'கடவுளை வைத்து அரசியல் நடத்த வேண்டாம் என்று அண்ணாமலைக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். அவரும் சாமியின் திருப்பெயரைக் கொண்டிருக்கிறார்' என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
நாடு முழுவதும் வரும் 10-ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இதற்கிடையில் விழாவைக் கொண்டாடப் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடக் கூடாது, ஊர்வலமாகச் சென்று நீர்நிலைகளில் விநாயகர் சிலைகளைக் கரைக்கக் கூடாது, வீடுகளில் மட்டுமே விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட வேண்டும் எனக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
அருகில் உள்ள நீர்நிலைகளில் தனிநபராகச் சென்று விநாயகர் சிலைகளைக் கரைக்கவும், கோயில்களின் சுற்றுப்புறத்திலும் வெளிப்புறத்திலும் சிலைகளை வைத்துவிட்டுச் செல்லவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இக்கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்தது.
இதற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். விநாயகர் சதுர்த்தி விழாவைக் கொண்டாட அரசு அனுமதி வழங்க வலியுறுத்தி, வரும் 10, 11, 12 ஆகிய தேதிகளில் மாநிலம் முழுவதும் ஒரு லட்சம் இடங்களில் பாஜகவினர், தலைவர்கள் வீடுகளின் வாசல்களில் விநாயகர் சிலைகளை வைத்து, பூஜை செய்து வழிபாடு செய்ய உள்ளதாகத் தெரிவித்தார்.
இதற்கிடையே சென்னை கொண்டித்தோப்பு பகுதியில் உள்ள பழனி ஆண்டவர் கோயில் மற்றும் வேதபுரீஸ்வரர் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
"வீட்டிலிருந்தே விநாயகரை வழிபட்டால் அவர்களின் கோரிக்கையை விநாயகர் கட்டாயம் ஏற்றுக்கொள்வார். இது சட்டத்தின் ஆட்சி. சட்டத்தை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது முதல்வர் நடவடிக்கை எடுக்கத் தயங்கமாட்டார்.
அரசியல் நடத்துவதற்குப் பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன. கடவுளை வைத்து அரசியல் நடத்த வேண்டாம் என்று அண்ணாமலைக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். அவரும் சாமியின் திருப்பெயரைக் கொண்டிருக்கிறார்.
இறைவனை முன்னிறுத்தி அரசியல் செய்து, அதன் வாயிலாகத் தேவையில்லாத சட்டம்- ஒழுங்கு பிரச்சினையை உருவாக்குவது, ஒன்றாக வாழுகின்ற மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும். எனவே இதுபோன்ற செயல்களில் அரசியலைக் கொண்டுவர வேண்டாம் என்று மீண்டும் ஒருமுறை கேட்டுக்கொள்கிறேன்.
யாரையும் வழிபட வேண்டாம் என்று சொல்லவில்லை. எல்லோரும் அவர்களின் வீட்டில் இருந்தே சிறப்பாக வழிபடலாம். விநாயகர் வேண்டிய கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவார். விநாயகர் அகவல் அனைவருக்கும் நன்மைகளைச் செய்யும்.
கரோனா மூன்றாவது அலை உருவாகும் சூழல் இருப்பதால், மக்கள் கூடும் வகையில் விழாக்களை நடத்தத் தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசின் உள்துறைச் செயலாளர் அஜய் பல்லா அறிவுறுத்தி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதன் அடிப்படையில்தான் தமிழக அரசு விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்துக்குக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது."
இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 mins ago
தமிழகம்
12 mins ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago