முதல்வர் வெளியிட்டுள்ள 14 அறிவிப்புகள் என்பது, பாரதிக்குப் புகழ் சேர்க்கும் வகையில் இனி செய்வதற்கு எதுவுமே இல்லை என்று கூறும் அளவுக்கு அமைந்துள்ளதாக காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி புகழாரம் சூட்டியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை
’’எழுத்து, கவிதைகள் வழியாக நாட்டின் விடுதலைக்கு உழைத்த பாரதியாரின் நினைவு தினமான செப்டம்பர் 11ஆம் நாள், மகாகவி நாளாக ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்படும் என்பது உள்ளிட்ட 14 அறிவிப்புகளை சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
தேசப்பற்று, தெய்வப்பற்று, தமிழ்ப் பற்று, மானுடப் பற்று ஆகிய நான்கும் கலந்தவர்தான் பாரதியார். கலைஞர் முதல்வராக இருந்த போதுதான், எட்டயபுரம் பாரதியார் வீட்டை அரசு சார்பில் வாங்கி நினைவு இல்லம் ஆக்கினார். இந்நிலையில், பாரதியாருக்கு மேலும் புகழ் சேர்க்கும் வகையில் அவரது நினைவு நாளான செப்டம்பர் 11 ஆம் நாள் ஆண்டுதோறும் மகாகவி நாளாகக் கடைப்பிடிக்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளது தமிழ் சமுதாயத்துக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
அதோடு, பள்ளி மற்றும் கல்லூரி அளவிலான கவிதைப் போட்டிகள் நடத்தி, ரூ.1 லட்சம் பரிசுத் தொகையுடன் பாரதி இளம் கவிஞர் விருது வழங்கப்படும் என்ற அறிவிப்பும் பாரதிக்குப் புகழ் சேர்ப்பதாக அமைந்துள்ளது.
பாரதியாரின் நினைவு நூற்றாண்டையொட்டி, சென்னையில் உள்ள பாரதியார் நினைவு இல்லத்தில் வாரந்தோறும் செய்தித்துறை சார்பில் நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்றும், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரில் ஆய்விருக்கை அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் காசியில் பாரதியார் வாழ்ந்த வீட்டைப் பராமரிக்க அரசின் சார்பில் நிதியுதவி அளிக்கப்படும், பாரதியார் படைப்புகளைக் குறும்படம் மற்றும் நாடக வடிவில் தயாரிக்க நிதியுதவி வழங்கி நவீன ஊடகங்கள் வழியே வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்பன போன்ற 14 அறிவிப்புகள் பாரதியை நேசிப்பவர்களுக்கு நெகிழ்வை ஏற்படுத்தியுள்ளன.
பாரதிக்குப் பெருந்தலைவர் காமராசரும் கலைஞரும் எவ்வளவோ பெருமைகளைச் சேர்த்துள்ளனர். முதல்வர் வெளியிட்டுள்ள 14 அறிவிப்புகள் என்பது, பாரதிக்குப் புகழ் சேர்க்கும் வகையில் இனி செய்வதற்கு எதுவுமே இல்லை என்று கூறும் அளவுக்கு அமைந்துள்ளன. அந்த அளவுக்கு முழுமையான புகழ் மாலையை பாரதிக்கு முதல்வர் சூட்டியுள்ளார்.
திராவிட இயக்கத்தின் நீட்சியாக இருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், பாரதியை என்றென்றும் நினைவுகூரும் வகையில் அறிவிப்புகளை வெளியிட்டதற்குத் தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர் என்ற முறையில் மிகுந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்’’.
இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago