மாநில அளவில் ஆதி திராவிடர்கள், பழங்குடியினர் ஆகியோருடைய சட்டபூர்வமான உரிமைகளைப் பாதுகாக்கவும், அவர்களுடைய முக்கியமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும், ‘தமிழ்நாடு ஆதி திராவிடர்- பழங்குடியினர் நல ஆணையம்’ என்கிற புதிய அமைப்பு உருவாக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்துச் சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது:
''திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி எப்போது அமைகின்றதோ, அப்பொழுதெல்லாம் ஒடுக்கப்பட்டவர்களுக்காகவும், ஒதுக்கப்பட்டவர்களுக்காகவும் பாடுபடுகிற அரசாக விளங்கியிருக்கிறது. சமூகத்தில் சதிகளாலும், சாதிகளாலும் புறக்கணிப்பட்டவர்களை அன்புக்கரம் கொண்டு அரவணைத்து, அவர்கள் தங்களிடம் தேங்கிக் கிடக்கும் திறமைகளையும், அவர்களால் சமூகம் பெறத்தக்க பங்களிப்புகளையும் வெளிக்கொண்டு வருவதில் அதிக அக்கறையை எப்போதும் காட்டி வரும் கொள்கைப் பிடிப்பைக் கொண்ட இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம்.
இந்தியாவிலேயே முதன்முறையாக ஆதி திராவிடர்களுக்குக் கான்கிரீட் கூரையிலான தொகுப்பு வீடுகள், இரட்டைக் குவளை முறை ஒழிப்பு, சமத்துவபுரங்கள், சமத்துவ மயானத்திற்கு ஊக்கத் தொகை, உள்ளாட்சித் தேர்தல்களை நடத்தவே முடியாமலிருந்த பாப்பாரப்பட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம், கொட்டகச்சியேந்தல் ஆகிய இடங்களுக்கு உள்ளாட்சித் தேர்தலை நடத்தி, சமத்துவப் பெருவிழா கொண்டாடியவை போன்ற எண்ணற்ற செயல்பாடுகளை இதற்கு எடுத்துக்காட்டாக இயம்ப இயலும்.
» அரசியலமைப்புச் சட்டத்தில் எந்த மதத்தைப் பின்பற்றவும் அதைப் பரப்பவும் உரிமை உண்டு: கே.எஸ்.அழகிரி
முதல்வர் தலைமையில் மாநில அளவிலான உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை நடத்தப்பட வேண்டுமென்பது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் இடம்பெற்றிருக்கும் முக்கிய விதி. இதில் முன்பெல்லாம் ஆளுங்கட்சி மக்கள் பிரதிநிதிகளையும், ஆதரவுக் கட்சி மக்கள் பிரதிநிதிகளையும் மட்டுமே அழைத்து நடத்தப்பட்ட கூட்டம்போல் இல்லாமல், அனைத்து இயக்கங்களையும் சார்ந்த நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களைக் குழு உறுப்பினர்களாக அமைத்து, ஐம்பதுக்கும் மேற்பட்ட உறுப்பினர்களை உள்ளடக்கிய அரசாணையை நாங்கள் வெளியிட்டோம். அவர்களையெல்லாம் அழைத்து ஆகஸ்ட் மாதம் 19ஆம் நாள் கூட்டம் நடத்தப்பட்டது.
அனைத்துத் தரப்புக் கருத்துகளையும் உள்ளடக்கி, ஒருங்கிணைந்த பார்வையை மக்கள் பிரச்சினைகளில் செலுத்தித் தீர்வுகாண வேண்டும் என்பதே நம்முடைய நோக்கம். பேரறிஞர் அண்ணா ‘மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு’ என்று சொல்லியதை இதயத்தில் ஏற்றி, ஏற்றுக்கொள்ளத்தக்கக் கருத்து எங்கிருந்து வந்தாலும் அதை வரவேற்றுச் செயல்படுத்தி, எளிய மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதுதான் நம்முடைய நோக்கம். அந்த அடிப்படையில், அந்தக் கூட்டத்திலே பல நல்ல கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. முதல் கட்டமாக, அவற்றில் சிலவற்றைச் செயல்படுத்த வேண்டும் என்று எண்ணி இம்மாமன்றத்தில் அறிவிக்க விரும்புகிறேன்.
அதன்படி, மாநில அளவில் ஆதி திராவிடர்கள், பழங்குடியினர் ஆகியோருடைய சட்டபூர்வமான உரிமைகளைப் பாதுகாக்கவும், அவர்களுடைய முக்கியமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும், ‘தமிழ்நாடு ஆதி திராவிடர்- பழங்குடியினர் நல ஆணையம்’ என்கிற புதிய அமைப்பு ஒன்றைத் தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்படும் வகையில் இந்த அரசு உருவாக்கச் சட்டம் இயற்றும். அதற்கான சட்டமுன்வடிவ வரைவு இந்தச் சட்டப்பேரவைத் தொடரிலேயே தாக்கல் செய்யப்படும்.
ஆதி திராவிட நலத்துறையின்கீழ் இயங்கும் பள்ளிகளின் கல்வித் தரத்தை மேம்படுத்த ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள், அறிவுத்திறன் வகுப்பு, கணினிப் பயிற்சி போன்றவை பள்ளிக் கல்வித்துறையின் வழிகாட்டுதலின்படி செயல்படுத்தப்படும். ஆனால், பள்ளிகளை நிர்வகிப்பது தொடர்ந்து ஆதி திராவிடர் பழங்குடியினர் நலத்துறையின் கைவசமே இருக்கும். பள்ளிகளில் காலிப் பணியிடங்களை நிரப்புதல், பணி அமைப்பை நிர்வகித்தல், நிர்வாகப் பணிகளைக் கையாளுதல் போன்றவற்றை அத்துறையே செயல்படுத்தும். பள்ளிக் கல்வித்துறை அவற்றில் தலையிடாது''.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago