இட ஒதுக்கீடு போராளிகள் 21 பேருக்கு விழுப்புரம் மாவட்டத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும் என, முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று (செப். 02) முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
"சமூக நீதியின் தாய்மடியாக விளங்கக்கூடிய மாநிலம் தமிழகம். வகுப்புரிமை, வகுப்புவாரி உரிமை, இட ஒதுக்கீடு, சாதிரீதியான இட ஒதுக்கீடு என எந்தப் பெயரைச் சொல்லி அழைத்தாலும் அதனை சமூக நீதி என்ற ஒற்றைச் சொல் கொடுக்கும் பொருளை வேறு எந்தச் சொல்லும் தருவது கிடையாது.
சமூக நீதிக் கொள்கைதான் திராவிட இயக்கம் இந்த தமிழ்ச் சமுதாயத்துக்குக் கொடுத்த மாபெரும் கொடையாகும். தமிழகத்துக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கே அந்தத் தத்துவத்தை திராவிட இயக்கம் கொடையாக வழங்கியது. வகுப்புரிமை எனும் இட ஒதுக்கீடு உரிமையை 100 ஆண்டுகளுக்கு முன் நடைமுறைக்குக் கொண்டுவந்தது நீதிக்கட்சிதான்.
» வெளிநாட்டில் மருத்துவப் படிப்பு; தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவு தகர்ந்துவிடக் கூடாது: மநீம
மூடப்பட்டுக் கிடந்த கல்வி, வேலைவாய்ப்பு, அதிகாரப் பதவிகள் அனைத்தும், அதன் மூலம் அனைவருக்கும் கிடைத்தது. சுதந்திர இந்தியாவில் அதற்கு இடர்ப்பாடுகள் வந்தபோது பெரியாரும் அண்ணாவும் இரட்டைக் குழல் துப்பாக்கியாக இருந்து போராட்டத்தை முன்னெடுத்தனர்.
அந்தப் போராட்டம் இந்தியத் துணைக்கண்டத்தையே கவனிக்க வைத்தது. காமராஜர், அன்றைக்கு பிரதமராக இருந்த நேருவிடம் வலியுறுத்தியதன் காரணமாக, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் செய்யப்பட்டது. தமிழகத்தின் சமூக நீதிக் கொள்கைக்கு இந்திய அரசியலமைப்புச் சட்ட அங்கீகாரம் கிடைத்தது.
அப்படி சமூக நீதியை அடையப் பல்வேறு போராட்டங்களை நடத்திய இயக்கம்தான் திராவிட இயக்கம். பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவர், பழங்குடியினர் ஆகியோருக்கான இட ஒதுக்கீட்டை உறுதிப்படுத்தியதும், காலத்தின் தேவைக்கேற்ப அளவு மாற்றத்தைப் பெற்றுத் தந்ததும், கடந்த அரை நூற்றாண்டு கால சரித்திரச் சான்றை மறைக்க முடியாத சாசனமாக அமைந்திருக்கிறது.
சமூக நீதிக்கான போராட்டத்துக்கான தொடர்ச்சியான வரிசையில் 1987-ம் ஆண்டு நடைபெற்ற 20% தனி இட ஒதுக்கீடு கோரி வட தமிழகத்தில் நடந்த போராட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது. அந்தப் போராட்டத்தில் அன்றைய அரசின் காவல்துறை துப்பாக்கிச் சூட்டுக்கு பலியானவர்கள் 21 பேர்.
சமூக நீதிப் போராளிகளான அவர்களின் உயிர் தியாகத்துக்கும் போராட்டத்துக்கும் நியாயம் வழங்கிடும் வகையில், 1989-ம் ஆண்டு அமைந்த கருணாநிதி அரசு, இந்தியாவிலேயே முதன்முறையாக மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்ற பிரிவை அமைத்துக் கொடுத்து அவர்களுக்கு 20% இட ஒதுக்கீட்டை வழங்கி கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் சம அந்தஸ்தை ஏற்படுத்திக் கொடுத்தது. அவர்களின் முன்னேற்றத்துக்கான பாதையை வகுத்துத் தந்தது திமுக அரசு.
சமூக நீதிக் கொள்கையின் தொடர்ச்சியாக கருணாநிதி வழியில் செயல்படக்கூடிய திமுக அரசு, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்தின் 20% இட ஒதுக்கீட்டில் வன்னியர் சமுதாயத்தினருக்கு 10.5% இட ஒதுக்கீட்டை சட்டப்பூர்வமாக நடைமுறைப்படுத்தியுள்ளது.
ஒடுக்கப்படும் சமுதாயம் எதுவாக இருந்தாலும், அதன் உரிமைகள் காக்கப்பட வேண்டும், மீட்கப்பட வேண்டும், என்பதே திமுக அரசின் உயர்ந்த நோக்கமாகும். அத்தகைய தியாகிகளின் பங்களிப்பினை நினைவுகூர்ந்து, 1987-ம் ஆண்டு இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் காவல்துறை துப்பாக்கிச் சூட்டுக்கு பலியான 21 சமூக நீதிப் போராளிகளின் தியாகத்தை மதிக்கும் வகையில், ரூ.4 கோடி மதிப்பீட்டில் விழுப்புரம் மாவட்டத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும்.
இது விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நான் அளித்த வாக்குறுதி. யார் மறந்தாலும் நிச்சயம் நான் மறக்கவில்லை. 'நான் சமுதாயத்தின் பின்தங்கிய வகுப்பைச் சார்ந்தவன். மிகவுன் பின்தங்கிய வகுப்பினர் பட்டியலில் என் வகுப்புக்கு ஒரு இடமுண்டு. நான் முதல்வர் பொறுப்பை ஏற்றுக்கொண்டிருப்பதால், பின்தங்கிய வகுப்பினர் நலனுக்காக என் உயிரையும் பணயம் வைத்துப் போராடுவேன்' என்று சட்டப்பேரவையில் கருணாநிதி சொன்ன உறுதிமொழியை ஏற்றுக்கொண்டதன் அடையாளம்தான் இந்த அறிவிப்பு".
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago