பெரியார் நடத்திய போராட்டங்கள் யாராலும் 'காப்பி' அடிக்க முடியாதவை: முதல்வர் ஸ்டாலின் பேச்சு

By செய்திப்பிரிவு

பெரியார் நடத்திய போராட்டங்கள் யாராலும் 'காப்பி' அடிக்க முடியாத போராட்டங்கள் என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் ஒவ்வொரு துறை மீதான மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று (செப். 06) சட்டப்பேரவையில் விதி எண்: 110-ன் கீழ், பெரியாரின் பிறந்த நாளான செப்.17-ம் தேதி தமிழகத்தில் சமூக நீதி நாளாகக் கொண்டாடப்படும் என, முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அப்போது, முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

"திமுக முதன்முறையாக 1967ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தபோது, 'இந்த ஆட்சியே பெரியாருக்குக் காணிக்கை' என்று அண்ணா அறிவித்தார். ஆறாவது முறை ஆட்சிக்கு வந்திருக்கும் திமுக அரசு, பெரியாரின் அறிவுச்சுடரைப் போற்றும் விதமாக, வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பு ஒன்றை விதி எண் 110-ன்கீழ் வெளியிடுவது என் வாழ்வில் கிடைத்தற்கரிய நல்வாய்ப்பு என்பதை எண்ணி மகிழ்கிறேன்.

'ஈ.வெ.ராமசாமி என்கிற நான் திராவிட சமுதாயத்தைத் திருத்தி உலகில் உள்ள மற்ற சமுதாயத்தினரைப் போல் மானமும் அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்கும் தொண்டை மேற்போட்டுக் கொண்டு அதே பணியாய் இருப்பவன். இதைச் செய்ய எனக்கு யோக்கியதை இருக்கிறதோ இல்லையோ, இந்த நாட்டில் அந்தப் பணியைச்செய்ய யாரும் வராததினால், நான் அதை மேற்போட்டுக் கொண்டு தொண்டாற்றி வருகிறேன்' என்று அறிவித்துக்கொண்டு, 95 வயது வரை மூத்திரச் சட்டியைத் தூக்கிக் கொண்டு இந்த இனத்துக்காக, நாட்டுக்காகப் போராடியவர்தான் பெரியார்.

'மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு' என்பதையே அடிப்படையாகக் கொண்டு சுயமரியாதை இயக்கம் தொடங்கிய பெரியார் மானமும் அறிவும் உள்ள மனிதர்களாக ஆக்குவதற்கு அறிவுலக ஆசானாக இந்த நாட்டை வலம் வந்தார். அவர் நடத்திய போராட்டங்கள் யாராலும் 'காப்பி' அடிக்க முடியாத போராட்டங்கள்; அவர் எழுதிய எழுத்துகள் யாரும் எழுதத் தயங்கும் எழுத்துகள்; அவர் பேசிய பேச்சுகள், யாரும் பேசப் பயப்படும் பேச்சுகள்; தமிழர் நலமெல்லாம் தன்னுடைய நலமாகக் கருதினார்; தமிழர்க்கு எதிரானது எல்லாவற்றையும் தனது எதிரியாகக் கொண்டு எதிர்த்திருக்கிறார். அவர் நடந்த நடை, அவர் நடத்திய சுற்றுப்பயணங்கள், அவர் நடத்திய மாநாடுகள், அவர் நடத்திய போராட்டங்களைச் சொல்லத் தொடங்கினால், இந்த அவையையே பத்து நாட்களுக்கு ஒத்திவைத்துப் பேச வேண்டும்.

'மனிதனுக்கு மனிதன் ஏற்றத் தாழ்வு இல்லை; ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானம்' - இவை இரண்டும்தான் அவரது அடிப்படைக் கொள்கைகள். சாதி ஒழிப்பு, பெண்ணடிமைத்தனம் ஒழிப்பு ஆகிய இரண்டும்தான் அவரது இலக்குகளாக இருந்திருக்கின்றன. அந்த இரண்டுக்கும் எவையெல்லாம் தடையாக இருக்குமோ, அவை அனைத்தையும் கேள்வி கேட்டார்; அறிவியல்பூர்வமாகக் கேள்வி கேட்டார்; தன்னைப் போலவே சிந்திக்கத் தூண்டினார்.

அவரது சுயமரியாதைச் சிந்தனையால் தமிழினம் சுயமரியாதைச் சிந்தனையைப் பெற்றது; அவர் உருவாக்கிய பகுத்தறிவின் கூர்மையால் தமிழினம் சிந்தனைத் தெளிவு பெற்றது. சாதியால் அடக்கி ஒடுக்கப்பட்ட மனிதர்கள் கல்வி, வேலைவாய்ப்பில் மேன்மையை அடைவதற்கான சமூக நீதிக் கதவைத் திறந்து வைத்தது அவரது கைத்தடியே ஆகும். தமிழகத்துக்கு மட்டுமல்ல; இன்று இந்தியா முழுமைக்கும் சமூக நீதிக் கருத்துகள் விதைக்கப்பட்டுள்ளன என்றால், அதற்கு அவர் போட்ட அடித்தளமே காரணம்.

நாடாளுமன்றத்தின் வாசலுக்கே போகாத அவரால்தான் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் முதல் முதலாகத் திருத்தம் செய்யப்பட்டது. சட்டப்பேரவைக்குள் வர ஆசைப்படாத அவரது சிந்தனை கொண்ட சட்டங்கள் ஏராளமாக இந்த அவையில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. தனது சிந்தனையை அடுத்தவர் மூலமாகச் செய்ய வைக்கும் அபூர்வமான ஆற்றல் அவருக்குத்தான் இருந்தது.

'என் வாழ்வில் வசந்த காலம் என்பது பெரியாரோடு நான் இளைஞராக இருந்து வலம் வந்த காலம்தான்' என்று நம்மையெல்லாம் உருவாக்கிய அண்ணா சொன்னார்.

'பாராட்டிப் போற்றி வந்த பழமை லோகம்

ஈரோட்டுப் பூகம்பத்தால் இடியுது பார்'

என்று எழுதினார் கருணாநிதி.

அண்ணாவும் கருணாநிதியும் உருவான குருகுலம் பெரியாருடைய குருகுலமாகும். இந்தக் குருகுலத்துப் பயிற்சிதான் திமுகவை உருவாக்கி, அரசியல் புரட்சிகரக் கருத்துகளைத் தமிழகத்தில் விதைத்து, ஆட்சிக்கு வந்து அதே கொள்கையை நிறைவேற்றி வரும் அந்தக் காட்சியை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.

இது உலகில் எந்த சீர்திருத்த இயக்கத்துக்கும் கிடைக்காத புகழாகும். சீர்திருத்தவாதிகள் பேசிவிட்டுப் போயிருப்பார்கள்; ஆட்சியாளர்களுக்கு அதன் வாசனையே இருக்காது. தமிழகத்தில் மட்டும்தான் ஒரு சீர்திருத்த இயக்கம், அரசியல் இயக்கமாக மாறி, அந்த இயக்கம் சீர்திருத்தக் கருத்துகளை நடைமுறைப்படுத்தி, சட்டமாகவும் ஆக்கி அந்தச் சமுதாயத்தை மேன்மை அடைய வைத்திருக்கிறது.

அவரால் கல்வி பெற்றவர்கள், அவரால் வேலைவாய்ப்பைப் பெற்றவர்கள், அவரால் அதிகாரத்தைப் பெற்றவர்கள், அவரால் பெண்ணினம் அடைந்த வளர்ச்சிகள், ஒடுக்கப்பட்ட மக்கள் அடைந்த எழுச்சிகள் ஆகியவற்றுக்கு இன்றைய தமிழகமே சாட்சி. இந்த விதை பெரியார் போட்ட விதை; அண்ணா அதற்கு எருவூட்டினார்; கருணாநிதி வளர்த்தார். அதனை மாபெரும் விருட்சமாகக் காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.

சுயமரியாதை, பகுத்தறிவு, சமதர்மம், சமூக நீதி, இன உரிமை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட கொள்கையைப் பெரியார் உருவாக்கினார். அதுதான் கடந்த நூற்றாண்டில் இந்தச் சமூகத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டது; எதிர்காலத்துக்குப் பாதை அமைத்துத் தரப்போகிறது.

இந்த உணர்வை, உணர்ச்சியை, எழுச்சியை, சிந்தனையை விதைக்கும் அடையாளமாக பெரியார் பிறந்த செப்டம்பர் 17ஆம் நாளை ஆண்டுதோறும் 'சமூக நீதி நாள்' ஆகக் கொண்டாடுவது என்று தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. பெரியாரின் அறிவு வெளிச்சத்தில் வளர்ந்த நாம், நமது நன்றியின் அடையாளமாக இந்த நாளைக் கொண்டாடுவோம்; சாதிய ஏற்றத் தாழ்வுகள், தீண்டாமைக் கொடுமைகளை, மத வேறுபாடுகளை உதறித் தள்ளுவோம்; பெண்களைச் சமநிலையில் மதிப்போம். அந்த எண்ணத்தை விதைக்கும் விதமாக இந்த உறுதிமொழியைத் தயாரித்துள்ளோம். ஆண்டுதோறும் செப்டம்பர் 17 ஆம் நாளன்று தலைமைச் செயலகம் தொடங்கி, அனைத்து அரசு அலுவலகங்களிலும் கீழ்க்கண்ட உறுதிமொழியை அனைவரும் எடுத்துக் கொள்வோம்.

'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியும் -

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பு நெறியும்

எனது வாழ்வியல் வழிமுறையாகக் கடைப்பிடிப்பேன்!

சுயமரியாதை ஆளுமைத் திறனும்-பகுத்தறிவுக் கூர்மைப் பார்வையும் கொண்டதாக என்னுடைய செயல்பாடுகள் அமையும்!

சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை நான் ஒப்படைத்துக் கொள்வேன்!

மானுடப் பற்றும் மனிதாபிமானமும் ஒன்றே எனது ரத்த ஓட்டமாக அமையும்!

சமூக நீதியையே அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைக்கும் எனது பயணம் தொடர இந்த நாளில் உறுதியேற்கிறேன்!' என்ற உறுதிமொழியை எடுத்துக்கொள்வோம்.

பெரியார் மறைந்தபோது, 'பெரியார் தனது சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டார், நாம் தொடர்வோம்' என்றார் அன்றைய முதல்வர் கருணாநிதி. எனவே, நாம் தொடர்வோம்".

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

24 mins ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்