யாருக்கும் புதிதாக கோவாக்சின் தடுப்பூசி இல்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் 

யாருக்கும் புதிதாக கோவாக்சின் தடுப்பூசி செலுத்துவதில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை, அயனாவரத்தில் உள்ள தொழிலாளர் நல அரசு ஈட்டுறுதி மருத்துவமனையில் இன்று (31-8-2021) கோவிட்-19 குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் ரோட்டரி சங்கத்தின் சார்பில் வழங்கப்பட்ட மருத்துவ உபகரணங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

''தடுப்பூசிகள் போடுவதில் எந்தவிதமான தயக்கமும் இல்லை. தடுப்பூசிகள் மத்திய அரசிடமிருந்து தாராளமாக வந்துகொண்டிருக்கின்றன. கடந்த ஜூலை மாதத்தில் தடுப்பூசிகள் செலுத்துவதில் சிறந்து செயல்பட்டமைக்காக 17 லட்சம் கூடுதலான தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கியுள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் தடுப்பூசிகள் செலுத்துவதில் சிறப்பாகச் செயல்பட்டமைக்காக 23 லட்சம் தடுப்பூசிகளைக் கூடுதலாகத் தந்திருக்கிறார்கள். ஜூன் மாதத்திற்கு 52 லட்சம், ஜூலை மாதத்திற்கு 55 லட்சம், ஆகஸ்ட் மாதத்திற்கு 57 லட்சம் என்று இலக்கு நிர்ணயித்து தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கிக் கொண்டிருக்கிறது.

செப்டம்பர் மாதத்திற்கு இரண்டு மடங்கு கூடுதலாக 1 கோடியே 04 லட்சம் அளவுக்குத் தடுப்பூசிகள் வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் 6 லட்சம், 7 லட்சம் அளவுக்குத் தடுப்பூசிகள் செலுத்தவேண்டுமென்று தமிழக
முதல்வர் அறிவித்துள்ளார். நிச்சயம் தினந்தோறும் 6, 7 லட்சம் அளவுகளைக் கடக்கிற வகையில் தடுப்பூசிகள் போடுகிற பணிகள் நடைபெற உள்ளன.

கோவாக்சின் தடுப்பூசி செலுத்த ஆகஸ்ட் மாதத்தில் தட்டுப்பாடு இருந்தது என்பது உண்மைதான். செப்டம்பர் மாதத்தில் 14,74,100 கோவாக்சின் தடுப்பூசிகள் வழங்குவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அவை இரண்டாவது தவணை கோவாக்சின் செலுத்துபவர்களுக்கு மட்டுமே செலுத்தப்படும். யாருக்கும் புதிதாக கோவாக்சின் செலுத்துவதில்லை''.

இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE