கஞ்சா வியாபாரியைக் கைது செய்வதில் அலட்சியம்; காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்: டிஐஜி அதிரடி

By ந. சரவணன்

தலைமறைவாகச் சுற்றித்திரிந்த கஞ்சா வியாபாரியைக் கைது செய்வதில் அலட்சியம் காட்டிவந்த வாணியம்பாடி நகரக் காவல் ஆய்வாளர் கோவிந்தசாமி இன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி ஜீவா நகரைச் சேர்ந்தவர் இரும்பு வியாபாரி ‘டீல் இம்தியாஸ்’ (44). ‘டீல் பிரதர்ஸ்’ என்ற அமைப்பைத் தொடங்கி அதன் மூலம் இளைஞர்களை அதிக அளவில் திரட்டி வாணியம்பாடியில் கேங்ஸ்டராக வலம் வந்தார். இரும்பு வியாபாரத்துடன் கஞ்சா, குட்கா போன்ற போதைப் பொருட்களையும் இவர் விற்பனை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. போதைக்கு அடிமையாகும் இளைஞர்களைத் தன் வசப்படுத்தி அவர்கள் மூலம் பல்வேறு குற்றச்செயல்களில் ‘டீல் இம்தியாஸ்’ ஈடுபட்டு வந்ததாகவும் தெரிகிறது.

இதுமட்டுமின்றி, டீல் இம்தியாஸுக்குச் சொந்தமான வீடு மற்றும் இரும்புக் கிடங்கில் கஞ்சா, ஆயுதங்கள் பதுக்கப்பட்டிருப்பதாகவும், வெளியாட்கள் நடமாட்டம் அதிக அளவில் இருப்பதாகவும் வந்த தகவலின் பேரில் திருப்பத்தூர் எஸ்.பி. தனிப்பிரிவு போலீஸார் கடந்த ஜூலை மாதம் 26-ம் தேதி இரவு ‘டீல் இம்தியாஸுக்கு’ சொந்தமான வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடத்தியபோது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 8 கிலோ கஞ்சா, 10 பட்டா கத்திகள், 10 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இது தொடர்பாக அங்கிருந்த வாணியம்பாடியைச் சேர்ந்த கரண்குமார் (21), பைசல் (20), ரஹீம் (22), சலாவூதீன் (21) ஆகிய 4 பேரைக் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருந்த ‘டீல் இம்தியாஸை’ காவல் துறையினர் தேடி வந்தனர்.

இதற்கிடையே, வாணியம்பாடி ஜீவா நகரைச் சேர்ந்த மனிதநேய ஜனநாயகக் கட்சியின் முன்னாள் மாநிலத் துணைச் செயலாளரும், வாணியம்பாடி நகராட்சியின் முன்னாள் கவுன்சிலருமான வசீம் அக்ரம் (43) என்பவர், போலீஸாருக்குத் துப்பு கொடுத்ததால்தான் ‘டீல் இம்தியாஸ்’ வீடு மற்றும் அலுவலகத்தில் எஸ்.பி. தனிப்பிரிவு போலீஸார் சோதனை நடத்தி 4 பேரைக் கைது செய்ததாக ‘டீல் இம்தியாஸ்’ கருதினார். இதனால், வசீம் அக்ரம் மீது டீல் இம்தியாஸ் கோபம் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, வசீம் அக்ரமிற்கு அடிக்கடி கொலை மிரட்டல் வந்துள்ளது. இது தொடர்பாக வாணியம்பாடி நகரக் காவல் நிலையம், திருப்பத்தூர் எஸ்.பி. அலுவலகத்தில் வசீம் அக்ரம் புகார் அளித்தார். அதன் மீது காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. அதே நேரத்தில் தலைமறைவாக சுற்றித்திரிந்த ‘டீல் இம்தியாஸை’ கைது செய்யவும் போலீஸார் அக்கறை காட்டவில்லை.

இதனால் சுதந்திரமாக வலம் வந்த ‘டீல் இம்தியாஸ்’, கூலிப்படைகளை ஏவிக் கடந்த செப்டம்பர் 10-ம் தேதி இரவு 7 மணிக்கு வாணியம்பாடியில் தொழுகை முடிந்து மகனுடன் வீடு திரும்பிய வசீம் அக்ரமை வெட்டிக் கொலை செய்தார். இதில் கைது செய்யப்பட்ட 2 பேர் இந்தத் தகவலை போலீஸாரிடம் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், பணியில் மெத்தனமாகச் செயல்பட்ட திருப்பத்தூர் எஸ்.பி. சிபி சக்கரவர்த்தி நேற்று சென்னை சைபர் க்ரைம் பிரிவுக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், போலீஸாரால் தேடப்பட்டு வந்த கஞ்சா வியாபாரி ‘டீல் இம்தியாஸை’ முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கைது செய்திருந்தால் வசீம் அக்ரம் கொலை சம்பவம் நிகழ்ந்திருக்காது எனப் பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.

அதன் காரணமாக பணியில் அலட்சியமாக இருந்த வாணியம்பாடி நகரக் காவல் ஆய்வாளர் கோவிந்தசாமியை சஸ்பெண்ட் செய்து வேலூர் சரக டிஐஜி ஏ.ஜி.பாபு இன்று உத்தரவிட்டார். வேலூர் சரக டிஐஜியின் இந்த அதிரடி உத்தரவால் திருப்பத்தூர் மாவட்டக் காவல் துறையினர் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்