நன்றியைச் செயல்பாடுகளால் தெரிவிப்போம்: முப்பெரும் விழாவையொட்டி தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

By செய்திப்பிரிவு

தந்தை பெரியாரின் துணிவு - பெரியாரிடம் பயின்ற பேரறிஞர் அண்ணாவின் கனிவு, தெளிவு - அண்ணா உருவாக்கிய திமுகவைக் கட்டிக்காத்த முத்தமிழறிஞர் கலைஞரின் திட்டமிட்ட உழைப்பு இந்த மூன்றையும் நமக்கான உணர்வுகளுக்கு உரமாக்கும் நிகழ்வுதான் முப்பெரும் விழா என்று திமுக தலைவர் ஸ்டாலின் தொண்டர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

''நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் மடல்.

தந்தை பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17, பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15, திமுக தொடங்கப்பட்ட செப்டம்பர் 17 ஆகிய இந்த மூன்று முக்கிய நிகழ்வுகளையும் இணைத்துக் கொண்டாடப்படும் திமுகவின் பெருவிழாதான், முத்தமிழறிஞர் கலைஞரால் முன்னெடுக்கப்பட்ட முப்பெரும் விழா!

திமுக உடன்பிறப்புகள் ஒவ்வொருவருக்கும் கொள்கை உணர்வையும் அதனைச் செயல்படுத்தக்கூடிய ஊக்கத்தையும் உத்வேகத்தையும் உருவாக்கிப் பெருக்குகின்ற உன்னதமான விழா. திமுகவின் இலட்சியப் பயணத்திற்கு ஒளி ஊட்டும் விழா. தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் புதுவெள்ளமெனத் திரண்டு வரும் உடன்பிறப்புகளின் பேரணி, சிந்தனையாளர்களின் சிறப்புமிகு கருத்தரங்கம், கவியரங்கம், பட்டிமன்றம், கண்காட்சி, கலை நிகழ்ச்சி எனப் பல்வேறு நிகழ்ச்சிகளும் முப்பெரும் விழாவில் நடைபெறும்.

அதுபோல, கட்சியின் வளர்ச்சிக்காகத் தம் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்ட மூத்த முன்னோடிகளுக்கு, பெரியார் - அண்ணா - கலைஞர் - பாவேந்தர் பெயரில் அமைந்த விருதுகள் வழங்கப்பட்டு, கட்சித் தலைவர்களின் உணர்ச்சிமிக்க உரைகள், இனமானப் பேராசிரியரின் திராவிடத் தத்துவச் சிறப்புரை, கட்சியின் களப் பணிகளை முன்னிறுத்தி - எதிர்காலப் பயணத்தைத் தீர்மானித்து - தொண்டர்களின் கைகளில் கொள்கை ஆயுதத்தை வார்ப்பித்து வழங்கும் தலைவர் கலைஞரின் நிறைவுரை எனச் சிறப்புடன் நடைபெற்ற முப்பெரும் விழாக்கள் பலவும் நெஞ்சை விட்டு எந்நாளும் நீங்காமல் கொள்கைச் சுடராக ஒளி வீசுகின்றன.

உயிர்நிகர் தலைவர் கலைஞரை இயற்கை சதி செய்து பிரித்துவிட்ட 2018ஆம் ஆண்டுக்குப் பிறகு, திமுக தலைவர் எனும் பெரும் பொறுப்பை தோளில் சுமந்திருக்கும் உங்களில் ஒருவனான என்னுடைய முன்னெடுப்பில், கட்சி நிர்வாகிகளின் ஒத்துழைப்புடன், முப்பெரும் விழாக்கள் நடைபெற்று வருகின்றன. கரோனா காலத்தைக் கவனத்தில் கொண்டு கடந்த 2020ஆம் ஆண்டு முப்பெரும் விழாவைக் கட்சியின் தலைமையிடமான அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் காணொலி வாயிலாகக் கண்டோர் மகிழச் சிறப்பாக நடத்தினோம்.

இந்த 2021ஆம் ஆண்டுக்கான முப்பெரும் விழாவும் அதுபோலவே, பேரிடர்க் காலக் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்து, கட்சி உடன்பிறப்புகள் அவரவர் மாவட்டங்களில் - ஒன்றியங்களில் இருந்து காணொலியில் காணவும் களிப்புறவுமான வகையில் சிறப்பாகவும் விரிவாகவும் திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு காணொலி வாயிலாக முப்பெரும் விழா நடைபெற்றபோது, திமுக தமிழ்நாட்டின் வலிமை மிக்க எதிர்க்கட்சியாக இருந்தது. இந்த ஆண்டு, முப்பெரும் விழாவின்போது, தமிழ்நாட்டை மீண்டும் வலிமையும் வளர்ச்சியும் கொண்ட மாநிலமாக மீட்டெடுக்கும் ஆளுங்கட்சியாக இருக்கிறது. அந்த வாய்ப்பைத் தந்த தமிழ்நாடு வாக்காளப் பெருமக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்கான பொதுக் கூட்டங்களைக்கூட நடத்த முடியாதபடி கரோனா இரண்டாவது அலையின் தாக்கம் சூழ்ந்திருந்த நிலையில், நன்றியைச் சொற்களால் தெரிவிப்பதற்கு ஈடாகச் செயல்பாடுகளால் தெரிவித்திடும் வகையில், திமுக அரசு ஒவ்வொரு நாளும் ஆக்கப்பூர்வமான பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது.

மக்களின் பேராதரவுடன் அமைந்த மகத்தான வெற்றிப் பயணத்தை, மக்களுக்கான சாதனைப் பயணமாக்கும் முனைப்புடன் திமுக அரசு செயல்பட்டு வரும் நிலையில், அதற்கான ஊக்கத்தினைப் பெறுகிற வகையிலும், வெற்றிக்குத் துணைநின்ற திமுக உடன்பிறப்புகளாம் உங்கள் அனைவருக்கும் நன்றியினைத் தெரிவிக்கும் வகையிலும் செப்டம்பர் 15ஆம் நாள் முப்பெரும் விழா கொண்டாடப்பட இருக்கிறது.

முப்பெரும் விழாவில் திமுக முன்னோடிகளுக்கு, மாணவர்களுக்கு, சமூக நலனில் அக்கறையுடன் செயல்படுவோருக்கு விருதுகளும் பரிசுகளும் வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு முப்பெரும் விழாவில் கழகம் வளர்த்த மூத்த முன்னோடிகளுக்கு வழங்கப்படும் விருதுகளான பெரியார் விருது ‘மிசா’ பி.மதிவாணனுக்கும், அண்ணா விருது சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் எல். மூக்கையாவுக்கும், கலைஞர் விருது சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் கும்மிடிப்பூண்டி கி. வேணுவுக்கும், பாவேந்தர் விருது வாசுகி ரமணனுக்கும், பேராசிரியர் விருது சட்டப்பேரவை முன்னாள் கொறடா பா.மு.முபாரக்குக்கும் வழங்கப்பட இருக்கிறது. மக்கள் நலனுக்காகப் பாடுபட்டோருக்கும், அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கும் ஊக்கமளித்திடும் பரிசுகள் வழங்கப்பட இருக்கின்றன.

எல்லா வகையிலும் கட்சித் தலைமைக்கும் உடன்பிறப்புகளுக்கும் ஊக்கம் வழங்கும் நிகழ்வான முப்பெரும் விழா வாயிலாக, திமுக அரசின் மகத்தான சாதனைகளை எடுத்துரைத்து, தொடர்ந்து மக்கள் பணியாற்றிட ஒரு நல்வாய்ப்பு அமைந்திருக்கிறது.

ஆட்சி அமைந்த 4 மாதங்களில் கரோனா இரண்டாம் அலையைக் கட்டுப்படுத்துவதில், அரசு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு பெருமளவில் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவந்துள்ளது. ஓயாமல் ஒலித்த ஆம்புலன்ஸ் சைரன் சத்தம் வெகுவாக அடங்கியுள்ளது. ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லாத நிலையைப் போர்க்கால அடிப்படையில் உருவாக்கியுள்ளோம். நோய்த்தொற்றுப் பரவலும் உயிரிழப்புகளும் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. மிக முக்கியமாக, தடுப்பூசியின் அவசியம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, மத்திய அரசிடமிருந்து தமிழ்நாட்டுக்குக் கிடைக்க வேண்டிய தடுப்பூசிகளைப் பெறுவதில் முனைப்பு காட்டி, கிடைத்த மருந்துகளை வீணடிக்காமல் ஒவ்வொருவருக்கும் இரண்டு தவணை தடுப்பூசி போடுவதை நல்வாழ்வுக்கான ஓர் இயக்கமாகவே மாற்றியிருக்கிறது திமுக அரசு.

அதன் விளைவாக, கடந்த ஆகஸ்ட் மாதம் வரை 3 கோடியே 5 லட்சத்து 52 ஆயிரத்து 541 என்ற அளவில் இருந்த தடுப்பூசி போட்டுக் கொண்டோரின் எண்ணிக்கை, செப்டம்பர் 1 முதல் 12ஆம் தேதி வரையிலான கால அளவில் 3 கோடியே 77 லட்சத்து 14 ஆயிரத்து 54 என்ற அளவில் உயர்ந்துள்ளது. மாநிலம் முழுவதும் தடுப்பூசி முகாம்களைத் திறம்பட நடத்தி, செப்டம்பர் 12ஆம் நாளில் மட்டுமே 25 லட்சத்து 85 ஆயிரத்து 238 பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதத்தில் தனியார் மருத்துவமனைகள் வாயிலாக இலவசத் தடுப்பூசி செலுத்தப்பட்டதையும் கணக்கில் சேர்த்தால் மொத்தமாக 4 கோடியே 5 லட்சத்து 749 என்ற எண்ணிக்கையை எட்டியுள்ளோம். அதாவது, இரு வார காலத்திற்குள் ஏறத்தாழ 1 கோடிப் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

முதல்வர் என்ற முறையில் உங்களில் ஒருவனான நான் எடுக்கும் முயற்சிகளுக்கு அமைச்சர்கள் - அதிகாரிகள் - சமூக அக்கறை கொண்டோர் என அனைத்துத் தரப்பினரும் முழு ஒத்துழைப்பு நல்கும் வகையில் திமுக அரசின் அணுகுமுறை இருப்பதால் அனைத்துத் துறைகளிலும் மக்கள் நலனில் அக்கறை செலுத்தப்படுகிறது.

ஆறாவது முறையாகப் பொறுப்பேற்ற திமுக அரசின் முதல் நிதிநிலை அறிக்கையில், கடுமையான நிதி நெருக்கடிக்கிடையிலும் பல்வேறு துறைகள் சார்ந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

அவை தொடர்பாக ஒவ்வொரு துறை சார்ந்த மானியக் கோரிக்கையிலும் அடுக்கடுக்காகத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ‘மக்கள் தொண்டே மகேசன் தொண்டு’ என்ற லட்சியத்தின் அடிப்படையில் மக்கள் நல்வாழ்வு, கல்வி, தொழில், வணிகம், வேளாண்மை, நெசவு, தொழில்நுட்பம், நகர மேம்பாடு, கிராம வளர்ச்சி, தொழிலாளர் நலன், மகளிர் முன்னேற்றம், ஒடுக்கப்பட்டோர் உரிமை, சிறுபான்மையினர் பாதுகாப்பு என அனைத்துத் தளங்களிலும் இந்தியாவுக்கே முன்னேற்ற வழிகாட்டும் ‘திராவிட மாடல்’ முறையில் அரசு முயற்சிகளை ஒருங்கிணைத்துச் செயலாற்றி வருகிறது.

தந்தை பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றுவதற்காக முத்தமிழறிஞர் கலைஞர் கண்ட கனவை நனவாக்கும் வகையில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தின் கீழ் அர்ச்சகர் பணிக்கான நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன.

தந்தை பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17ஆம் நாளை, அரசு சார்பில் சமூக நீதி நாளாகக் கடைப்பிடிப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மாநில உரிமைகளுக்காக நாடாளுமன்ற மாநிலங்களவையில் முழங்கிய பேரறிஞர் அண்ணாவின் கனவுகளை நனவாக்கும் வகையில் முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு - மாநில வளர்ச்சிக் குழு ஆகியவற்றின் வாயிலாக தமிழ்நாட்டை முன்னேற்றுவதற்கான முத்தான திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன.

14 வயதில் தமிழ்க் கொடியை ஏந்தி, 94 வயது வரை தமிழ் உணர்வையும் - தமிழர் நலனையும் தலையாய கொள்கையாகக் கொண்டு தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றிய முத்தமிழறிஞர் கலைஞரின் கனவை நனவாக்கும் வகையில் தமிழ் மொழி வளர்ச்சிக்கும், தமிழ்ப் பண்பாட்டு வரலாற்று ஆய்வுகளுக்கும், தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்குமான பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழுக்காகத் தங்களை அர்ப்பணித்த சான்றோர்கள், சமூக நீதிக்காக உழைத்த தலைவர்கள், மக்கள் நலனுக்காகப் பாடுபட்ட பெருமக்கள் உள்ளிட்ட அனைவரையும் போற்றுகின்ற வகையில் திமுக அரசின் சார்பிலான அறிவிப்புகளை உங்களில் ஒருவனான நான், தமிழ்நாடு சட்டப்பேரவையில் தொடர்ந்து வெளியிட்டுள்ளேன்.

இந்த வெற்றிப் பயணத்தை மறக்க முடியாத சாதனைப் பயணமாக மாற்றிட, உயிர்நிகர் தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகளான உங்கள் அனைவரின் ஒத்துழைப்பும் தேவை. சவால்கள் நிறைந்த பாதையில் திமுக அரசு தலைநிமிர்ந்து பயணிக்கிறது. சட்டரீதியாக எதிர்கொள்ள வேண்டிய போராட்டங்கள் நிறைந்துள்ளன.

தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கும் உயிர்க்கொல்லியான நீட் தேர்வை ரத்து செய்வதற்கான சட்டப் போராட்டத்தைத் திமுக அரசு தொடங்கிவிட்டது. நீட் தேர்வை ரத்து செய்யவும் - கல்வியை மாநிலப் பட்டியலுக்குத் திரும்பக் கொண்டு வருவதற்கும் சட்டப்பேரவை- நாடாளுமன்றம் - நீதிமன்றம் - மக்கள் மன்றம் உள்ளிட்ட அனைத்து மன்றங்களிலும் திமுக தனது தோழமைக்குரிய சமூக நீதி இயக்கங்களுடன் இணைந்து நின்று உறுதியுடன் இறுதிவரை போராடும். மாணவர் நலன் - மாநில நலன் என மக்களின் நலன் காக்கும் பணியில் முனைப்புடன் செயலாற்றும் திறனும், அதற்கு எதிரான எதையும் துணிவுடன் எதிர்க்கும் வலிமையும் முத்தமிழறிஞர் கலைஞரின் உடன்பிறப்புகளான நமக்கு நிரம்ப உண்டு.

தந்தை பெரியாரின் துணிவு - பெரியாரிடம் பயின்ற பேரறிஞர் அண்ணாவின் கனிவு, தெளிவு - அண்ணா உருவாக்கிய திமுகவைக் கட்டிக்காத்த முத்தமிழறிஞர் கலைஞரின் திட்டமிட்ட உழைப்பு இந்த மூன்றையும் நமக்கான உணர்வுகளுக்கு உரமாக்கும் நிகழ்வுதான் முப்பெரும் விழா.

மக்கள் நலன் காக்கும் அரசின் வெற்றிப் பயணம் - சாதனைப் பயணமாகத் தொடர்ந்திட, உடன்பிறப்புகளான உங்களுடன் இணைந்து உங்களில் ஒருவனான நானும் உறுதியேற்று - ஓய்வின்றித் தொடர்ந்து உழைத்திட ஊக்கம் தரும் வகையில் முப்பெரும் விழா சிறக்கட்டும்! அந்த ஊக்கமே, நமது உடலிலும் உள்ளத்திலும் நிறைந்து ஒவ்வொரு நாளும் நம்மை லட்சிய வழி நடத்தட்டும்!''

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

தமிழகம்

16 mins ago

தமிழகம்

23 mins ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்