தமிழகம் முழுவதும் நடந்த மெகா முகாம்கள் மூலம் ஒரேநாளில் 28 லட்சம் தடுப்பூசிகள்: ஆர்வமுடன் போட்டுக் கொண்ட மக்களுக்கு பரிசுகள் கொடுத்து ஊக்கப்படுத்தினர்

By செய்திப்பிரிவு

தமிழகம் முழுவதும் நேற்று நடத்தப்பட்ட மெகா முகாம்களில் ஒரேநாளில் 28 லட்சத்து 36,776 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதிகபட்சமாக சென்னையில் 1 லட்சத்து 85,370 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

முகாமையொட்டி முன்கூட்டியே 30 லட்சம் தடுப்பூசிகளை அனைத்து மாவட்டங்களுக்கும் பிரித்து அனுப்பப்பட்டிருந்தன. காலை 7 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெற்ற முகாம்களில் மக்கள் ஆர்வமாக வந்து தடுப்பூசிகளை போட்டுக் கொண்டனர். பல இடங்களில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தமிழகத்தில் நேற்று முன்தினம் வரை 3 கோடியே 74 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருந்தன. நேற்று ஒரேநாளில் 28 லட்சத்து 36,776 தடுப்பூசிகளை செலுத்தியதன் மூலம் 4 கோடியை கடந்து தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட மாநிலம் என்ற சிறப்பு நிலையை தமிழகம் அடைந்துள்ளது.

கரோனா மூன்றாவது அலை எச்சரிக்கை இருப்பதாலும், கேரளாவில் தினசரி தொற்று பாதிப்பு 30 ஆயிரத்தை கடந்து பதிவாகி வருவதாலும் தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அதன் ஒருபகுதியாக, தமிழகம் முழுவதும் நேற்று ஆரம்ப சுகாதாரநிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும்முக்கிய இடங்கள் என 40 ஆயிரம் மையங்களில் கரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன.

கேரளா எல்லையை ஒட்டியுள்ள கன்னியாகுமரி, தென்காசி, தேனி, கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் அதிகமான முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. தடுப்பூசி போடும் பணியில் சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்களை ஊக்கப்படுத்துவதற்காக பல இடங்களில் குலுக்கல் முறையில் வெட்கிரைண்டர், மிக்ஸி உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இன்னும் சில நகராட்சி, பேரூராட்சிப்பகுதிகளில் தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களுக்கு ரொக்கமாக ரூ.100, 200 என வழங்கப்பட்டன. எவர்சில்வர் தட்டுகள் வழங்கப்பட்டன.

முதல் தவணை தடுப்பூசி போடவருபவர்களுக்கு, குலுக்கல் முறையில் தேர்வு செய்து தங்க காசு, வெள்ளிக் குத்துவிளக்கு, புடவை, வேட்டி வழங்கப்படும் என ஈரோடு மாவட்டம் பவானி வட்ட வருவாய் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இதையடுத்து, ஆர்வத்துடன் மக்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இதற்கான குலுக்கல் நாளை (14-ம் தேதி) மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் சில இடங்களில் நடைபெற்ற தடுப்பூசி முகாம்களில், தடுப்பூசி செலுத்திக்கொள்ள வந்த மக்களின் பெயர்களை எழுதி வாங்கி, குலுக்கல் முறையில் பரிசு பெறுபவர்கள் அறிவிக்கப்பட்டனர். டி.வி., சேலை, செல்போன், மிக்ஸி உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

திருச்சி மாநகராட்சி கோ-அபிஷேகபுரம் கோட்டத்தில், “கரோனா தடுப்பூசிசெலுத்திக்கொள்வோரில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு முதல் பரிசாக ரூ.8,000மதிப்புள்ள பட்டுப்புடவை, 2-வது பரிசாக ரூ.7,000 மதிப்புள்ள ஆன்ட்ராய்டு செல்போன், 3-வது பரிசாக ரூ.3,000 மதிப்புள்ள காஸ் அடுப்பு, 4-வது பரிசாக ரூ.2,500 மதிப்பில் இரவு உணவு வழங்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் நகராட்சி வல்லல் பாரி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு ஆட்சியர் சந்திரகலா மரக்கன்று வழங்கினார்.

பேராவூரணி அருகே பெரியநாயகிபுரம் ஊராட்சியில் குலுக்கல்முறையில் தேர்வு செய்யப்பட்ட 3 பேருக்கு பரிசாக ரூ.1,500, ரூ.1,000, ரூ.500 வழங்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் செட்டிநாயக்கன்பட்டி கிராம ஊராட்சியில் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் செல்போனுக்கு ரூ.100 ரீசார்ஜ் செய்யப்பட்டது. மேலும் குலுக்கல் முறையில் முதல் பரிசாக தங்க நாணயம், 2-வது பரிசாக செல்போனும் வழங்கப்படுகிறது. இதற்கான கூப்பனை ஊராட்சி நிர்வாகம் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு வழங்கியது.

திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு நகராட்சியில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து முதல் பரிசாக 4 நபருக்கு மிக்ஸர் கிரைண்டரும், 2-ம் பரிசாக 20 நபர்களுக்கு ஹாட் பாக்ஸும் 3-ம் பரிசாக 50 பேருக்கு டிபன் கேரியர் மற்றும் 100 நபர்களுக்கு டிபன் பாக்ஸும் பரிசாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் கவுள்பாளையம் ஊராட்சியில் தடுப்பூசி செலுத்திக்கொண்ட அனைவருக்கும் தலா ஒரு கிலோ வெண்டைக்காய் இலவசமாக வழங்கப்பட்டது.

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நடைபெற்றகரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்த பிறகு செய்தியாளர்களிடம் கூறும்போது, "மக்கள் ஆர்வமுடன்வந்து தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர். தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்ட இடங்களில் மறுநாள் முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்றார்.

தடுப்பூசிதான் தீர்வு

சென்னையில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற தடுப்பூசி முகாம்களை ஆய்வு செய்த பின்னர்சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் நடைபெற்று வரும் மெகா தடுப்பூசி முகாம் அனைத்து மாவட்டங்களிலும் வரலாறு காணாத வகையில் மக்களின் வரவேற்பு உள்ளது. தமிழகம் - கேரளா எல்லைக்கு உட்பட்ட மாவட்டங்களில் தடுப்புக்கான வரவேற்பு அதிகமாக உள்ளது. 18-க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் முகாமினை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இன்று சென்னையில் அதிக தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. கோவேக்சின் தடுப்பூசியின் பற்றாக்குறை சரி செய்யப்படும். தடுப்பூசி தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தவறான கருத்துகளைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம்.

தமிழகத்தில் 48 சதவீதம் பேர் முதல் தவணையும், 13 சதவீதம் பேர் 2-வது தவணை தடுப்பூசியும் போட்டுள்ளனர். பாலூட்டும் தாய்மார்களை பொருத்தவரை 3.31 லட்சம் பேருக்கும் மாற்றுத்திறனாளிகள் 1.72 லட்சம் பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முதல்வர் பாராட்டு

இதனிடையே ஒரேநாளில் 28 லட்சம் தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதை முதல்வர் ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் அவர்வெளியிட்டுள்ள பதிவில் “கரோனாவை தடுத்து வெல்லும் ஆயுதமாம் தடுப்பூசி போடுவதை மாபெரும் பேரியக்கமாக தமிழக அரசு நடத்தி வருகிறது. 28 லட்சம் தடுப்பூசி செலுத்தப்பட்டு இருப்பது இந்திய சாதனை.இதுவரை 4 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டு இருப்பது இமாலய சாதனை. மாரத்தான் வேகத்தில் செயல்படும் அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கும் எனதுநன்றி. தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் செலுத்தி கொள்ளுங்கள். நம்மையும் காப்போம்; நாட்டையும் காப்போம். இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

40 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்