அம்மாவுக்குப் பிடித்ததை அவரின் படத்துக்குப் படைத்துவிட்டு வெறுமையுடன் உள்ளேன்: தமிழிசை உருக்கம்

By செய்திப்பிரிவு

பாசத்துடன் அம்மாவுக்குப் பிடித்ததை கை நிறைய வாங்கிச் செல்லும் நான், இன்று அம்மாவின் படத்துக்குப் படைத்துவிட்டு வெறுமையுடன் உள்ளேன் எனத் தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

தமிழிசையின் தாயார் கிருஷ்ணகுமாரி சமீபத்தில் காலமானார். அவரின் 16-ம் நாள் சடங்கை தெலங்கானா ராஜ்பவனில் ஆளுநர் தமிழிசை நடத்தியுள்ளார்.

அதுபற்றி ஆளுநர் தமிழிசை இணையத்தில் இன்று (செப். 03) பகிர்ந்துள்ள பதிவு:

"அம்மாவின் 16-ம் நாள் சடங்கை நேற்று தெலங்கானா ராஜ்பவனில் நடத்தினோம். 16 நாட்களுக்கு முன்பு இருந்த அம்மா இன்று இல்லை. 'இசை'... 'இசை'... 'இசை'... என்றுதான் என்னை அம்மா அழைப்பார். எங்கு திரும்பினாலும் 'இசை' என்று என்னை அழைப்பது போலவே இருக்கிறது.

ஒவ்வொருமுறை தெலங்கானா ராஜ்பவன் செல்லும்போதும் அம்மாவுக்கு அது பிடிக்கும், இது பிடிக்கும் என்று பாசத்துடன் பிடித்ததைக் கை நிறைய வாங்கிச் செல்வேன். ஆனால், அம்மாவுக்குப் பிடித்ததை அம்மாவின் படத்துக்கு முன்னால் வைத்துவிட்டு வந்திருக்கின்றேன்.

பாசத்துடன் அம்மாவுக்குப் பிடித்ததைக் கை நிறைய வாங்கிச் செல்லும் நான், அம்மாவின் படத்துக்குப் படைத்துவிட்டு வெறுமையுடன் வந்திருக்கின்றேன். குடும்பத்தில் அனைவரும் கலகலப்பாக இருந்தால் அம்மாவுக்குப் பிடிக்கும். எல்லோரும் இருந்தோம், ஆனால், அதைக் கண்டு ரசிக்க அம்மா இல்லை.

என்னை 'பெத்த' அம்மாவை தெலங்கானா ராஜ்பவன் ஊழியர்கள் அனைவரும் தெலுங்கில் 'பெத்தம்மா', 'பெத்தம்மா' (பெரியம்மா) என்று அழைப்பார்கள். அவர்களுக்கு அன்புடன் எதைக் கொடுத்தாலும் அம்மாவுக்குப் பிடிக்கும்.
அம்மாவின் நினைவாக ராஜ்பவன் குடும்பமே அவர்கள் படத்துக்கு முன்னால் நிற்கிறது. பார்த்து மகிழ்வதற்கு அம்மா இல்லை.

அம்மா ராஜ்பவன் ஊழியர்களின் ஒவ்வொருவரின் பெயரைச் சொல்லி அவருக்கு அதைக் கொடு, இவருக்கு இதைக் கொடு என்பார். அம்மாவின் நினைவாக அனைவருக்கும் உணவளித்தோம், உடையளித்தோம், பணமளித்தோம். அளித்ததைக் கண்டு மகிழ்வதற்கு அம்மா இல்லை.

அம்மா விரும்பி மெதுவாக நடக்கும் ராஜ்பவன் தோட்டத்தில் படையலுக்காக நாங்கள் நடந்தோம். எங்களுடன் நடக்க அம்மா இல்லை. ராஜ்பவன் தோட்டத்து மயில்களும், புறாக்களும் நாங்கள் கொடுக்கும் தானியங்களை உண்டால் அதைக் கண்டு அம்மா மகிழ்ந்து போவார். அவர் நினைவாக தானமாக வைத்ததை மயில்களும், புறாக்களும் சாப்பிடுகின்றன. அதைக் கண்டு மகிழ்வதற்கு அம்மா இல்லை.

'இசை' எப்போதும் அழக்கூடாது என்று அம்மா சொல்லும் குரல் கேட்கின்றது. தங்கைகளும், தம்பியும் நான் அழுவதைப் பார்த்து அழுகிறார்கள். ஆனால், 'இசை' நீ எல்லோரையும் விடப் பெரியவள், அவர்களை அழ வைக்கக் கூடாது என்று அம்மா சொல்வதும் கேட்கிறது.

பணியாளர்களையும் ஊழியர்களையும் பார்க்க பார்க்க 'இசை' அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்ய வேண்டும் என்று சொன்ன அம்மாவின் குரலும் கேட்கின்றது.

அம்மாவுக்குப் பிடித்ததையெல்லாம் படைக்க படைக்க 'இசை' நீ சாதனை படைக்க வேண்டும் என்ற அம்மாவின் குரலே ஓங்கிக் கேட்கிறது. 'இசை'... 'இசை'... என்று நீங்கள் அன்று அழைத்தது காதில் ஒலித்தது. இன்று அந்த 'இசை' காற்றில் ஒலிக்கிறது.

உங்களுக்கு விரும்பியதை மட்டும் நான் படைக்கவில்லை. நீங்கள் விரும்பிய சாதனையையும் படைப்பேன் என்ற உறுதியோடு உங்கள் விருப்பப்படியே சடங்குகளை முடித்துவிட்டு தெலங்கானா அலுவல் வேலைகளையும் முடித்துவிட்டு அம்மாவுக்குப் பிடித்த அம்மாவாரு கோயிலுக்குச் சென்றோம்.

அங்கேயும் அம்மா வருவாரா என்று கண்கள் தேடுகின்றன. தெலங்கானாவிலிருந்து புறப்பட்டு 48 மணி நேரத் தொடர் தடுப்பூசி திருவிழாவினைப் புதுச்சேரியில் தொடங்கி வைக்கப் புறப்பட்டேன். காதில் ஒலித்த அந்த ’இசை’ காற்றில் ஒலித்துக்கொண்டு இருக்கின்றது. 'இசை'... 'இசை'... 'இசை".

இவ்வாறு தமிழிசை பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்