மலைக்கோட்டை கோயில் யானை லட்சுமிக்கு ஷவருடன் கூடிய குளியல் தொட்டி

By ஜெ.ஞானசேகர்

மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயில் யானை லட்சுமி, தனக்கு கட்டியுள்ள குளியல் தொட்டியில் இன்று இறங்கி மகிழ்ச்சியுடன் குளித்து மகிழ்ந்தது.

திருச்சியில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயில். இந்தக் கோயிலுக்கு தனியார் நகைக் கடை நிறுவனம் தானமாக அளித்த யானை லட்சுமி (30), கடந்த 1993 முதல் சேவையாற்றி வருகிறது.

யானை லட்சுமியைக் குளிப்பாட்டுவதற்காக நந்தி கோயில் தெருவில் உள்ள நாகநாதர் சுவாமி கோயிலின் நந்தவனத்தில் 22 அடி நீளம், 22 அடி அகலம், 4 அடி ஆழத்தில் புதிய குளியல் தொட்டி ரூ.5 லட்சம் செலவில் அண்மையில் கட்டி முடிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து, குளியல் தொட்டியில் இன்று முதல் முறையாக யானை லட்சுமி இறங்கி ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தது. இந்தக் குளியல் தொட்டியில் ஷவர் வசதியும் அமைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மலைக்கோட்டை கோயில் உதவி ஆணையர் த.விஜயராணி, "இந்து தமிழ் திசை" நாளிதழிடம் கூறும்போது, "இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு உத்தரவின் பேரில், துறை உயர் அலுவலர்களின் வழிகாட்டுதல், வனத் துறை மற்றும் கால்நடைத் துறை அனுமதியுடன் உபயதாரர்களின் ரூ.5 லட்சம் நிதியுதவியில் இயற்கை சூழலில் இந்தக் குளியல் தொட்டி கட்டப்பட்டுள்ளது. இங்கு யானையை தினமும் குளிப்பாட்டுவதுடன், நடைப் பயிற்சியும் அளிக்கப்படும்" என்று தெரிவித்தார்.

திருச்சி திருவானைக்காவல் கோயில் யானை அகிலாவுக்கு, கோயில் வளாகத்திலேயே கடந்த ஜூன் மாதம் குளியல் தொட்டி திறக்கப்பட்ட நிலையில், தற்போது மலைக்கோட்டை கோயில் யானைக்கும் குளியல் தொட்டி திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE