நேரத்தில் நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவோம் என்று திமுக தேர்தல் அறிக்கையிலே சொன்னதாக தவறாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். திமுக தேர்தல் அறிக்கையில் என்ன சொல்லப்பட்டிருக்கிறதென்றால், ஆட்சிக்கு வந்தவுடன் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரிலேயே நீட் தேர்விற்கு எதிராக விலக்கு பெறுவதற்கு சட்டமுன்வடிவு தயாரிக்கப்பட்டு, அம்மசோதா குடியரசுத் தலைவர் ஒப்புதலைப் பெறுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

ஆனால் எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் 24 மணி நேரத்தில் நீட் தேர்விலிருந்து விலக்கு பெற்றுத்தருவோம் என்று சொன்னதாக பேரவையிலேயே தெரிவித்தார். அதற்கு முதல்வர் நீட் தேர்வு குறித்த தெளிவான விளக்கத்தை அளித்திருக்கிறார். திமுக தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டதுபோலவே முதல் கூட்டத்தொடரிலேயே நீட் தேர்விற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது.

நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்கு அனுப்பப்பட்டுள்ள சட்டமுன்வடிவு கூடுதலான வலுவான சட்ட விதிகளுடன் இருக்கிறது. ஏற்கெனவே 2017ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட சட்ட முன்வடிவுக்கும், இப்போது அனுப்பப்பட்டுள்ள முன்வடிவுக்கும் முக்கியமான வேறுபாடு உள்ளது. ஏற்கெனவே 2017ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட சட்ட முன்வடிவு, உரிய தரவுகளுடன் சரியாக ஆராயாமல் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவாகும்.

இப்போது தயாரிக்கப்பட்டுள்ள சட்ட முன்வடிவு, நீட் தேர்வு முறையால் சமுதாயத்தில் பின்தங்கியிருக்கிற மாணவர்களுக்குக் கடந்த சில ஆண்டுகளாக ஏற்பட்டிருக்கிற பாதிப்புகள் குறித்தும், அந்த பாதிப்புகளைச் சரிசெய்வதற்கும், அனைத்து மாணவர்களும் பயனடையும் வகையில் மாணவர் சேர்க்கை முறைகளை வகுத்து, அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளைப் பற்றியும், அவற்றிற்கான சட்ட வழிமுறைகளைப் பற்றியும் ஆராய்ந்து நிறைவேற்ற வேண்டும் என்று ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜனைத் தலைவராகக் கொண்டு பல்வேறு கல்வியாளர்கள் மற்றும் அலுவலர்களை கொண்ட உயர்மட்டக் குழு அமைத்தது.

அந்த உயர்மட்டக் குழு 86,342 பேரிடம் மின்னஞ்சல், தபால், அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த கருத்துக்கேட்புப் பெட்டியில் போடப்பட்ட மனுக்கள் வாயிலாகப் பெறப்பட்ட பொதுமக்களின் கருத்துகளைச் சீரிய முறையில் பலமுறை கூட்டங்கள் கூட்டி, விவாதங்கள் நடத்தி ஆராய்ந்து வழங்கிய விரிவான பரிந்துரைகள், தலைமைச் செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்ட செயலாளர் குழுவால் ஆராயப்பட்டு சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டு அது தற்போது சட்ட முன்வடிவாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த சட்ட முன்வடிவுக்கும், இதற்குமான வித்தியாசம் 86,342 பேருடைய கருத்துருக்கள், நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையிலான உயர் மட்டக் குழுவின் கருத்துகள், அவர்கள் தந்த கருத்துகளுக்குப் பிறகு அவற்றை ஆராய்வதற்கு சட்ட நிபுணர்கள் குழுவின் கருத்துகள், இதையும் கடந்து தலைமைச் செயலாளர் குழு கூடி விவாதித்து எடுத்த முடிவுகள் இவற்றையெல்லாம் ஒன்றுசேர்த்துதான் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே 2017-ல் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கும், இப்போது நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்திற்கும் ஏராளமான வேறுபாடுகள் உள்ளன.

இவற்றையெல்லாம் எதுவுமே தெரிந்துகொள்ளாமல் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்றைக்குப் பேசியதென்பது ஒரு கேலிக்கூத்தான விஷயம்''.

இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

47 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்