ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் பாலாற்றுப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற் பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் பாலாற்று கரை யோரம் வசிக்கும் கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு தண்டோரா மூலம் அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும், வெப்பச்சலனம் காரணமாகவும் வட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
அதேபோல, ஆந்திர மாநில வனப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் சித்தூர் மாவட்டத்தில் உள்ள ‘கலவகுண்டா அணை’ முழுமையாக நிரம்பிதால் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அடுத்த பொன்னை அணைக்கட்டு பகுதிக்கு நேற்று காலை 7.30 மணி நிலவரப்படி 2,600 கன அடியாக நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதனால், ராணிப்பேட்டை மாவட்டத்தையொட்டியுள்ள பாலாற்றுப் பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பாலாற்றையொட்டியுள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள், தாழ்வானப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாது காப்பான இடங்களுக்கு செல்லு மாறு மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் அறிவுறுத்தலின் பேரில், தண்டோரா மூலம் வருவாய்த் துறையினர் நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
மேலும், கீரைசாத்து, சீக்க ராஜபுரம், தெங்கால், காரை, திருமலைச்சேரி, பூண்டி, குடி மல்லூர், லாலாப்பேட்டை, நரசிங்கபுரம், ஏகாம்பரநல்லூர், கொண்டகுப்பம், மருதம்பாக்கம், புதுப்பாடி, முப்பதுவெட்டி, சக்கரமல்லூர், சாத்தம்பாக்கம், ஆற்காடு, மேல்விஷாரம் உள்ளிட்ட பகுதிகளையொட்டி யுள்ள பாலாற்றுப் பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதை காண அப்பகுதி மக்கள் பாலாற்றுப் பகுதியில் நேற்று குவிந்தனர். சிலர் பாலாற்று நீரில் இறங்கி குளித்தனர்.
பாலாற்று நீரில் மக்கள் கூட்டம் அதிக அளவில் குவிந்து வருவதை அறிந்த வருவாய்த் துறையினர் பாலாற்றில் யாரும் இறங்கி குளிக்கவோ, வேடிக்கை பார்க்கவோ கூடாது என தண்டோரா மூலம் நேற்று அறிவிப்பு வெளியிட்டனர்.
இதற்கிடையே, ஆற்காடு வட்டம் புதுப்பாடி உள்வட்டம், புதுப்பாடி கிராமத்தில் உள்ள பாலாற்று அணைக்கட்டில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் நேற்று பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.
பாலாற்று அணைக்கட்டில் இருந்து மகேந்திரவாடி ஏரிக்கு 122 கனஅடி நீரும், காவேரிப்பாக்கம் ஏரிக்கு 818 கன அடி நீரும், சக்கரமல்லூர் ஏரிக்கு 73 கன அடி நீரும், தூசி ஏரிக்கு 409 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளை பொதுப் பணித்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
வேலூர்
வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவும், நேற்று அதிகாலையும் பரவலாக மழை பெய்தது. நேற்று காலை முதல் வானம் இருண்டு காணப்பட்டது. நேற்று பகல் 1.40 மணியளவில் வேலூர், சத்துவாச்சாரி, காட்பாடி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. வேலூர் மட்டுமின்றி, அணைக்கட்டு, குடியாத்தம், பள்ளிகொண்டா, கே.வி.குப்பம், பொன்னை உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்தது. குடியாத்தம் அடுத்த மோர்தானா அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் மோர்தானா அணை வேகமாக நிரம்பி வருகிறது.
அதேநேரத்தில், மோர்தானா அணைக்கு நீராதாரமாக விளங்கும் ஏரிகள், சிறு தடுப்பணைகள் தற்போது நிரம்பி வருகின்றன.
அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் 4 அல்லது 5 நாட்களில் மோர்தானா அணை நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு பெய்த கனமழையால் மோர்தானா அணை முழுமையாக நிரம்பியது. இந்நிலையில், தற் போது பெய்து வரும் தொடர் மழையால் விரைவில் மோர்தானா அணை நிரம்பும். அதன் மூலம் விவசாயம், குடிநீர் போன்ற தேவைகளுக்கு தண்ணீர் திறந்து விடப்படும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
மோர்தானா அணை வேகமாக நிரம்பி வருவதை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அணை நிரம்பி வருவதை அறிந்த குடியாத்தம் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் அணையின் நீர் மட்டத்தை காண அங்கு குவிந்து வருகின்றனர்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாகவே தொடர் மழை பெய்து வருகிறது. அதன்படி நேற்று முன்தினமும், நேற்று காலையும் ஒரு சில இடங்களில் மழை கொட்டித்தீர்த்தது. வாணியம்பாடி, வடபுதுப்பட்டு, ஆம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. வாணியம்பாடி அடுத்த வடச்சேரி கிராமத்தில் நேற்று பகல் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் சாலையோரம் இருந்த மரங்கள் முறிந்து அங்குள்ள மின்கம்பிகள் மீது விழுந்ததில் அங்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும், மின்வாரிய ஊழியர்கள் அங்கு விரைந்து சென்று அறுந்து விழுந்த மின்கம்பிகளை ஒரு மணி நேரத்தில் சரி செய்தனர். அதன்பிறகு அங்கு மின் விநியோகம் வழங்கப்பட்டது.
மேலும், தமிழக-ஆந்திர எல்லைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் வாணி யம்பாடியையொட்டியுள்ள பாலாற்றுப்பகுதிகளில் நீர்வரத்து காணப்படுகிறது. தொடர் மழையால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி பதிவான மழையளவு விவரம்:
குடியாத்தம் 6 மி.மீ., காட்பாடி 13.5, மேல் ஆலத்தூர் 13.4, பொன்னை 21.6 என மொத்தமாக 95.8 மி.மீ., மழையளவு பதிவாகி யிருந்தன. ஆற்காடு 6.4 மி.மீ., காவேரிப்பாக்கம் 28, வாலாஜா 5.4, அம்மூர் 12.4, கலவை 15.2, என மொத்தம் 67.4 மி.மீ., அளவு மழையளவு பதிவாகியிருந்தன. ஆலங்காயம் 2 மி.மீ., ஆம்பூர் 14.8, வடபுதுப்பட்டு 23.6, கேத்தாண்டப்பட்டி 4, நாட்றாம்பள்ளி 8.2, வாணியம்பாடி 6, திருப்பத்தூர் 5.1, என மொத்தமாக 63.7 மி.மீ., மழையளவு பதிவாகி யிருந்தன.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
36 mins ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago