தேர்தல் முடிவு ஆச்சரியமளிக்கக் கூடியதாக இருக்கும்: ஜி.ராமகிருஷ்ணன்

தேர்தலின் முடிவு ஆச்சரியமளிக் கக்கூடியதாக இருக்கும் என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் ஜி.ராமகிருஷ்ணன்.

திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “இதுவரை 11 நாட்கள் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பேசியுள்ள அதிமுக பொதுச்செயலரான ஜெயலலிதா தப்பித்தவறி ஒரு இடத்தில்கூட பாஜகவையும், அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியையும் விமர்சித்து பேசவில்லை.

மதவெறி, ஜாதிவெறி மற்றும் சந்தர்ப்பவாத கட்சிகளை அணிதிரட்டி பாஜக கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணியை ஏன் விமர்சிக்கவில்லை என்பதற்கு ஜெயலலிதா விளக்கமளிக்க வேண்டும். காங்கிரஸ், திமுக ஆகிய கட்சிகளை விமர்சிக்கும் அவர் பல்வேறு விஷயங்களில் அதே கொள்கைகளை பின்பற்றும் பாஜகவை விமர்சிக்காதது ஏன்?

அவர் பாஜகவுடன் ரகசிய உறவு வைத்திருக்கிறாரா என்பது குறித்து எதுவும் சொல்ல விரும்பவில்லை. போகப்போக அதிமுகவின் நிலை குறித்து அனைவருக்கும் புரியும்.

இதற்கு மேல் விளக்கமாகக் கூற இயலாது. பிப்ரவரி 25-ம் தேதி 11 கட்சிகள் ஒன்றுகூடி மத்தியில் பாஜக, காங்கிரஸ் இல்லாத ஒரு மாற்று அரசு அமைப்போம் என அறைகூவல் விட்டன. அந்த கூட்டத்தில் அங்கம்வகித்த அதிமுகவின் நிலை இப்போது என்ன என்பது குறித்து ஜெயலலிதா பதிலளிக்க வேண்டும்.

மக்கள் பிரச்சினைக்கு தீர்வு சொல்லக்கூடிய கட்சியை மக்கள் ஆதரிப்பார்கள். அந்த வகையில் இடதுசாரிகளை ஆதரிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. இந்த தேர்தலின் முடிவு ஆச்சரியமளிக் கக்கூடியதாக இருக்கும். சில தொகுதிகளில் நிச்சயம் இடதுசாரி கட்சி வேட்பாளர்கள் வெற்றிபெறு வார்கள்.

இடதுசாரி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய பிரகாஷ் காரத், பிருந்தா காரத், சீதாராம் யெச்சூரி, மாணிக் சர்க்கார் ஆகிய அகில இந்திய தலைவர்கள் தமிழகம் வருகின்றனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டி யிடாத 22 தொகுதிகளில் அந்தந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களைப் பொறுத்து தொகுதிரீதியாக யாரை ஆதரிப்பது என முடிவு செய்வோம்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE