நீட் தேர்வை ரத்து செய்ய தன்னெழுச்சியான போராட்டம் நடைபெற வேண்டும்: உதயநிதி பேட்டி

By எஸ்.விஜயகுமார்

நீட் தேர்வை ரத்து செய்ய தன்னெழுச்சியான போராட்டம் நடைபெற வேண்டும். அனைத்துத் தரப்பு மக்களும் நீட் தேர்வை எதிர்க்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நீட் அச்சம் காரணமாக தற்கொலை செய்துகொண்ட மாணவர் தனுஷின் உடலுக்கு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன், எம்எல்ஏவும் திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், திமுக எம்.பி. பார்த்திபன்,எம்எல்ஏ ராஜேந்திரன் உள்ளிட்டோர் நேரில் வந்து மாணவர் தனுஷின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். மாணவர் தனுஷின் குடும்பத்திற்கு திமுக சார்பில் ரூ.10 லட்சம் தொகையை உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

இதன்பின்னர் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் எது நடக்கக்கூடாது என்று அனைவரும் எண்ணிக் கொண்டிருந்தோமோ அந்தத் துயரம் நடந்து விட்டது. நீட் தேர்வால் ஆண்டுதோறும் குழந்தைகள் தங்கள் இன்னுயிரை இழந்து வருவது மிகுந்த வேதனைக்குரிய விஷயமாகும். நீட் தேர்வு வேண்டாம் என்று அனைவரும் குரல் கொடுத்து வரும் நிலையில் மத்திய அரசு இதில் பிடிவாதமாக உள்ளது.

மாணவர் தனுஷ், நீட் தேர்வினால் தற்போது உயிரிழந்துவிட்டார். நீட் தேர்வை ரத்து செய்வதற்கு, சட்டப்பேரவையில் நாளை மசோதா நிறைவேற்றப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். இங்கு அரசியல் பேச விரும்பவில்லை. நீட் தேர்வினால் மாணவர்கள், பெற்றோர்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இந்த நீட் தேர்வை ரத்து செய்ய கூட்டு முயற்சி நிச்சயம் அவசியம்.

திமுக தேர்தல் அறிக்கை மற்றும் அதிமுக தேர்தல் அறிக்கையிலும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் 2 முறை சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் நாளையும் (13- ம் தேதி) கூடுதல் அழுத்தத்தோடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைப்போம்.

தமிழக முதல்வர் பிரதமரைச் சந்திக்கும்போதெல்லாம் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி வலியுறுத்தி வருகிறார். மீண்டும் வலியுறுத்துவார். நீட் தேர்வு குறித்து சட்டப்போராட்டம் நடத்தி நிச்சயம் நல்ல முடிவு எடுக்கப்படும். பெற்றோர்கள், மாணவர்கள் மனம் தளர வேண்டாம். நிச்சயம் விடிவுகாலம் கிடைக்கும். நீட் தேர்வு விவகாரத்தில், அனைத்து மாநில முதல்வர்களுடன் சேர்ந்து அழுத்தம் கொடுக்கப்படும். நீட் தேர்வினால் திமுக, அதிமுக, பாமக, பாஜக, உள்பட அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப் படுகின்றனர். இது மாணவர்களின் பிரச்சனை என்பதால், இதில் திமுக தொடர்ந்து சட்டப் போராட்டத்தை முன்னெடுக்கும்.

மாணவர்கள் தயவுசெய்து மனச்சோர்வு அடையாமல் இருக்க வேண்டும். திமுக ஆட்சி மாணவர்களுக்கு எப்போதும் துணை நிற்கும். நீட் தேர்வை ரத்து செய்ய தன்னெழுச்சியான போராட்டம் நடைபெற வேண்டும். அனைத்துத் தரப்பு மக்களும் நீட் தேர்வை எதிர்க்க வேண்டும். மாணவர்களுக்குத் துணை நிற்க வேண்டும்.

இவ்வாறு உதயநிதி தெரிவித்தார்.

இதனிடையே, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், மாணவரின் பெற்றோரை, செல்போனில் தொடர்பு கொண்டு அவர்களுக்கு ஆறுதல் கூறினார். கூழையூர் கிராம பொது மக்களும் மாணவர் தனுஷுக்கு அஞ்சலி செலுத்தினர்.

முன்னதாக, கூழையூர் வீட்டில் வைக்கப்பட்ட மாணவர் தனுஷின் உடலுக்கு எதிர்க் கட்சித் தலைவர் பழனிசாமி முன்னாள் அமைச்சர் செம்மலை அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சந்திரசேகரன் அதிமுக எம்எல்ஏ மணி பாமக எம்எல்ஏ சதாசிவம் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

34 mins ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்