வாணியம்பாடியில் முன்னாள் கவுன்சிலர் கொலை வழக்கில் தலைமறைவான பழைய இரும்பு வியாபாரி ‘கேங்ஸ்டர்’ ஆக மாறியது எப்படி?- போலீஸார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்

By செய்திப்பிரிவு

வாணியம்பாடியில் முன்னாள் கவுன்சிலர் வசீம் அக்ரம் கொலை வழக்கில் தலைமறைவான பழைய இரும்பு வியாபாரி கேங்ஸ்டராக மாறியது எப்படி என போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த கும்பலை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடிவருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நியூடவுன் ஜீவா நகரைச் சேர்ந்த வசீம்அக்ரம்(43). முன்னாள் நகராட்சி கவுன்சிலராகவும், மனிதநேய ஜனநாயக கட்சியின் முன்னாள்மாநில துணைச் செயலராகவும் மற்றும் பல்வேறு சமூகப் பணியும் செய்து வந்தார். இந்நிலையில், கடந்த 10-ம் தேதி இரவு ஜீவா நகரில் உள்ள மசூதியில் தொழுகையை முடித்துவிட்டு வீடு திரும்பும்போது காரில் வந்த மர்ம நபர்கள், வசீம் அக்ரமை அரிவாளால் வெட்டியதால் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து வாணியம்பாடி போலீஸார் நடத்திய விசாரணையில், ‘வாணியம்பாடி ஜீவா நகரைச் சேர்ந்த வசீம்அக்ரமின் நெருங்கிய நண்பரும், பழைய இரும்பு பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் வியாபாரியான ‘டீல் இம்தியாஸ்’ கூறியதன் பேரில் வசீம் அக்ரமைகொலை செய்ததாக தெரிவித்தனர். இதையடுத்து, ‘டீல் இம்தியாஸிடம்’ விசாரணை நடத்த போலீஸார் முயன்றபோது அவர் தலைமறைவானது தெரியவந்தது.

உடனே, கொலையாளிகளை பிடிக்கவும், கொலைக்கான காரணத்தை கண்டறிய 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், பெங்களூரு, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, வசீம் அக்ரம் கொலை வழக்கில் மூளையாக செயல்பட்டு, கொலை செய்ய திட்டம் தீட்டி வாணியம்பாடியில் புதிய கேங்ஸ்டராக உருவெடுத்து வரும் ‘டீல் இம்தியாஸை’ கைது செய்ய வேண்டும், வசீம் அக்ரம் கொலையில் நீதி கிடைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

பிரபல ரவுடியுடன் தொடர்பு

வாணியம்பாடி ஜீவா நகரைச் சேர்ந்த இம்தியாஸ், பழைய இரும்புபொருட்களை வியாபாரம் செய்து வருகிறார். தொழில் சம்பந்தமாக சென்னைக்கு அடிக்கடி சென்றுவந்த இம்தியாஸூக்கு, சென்னைஓட்டேரியைச் சேர்ந்த பிரபல ரவுடி ஒருவரின் நட்பு கிடைத்தது. அவர் மூலம் திருட்டு வாகனங்களை வாங்கி அதை பிரித்து தனது இரும்பு கடையில் வைத்து வியாபாரம் செய்ய தொடங்கியதாகக் கூறப்படுகிறது.

மேலும் கஞ்சா வியாபாரத்திலும் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. ஜீவா நகர் பகுதியைச் சேர்ந்த டீல் இம்தியாஸூம், கொலைசெய்யப்பட்ட வசீம்அக்ரம் ஆகிய 2 பேரும் பள்ளிப்பருவத்தில் இருந்தே நண்பர்களாக இருந்தவர்கள்.

வசீம்அக்ரம் அரசியல் கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்துவந்ததால், அவருடன் டீல் இம்தியாஸ் நெருங்கி பழகி வந்ததாக தெரிகிறது. கடந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி கட்சிவேட்பாளருக்கு வாக்கு கேட்டு வாணியம்பாடி தொகுதி முழுவதும்டீல் இம்தியாஸூம், வசீம் அக்ரமும் வலம் வந்தனர். இதற்கிடையே,கடந்த 2 மாதங்களுக்கு முன்புடீல் இம்தியாஸூக்கு சொந்தமானவீடு மற்றும் அலுவலகத்தில் கஞ்சாபதுக்கப்பட்டிருப்பதாக போலீஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் எஸ்பி, தனிப்பிரிவு போலீஸார் டீல் இம்தியாஸூக்கு சொந்தமான இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

அதில், 10 கிலோ கஞ்சா, 10-க்கும் மேற்பட்ட செல்போன்கள், 20-க்கும் மேற்பட்ட பட்டா கத்திகள், அரிவாள்கள், உருட்டுக்கட்டைகள் பதுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக டீல் இம்தியாஸின் ஆதரவாளர்கள் 4 பேரை போலீஸார் கைது செய்தனர். இதையறிந்த டீல் இம்தியாஸ் தலைமறைவானார்.

வசீம் அக்ரம் கொடுத்த தகவலின் பேரில்தான் போலீஸார், டீல்இம்தியாஸ் வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடத்தினர் என்பதுநாளடைவில் டீல் இம்தியாஸூக்கு தெரியவந்ததாக கூறப்படுகிறது. இதனால், வசீம் அக்ரம் மீது பகை கொண்ட டீல் இம்தியாஸ் தனது ஆதரவாளர்கள் மூலம் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தாராம்.

கடந்த சில வாரங்களுக்கு முன்புநியூடவுன் பகுதி வழியாக வந்த வசீம் அக்ரமை வழிமறித்த டீல் இம்தியாஸின் ஆதரவாளர்கள் துப்பாக்கியை காட்டி அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக வசீம் அக்ரம் வாணியம்பாடி நகர காவல் நிலையம், திருப்பத்தூர் எஸ்பி அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். ஆனால், அந்த மனு மீது போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்காததால், வசீம்அக்ரம் கொலை செய்யப்பட்டுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அதேநேரத்தில், வாணியம்பாடியைச் சேர்ந்த 20 வயது முதல்30 வயது வரை உள்ள இளைஞர்களுக்கு தாமாக முன் வந்து பல்வேறு உதவிகளை செய்து வரும்டீல் இம்தியாஸ் அவர்கள் மூலம்‘டீல் பிரதர்ஸ்’ என்ற அமைப்பை உருவாக்கி, அதன் மூலம் செய்யப்படும் சில சமூக சேவைகளை வீடியோவாக பதிவு செய்து அதைசமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து, இளைஞர்களை மூளைச்சலவை செய்து அவருடன் இணைத்து இளைஞர்களை தவறான பாதையில் அழைத்துச்செல்வதையும் போலீஸார் தடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE