பாரதியாரின் நினைவு நாள் இனி 'மகாகவி நாள்': முதல்வர் ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் நன்றி 

By செய்திப்பிரிவு

பாரதியாரின் நினைவு நாளை 'மகாகவி நாளாக' அறிவித்ததற்கு முதல்வர் ஸ்டாலினுக்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, ஓபிஎஸ் இன்று (செப். 11) வெளியிட்ட அறிக்கை:

"பெரியாரின் பிறந்த நாள் 'சமூக நீதி' நாளாகக் கொண்டாடப்படும் என்று முதல்வர் சில தினங்களுக்கு முன் அறிவித்தபோது, அதனை நான் வரவேற்றதோடு, இந்திய விடுதலைக்கு முன், மொழிப் பற்றினையும், நாட்டுப் பற்றினையும், ஒருமைப்பாட்டினையும், காவிரி போல் பெருக்கெடுத்து ஓடும் தன் பாட்டுத் திறத்தால், கவிதை நயத்தால் உணர்த்தி, உறங்கிக் கிடக்கும் மக்களைத் தட்டி எழுப்பி, விடுதலை உணர்வினை ஊட்டிய மகாகவி பாரதியாரோடு ஒப்பிட்டு தமிழகத்தில் சமுதாய மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர் பெரியார் என்று கூறியிருந்தேன்.

இந்த நிலையில், பாரதியாரின் நூற்றாண்டு நினைவு தினத்தையொட்டி, பாரதியாரின் நினைவு நாளான செப்டம்பர் 11 ஆம் நாள் 'மகாகவி' நாளாக அரசு சார்பில் கொண்டாடப்படும் என்று முதல்வர் அறிவித்திருப்பது அனைவரும் வரவேற்கக்கூடிய ஒன்று.

தமிழ் மொழியின் சிறப்பினை உலகுக்கு உணர்த்திய கவிஞர் பாரதியார். மொழிப்பற்று உடையவனே நாட்டுப்பற்று உடையவனாய் வாழ இயலும் என்பதை மெய்ப்பித்துக் காட்டியவர் பாரதியார். விடுதலைப் பாடல்களால் தமிழகத்தை வீறுபெறச் செய்தவர் பாரதியார். பாரதி ஒரு பன்மொழிப் புலவர்.

ஆங்கிலம், பிரெஞ்சு, தெலுங்கு, இந்தி என, பல மொழிகளில் தேர்ச்சி பெற்றிருந்தார். பல மொழிகளில் தேர்ச்சி பெற்றிருந்த பாரதி, 'யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம்' எனப் பாடினார் என்றால், அந்த அளவுக்கு உயர்ந்த மொழி தமிழ் மொழி என்பதுதான் அதன் உள்ளார்ந்த பொருள்.

தமிழ் மொழியின் சிறப்பையும், உயர்வையும் கூறி இளைஞர்களின் உள்ளங்களில் இன்றளவிலும் சிம்மாசனமிட்டு இருப்பவர் பாரதியார். மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் சிலகாலம் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றிய பாரதி, பல செய்தி இதழ்களையும் நடத்திய பெருமைக்குரியவர்.

'செந்தமிழ் நாடெனும் போதினிலே, இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே' எனத் தாய் நாட்டின் உயர்வை வியந்து பாடிய பாரதி, நாட்டுப் பற்றினைப் போற்றும் வகையில், 'வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர், வாழிய பாரத மணித் திருநாடு' என்று பாரத நாட்டையும் போற்றி மகிழ்ந்தார்.

'முப்பது கோடி முகமுடையாள் - உயிர் மொய்ம்புற ஒன்றுடையாள் - இவள் செப்புமொழி பதினெட்டுடையாள் - எனிற் சிந்தனை ஒன்றுடையாள்' எனப் பாடி, இந்தியர்களின் ஒற்றுமை உணர்வைப் படம் பிடித்துக் காட்டியவர் பாரதியார்.

'ஆணும், பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவில் ஓங்கி இவ்வையகம் தழைக்குமாம்' என்ற பாரதியாரின் வாக்குக்கிணங்க, பெண்களின் முன்னேற்றத்துக்காகவும், பெண்ணுரிமையை நிலைநாட்டும் வகையிலும், பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம், தாலிக்கு தங்கத்துடன் கூடிய திருமண நிதியுதவித் திட்டம் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம், மகளிர் இரு சக்கர வாகனத் திட்டம் என பல்வேறு திட்டங்களைத் தீட்டிச் செயல்படுத்தியதோடு, சென்னை திருவல்லிக்கேணியில் பாரதியார் வாழ்ந்த இல்லத்தைப் புதுப்பித்து அதனை மக்கள் பயன்பாட்டுக்குத் திறந்து வைத்தவர் ஜெயலலிதா.

'ஏழை என்றும், அடிமை என்றும், எவனும் இல்லை சாதியில்' என்று பாடிய பாரதியின் நினைவு நாளான செப்டம்பர் 11ஆம் நாள் 'மகாகவி நாளாக' அரசு சார்பில் கொண்டாடப்படும் என்று அறிவித்ததோடு, பாரதியாரின் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்கள் மற்றும் கட்டுரைகளைத் தொகுத்து 'மனதில் உறுதி வேண்டும்' என்ற புத்தகத்தை மாணவ, மாணவியருக்கு வழங்குதல்; பாரதியின் உருவச் சிலைகள், உருவம் பொறித்த கலைப் பொருட்களை பூம்புகார் நிறுவனத்தின் மூலம் குறைந்த விலையில் விற்பனை செய்தல்; பாரதி குறித்த நிகழ்வுகளை 'பாரெங்கும் பாரதி' என்ற தலைப்பில் நடத்துதல்; 'திரையில் பாரதி' என்ற நிகழ்வினை நடத்துதல்; திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பாரதியின் பெயரில் இருக்கை அமைத்தல்; உத்தரப்பிரதேச மாநிலம் காசியில் பாரதியார் வாழ்ந்த வீட்டைப் பராமரிக்க அரசு சார்பில் நிதியுதவி வழங்குதல் உள்ளிட்ட பதினான்கு அறிவிப்புகளைத் தமிழக முதல்வர் அறிவித்து இருக்கிறார்.

இந்த அறிவிப்புகளை அதிமுகவின் சார்பில் வரவேற்பதோடு, இந்த அறிவிப்புகளை வெளியிட்ட தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு எனது மனமார்ந்த நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறேன்".

இவ்வாறு ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

22 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்