பாரதியாரின் நினைவு நாள் இனி 'மகாகவி நாள்': நூற்றாண்டு நினைவுதினத்தை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலினின் 14 அறிவிப்புகள்

By செய்திப்பிரிவு

பாரதி மறைந்த நூற்றாண்டின் நினைவாக அவரது பெருமையைப் போற்றும் வகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் இன்று (செப். 10) வெளியிட்ட அறிக்கை:

"பாட்டுக்கொரு புலவன் பாரதியடா

அவன் பாட்டைப் பண்ணோடு ஒருவன் பாடினானடா

அதைக் கேட்டுக் கிறுகிறுத்துப் போனேனடா'

- என்று கவிமணி தேசிக விநாயகம் பாடினார்.

இப்படிக் கவிமணிகளையே பாடவைத்த பெரும்புலவன் பாரதியின் பெருமையைப் போற்றும் அறிவிப்புகளை வெளியிட விரும்புகிறேன்.

கடந்த ஆகஸ்ட் 15-ம் நாள் கோட்டைக் கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்துவிட்டு உரையாற்றும்போது, மகாகவி பாரதியார் மறைந்து 100 ஆண்டுகள் ஆகிவிட்டது, அவர் மறைந்த ஆண்டின் நூற்றாண்டு என்று இந்த ஆண்டைக் குறிப்பிட்டுக் காட்டினேன். நூறாண்டுகள் கழித்து மட்டுமன்று, ஆயிரமாண்டுகள் கழித்தும் உயிரோட்டமுள்ள கவிதைகளை, பாடல்களைத் தமிழ்ச் சமுதாயத்துக்கு விட்டுச் சென்றவர்தான் மகாகவி என்று போற்றப்பட்ட பாரதியார்.

'பைந்தமிழ்த் தேர்ப்பாகன், அவனொரு

செந்தமிழ்த் தேனீ, சிந்துக்குத் தந்தை!

குவிக்கும் கவிதைக் குயில்! இந் நாட்டினைக்

கவிழ்க்கும் பகையைக் கவிழ்க்கும் கவிமுரசு;

நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா;

காடு கமழும் கற்பூரச் சொற்கோ;

கற்பனை ஊற்றாம் கதையின் புதையல்

திறம் பாட வந்த மறவன்; புதிய

அறம் பாட வந்த அறிஞன்; நாட்டில்

படரும் சாதிப் படைக்கு மருந்து!

மண்டும் மதங்கள் அண்டா நெருப்பவன்;

அயலார் எதிர்ப்புக்கு அணையா விளக்கவன்;

என்னென்று சொல்வேன் என்னென்று சொல்வேன்'

- என்று மகாகவியை வர்ணித்து எழுதியவர் தான் பாரதிதாசன்.

தேசப் பற்று - தெய்வப் பற்று - தமிழ்ப் பற்று - மானுடப்பற்று ஆகிய நான்கும் கலந்தவர்தான் பாரதியார். நாட்டு விடுதலைக்காகப் போராடியவராக மட்டுமே இருந்திருந்தால் அதற்காக மட்டுமே அவர் நினைவுகூரப்பட்டிருப்பார். அதையும் தாண்டி சமூக, பொருளாதார உரிமைகளுக்காகவும் எழுதியதால்தான் பாரதியார் கவிதை வரிகளாய் உலவி வருகிறார்.

பாரதியார் வரகவியா, மகாகவியா, தேசியக் கவியா என்று விவாதம் நடந்து கொண்டிருந்த காலத்தில், 1947-ம் ஆண்டே பாரதியாரை 'மக்கள் கவி' என்று எழுதவும் பேசவும் தொடங்கியவர் அண்ணா.

ஒரு பக்கம் நிலப்பிரபுத்துவம் - இன்னொரு பக்கம் சனாதனம் - இந்த இரண்டுக்கும் இடையில் இருந்து புதுயுகத்தைப் படைக்க நினைத்தவர் பாரதி என்று அண்ணா எழுதினார்.

அதனால்தான் திமுக அரசு அமைந்து, தலைவர் கருணாநிதி முதல்வரானபோது எட்டயபுரத்தில் பாரதியார் பிறந்த வீட்டை அரசு சார்பில் விலைக்கு வாங்கி அதனை நினைவில்லம் ஆக்கினார். அன்றைய அமைச்சர் சி.பா. ஆதித்தனார் தலைமையில் 12.5.1973 அன்று நடந்த விழாவில் பாரதியார் இல்லத்தை வரலாற்றுச் சின்னமாக அறிவித்து முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார்.

இதன் தொடர்ச்சியாக, பாரதியார் நினைவைப் போற்றும் வகையில், அவர் மறைந்த நூற்றாண்டின் நினைவாக 14 முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறேன்.

முதல்வர் ஸ்டாலின்: கோப்புப்படம்

1. பாரதியாரின் நினைவு நாளான செப்டம்பர் 11-ம் நாள், அரசின் சார்பில் இனி ஆண்டுதோறும் 'மகாகவி நாளாக' கடைப்பிடிக்கப்படும். இதனையொட்டி, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மாநில அளவில் கவிதைப் போட்டி நடத்தி 'பாரதி இளங்கவிஞர் விருது' மாணவன் ஒருவருக்கும், மாணவி ஒருவருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையுடன் வழங்கப்படும்.

2. பாரதியாரின் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்கள் மற்றும் கட்டுரைகளைத் தொகுத்து 'மனதில் உறுதி வேண்டும்' என்ற புத்தகமாக, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் சுமார் 37 லட்சம் பேருக்கு 10 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும்.

3. மகாகவி பாரதியின் வாழ்க்கை குறித்தும், அவரின் படைப்புகள் குறித்தும் ஆய்வாளர்கள் பலர் குறிப்பிடத்தக்க ஆய்வுகளைச் செய்துள்ளனர். அவர்களில் முக்கியப் பங்காற்றிய பாரதி ஆய்வாளர்களான, மறைந்த பெ. தூரன், ரா.அ. பத்மநாபன், தொ. மு. சி. ரகுநாதன், இளசை மணியன் ஆகியோரின் நினைவாக அவர்தம் குடும்பத்தாருக்கும் மற்றும் மூத்த ஆய்வாளர் சீனி. விசுவநாதனுக்கும், பேராசிரியர் ய. மணிகண்டனுக்கும், தலா மூன்று லட்சம் ரூபாயும், விருதும், பாராட்டுச் சான்றிதழும் அரசால் வழங்கி கவுரவிக்கப்படும்.

4. பாரதியின் உருவச் சிலைகள், உருவம் பொறித்த கலைப்பொருட்களைப் பூம்புகார் நிறுவனத்தின் மூலம் உற்பத்தி செய்து குறைந்த விலையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்வதற்கு ஏற்பாடு செய்யப்படும்.

5. பாரதியின் கையெழுத்துப் பிரதிகள் தேடித் தொகுக்கப்பட்டு, அவை வடிவம் மாறாமல் செம்பதிப்பாக வெளியிடப்படும். பாரதியின் வாழ்வை சிறுவர்கள் அறியும் வண்ணம் சித்திரக்கதை நூலாகவும், பாரதியாரின் சிறந்த நூறு பாடல்களைத் தேர்வு செய்து தமிழகத்தின் புகழ்பெற்ற ஓவியர்களின் வண்ண ஓவியங்களுடன் நூல் ஒன்றாகவும் வெளியிடப்படும். மேலும், பாரதியாரின் படைப்புகள் மற்றும் பாரதியார் குறித்த முக்கிய ஆய்வு நூல்களும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிப்படும்.

6. பாரதியாரின் நூல்கள் மற்றும் அவரைப் பற்றிய ஆய்வு நூல்கள் அனைத்தையும் தொகுத்து, எட்டையபுரம் மற்றும் திருவல்லிக்கேணியில் உள்ள பாரதியார் நினைவு இல்லங்களிலும், சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்திலும், மதுரையில் அமைய உள்ள கலைஞர் நினைவு நூலகத்திலும் வைப்பதற்கு 'பாரதியியல்' என்ற தனிப்பிரிவு ஏற்படுத்தப்படும்.

7. உலகத் தமிழ்ச் சங்கங்களை ஒருங்கிணைத்து பாரதி குறித்த நிகழ்வுகள் 'பாரெங்கும் பாரதி' என்ற தலைப்பில் நடத்தப்படும்.

8. திரைப்படங்களில் இடம்பெற்ற பாரதியாரின் பாடல்கள் மட்டுமே இடம்பெறும் இசைக்கச்சேரி 'திரையில் பாரதி' என்ற நிகழ்வாக நேரு உள்விளையாட்டு அரங்கில் கரோனா தொற்றுப் பரவல் முழுமையாக ஓய்ந்த பிறகு நடத்தப்படும்.

9. பாரதியாரின் நினைவு நூற்றாண்டை முன்னிட்டு அடுத்த ஓராண்டுக்கு, சென்னை பாரதியார் நினைவு இல்லத்தில் வாரந்தோறும் நிகழ்ச்சியொன்று செய்தித்துறையின் சார்பில் நடத்தப்படும்.

10. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரில் ஆய்விருக்கை அமைக்கப்படும்.

11. உத்தரப்பிரதேச மாநிலம் காசியில் பாரதியார் வாழ்ந்த வீட்டைப் பாராமரிக்க அரசின் சார்பில் நிதியுதவி வழங்கப்படும்.

12. பாரதியார் படைப்புகளைக் குறும்படம் மற்றும் நாடக வடிவில் தயாரிக்க நிதியுதவி வழங்கி அவற்றை நவீன ஊடகங்களின் வழியாக வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

13. பாரதியாரின் உணர்வுமிக்க பாடல் வரிகளைப் பள்ளிகள், கல்லூரிகள், பேருந்து நிலையங்கள் போன்ற முக்கிய இடங்களில் எழுதியும் வரைந்தும் பரப்பப்படும்.

14. பெண் கல்வியையும், பெண்களிடம் துணிச்சலையும் வலியுறுத்திய மகாகவி பாரதியின் பெயர், ஊரக வளர்ச்சித்துறையில் செயல்படுத்தப்படவுள்ள மகளிர் சுயஉதவிக் குழுக்கள் வாழ்வாதாரப் பூங்காவுக்கு 'மகாகவி பாரதியார் வாழ்வாதாரப் பூங்கா' எனப் பெயர் சூட்டப்படும்.

எழுத்தும் தெய்வம் - எழுதுகோலும் தெய்வம் என வாழ்ந்து புதுநெறி காட்டிய புலவன் பாரதியைப் போற்றுவோம்".

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்