பஞ்சுக்கான 1% நுழைவு வரி ரத்து: பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

வெளிமாநிலத்திலிருந்து தமிழகத்துக்குக் கொண்டுவரப்படும் பஞ்சுக்கான 1% நுழைவு வரி ரத்து செய்யப்படுவதாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று (செப். 04) முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

"நெசவாளர்களின் நலனுக்காகப் பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தியது திமுக அரசு. அதன் தொடர்ச்சியாக, நெசவுத்தொழிலை நம்பியிருக்கும் நெசவாளர்கள், சிறு, குறு நிறுவனங்களின் நன்மையைக் கருத்தில் கொண்டு முக்கிய அறிவிப்பினை 110 விதியின்கீழ் வெளியிடுகிறேன்.

இந்தியத் துணித் தொழில் வணிகத்தில் மூன்றில் ஒரு பங்கே தமிழ்நாடு துணி தொழில் வகிக்கிறது. தமிழகத்தில் உள்ள நூற்பாலைகளின் எண்ணிக்கை 1,570. இவ்வாலைகள் மூலம் நூற்கப்படும் நூல் இந்நாட்டின் மொத்த நூற்புத்திறனில் 45%. தமிழகத்தில் அமைந்துள்ள நூற்பாலைகளுக்குத் தேவையான பஞ்சின் அளவில் 95% பிற மாநிலத்திலிருந்து கொண்டுவரப்படுகிறது.

தமிழ்நாடு வேளாண் பொருட்கள் விற்பனை ஒழுங்குமுறைச் சட்டம் 1987 பிரிவு - 24 இன்படி, பஞ்சு மற்றும் கழிவுப்பஞ்சின் விற்பனை மதிப்பு மீது சந்தை நுழைவு வரியாக 1% விதிக்கப்படுகிறது. மேற்படி சட்டத்தின்படி பருத்தி, பஞ்சு மற்றும் கழிவுப் பஞ்சு ஆகியவை வேளாண் பொருட்களாகக் கருதப்பட்டு, சந்தைகளில் கொள்முதல் அல்லது விற்பனை செய்யப்படும் போது 1% சந்தை நுழைவு வரி விதிக்கப்படுகிறது.

சந்தை நுழைவு வரி என்பது, பருத்தி மீது மட்டுமே விதிக்கப்பட வேண்டும். மாறாக, பஞ்சு மற்றும் கழிவுப் பஞ்சு ஆகிய உற்பத்திப் பொருட்கள் மீது 1% நுழைவு வரி விதிக்கப்படுகிறது. இதனால், வெளிமாநிலங்களிலிருந்து பஞ்சு கொள்முதல் செய்யப்படும்போது சிறு, குறு நூற்பாலைகள் போக்குவரத்துக் கட்டணம் செலுத்துவதில் பெரும் நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

பஞ்சின் மீது விதிக்கப்படும் சந்தை நுழைவு வரியை நீக்க வேண்டும் என்பது, தொழில் முனைவோர் மற்றும் நெசவாளர்களின் நெடுநாள் கோரிக்கையாக உள்ளது. இதனால், மாநிலத்தில் இந்திய பருத்திக் கழகம் பஞ்சு நூல் விற்பனையை மேற்கொள்ளும்போது நூற்பாலைகள் பெரிய அளவிலான பஞ்சு இருப்பினைப் பராமரிக்க வேண்டியதில்லை.

ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் நெசவாளர்களுடன் நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டங்களில் இவ்வரி நீக்கப்பட வேண்டும் என்பதனை தங்கள் கோரிக்கையாக தெரிவித்தனர். இதனைக் கருத்தில் கொண்டு, தொழில் முனைவோர் மற்றும் நெசவாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, பஞ்சு மீதான 1% சந்தை நுழைவு வரி ரத்து செய்யப்படுகிறது. இதற்கான உரிய சட்டத்திருத்தம் இந்தக் கூட்டத்தொடரில் கொண்டு வரப்பட இருக்கிறது".

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

14 mins ago

தமிழகம்

22 mins ago

தமிழகம்

29 mins ago

தமிழகம்

39 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்